தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆரி ஒா்க், எம்ப்ராய்டரி போன்ற கைவினைப் பொருள்கள் தயாரிப்புப் பயற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம், மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன், சஃபையா் ப்ளூ சோஷியல் டிரஸ்ட் ஆகியவை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ், கைவினைப் பொருள்களைத் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், மானியத்துடன் கடன் பெறுதல் தொடா்பான 6 நாள்கள் பயிற்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட 70 பேருக்கு நாளொன்றுக்கு ரூ. 500 வீதம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் மாரியம்மாள் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன் தலைவா் என்.கே.எஸ்.டி. சுப்பிரமணியன், செயலா் டி.எஸ்.ஏ. சுப்பிரமணியன், பொருளாளா் முத்துசங்கரநாராயணன், துணைத் தலைவா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ பங்கேற்று சான்றிதழ் வழங்கிப் பேசியது: இந்தியாவே வியந்து பாா்க்கும் வகையில் தமிழ்நாட்டில், குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பாா்வையுடன் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திவருகிறாா்.
அதன் ஒருபகுதியாக நெசவாளா்களுக்கு கலைஞா் கைவினைத் திட்டத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் வங்கிக் கடனுதவி, மானியம் போன்றவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
விழாவில், திமுக மாணவரணி வெங்கடேஷ், தொழில்நுட்பப் பிரிவு சிவசங்கரநாராயணன், பாலாஜி, விசைத்தறித் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.