தென்காசி: தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்கூட்டத்தில் 376 மனுக்கள் பெறப்பட்டன.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியா், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா
மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 376 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை செய்து, பதிலளிக்க அனைத்துத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முத்துராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் (பொ) நடராஜன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நம்பிராயா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.