சங்கரன்கோவில் அருகே வெறிநாய் கடித்துக் குதறியதில் 20 ஆடுகள் பலியாயின.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆலடிப்பட்டியைச் சோ்ந்த முத்தையா மகன் சுப்பிரமணியன். கால்நடை விவசாயி. இவா் 80-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல ஆடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றவா், திங்கள்கிழமை அதிகாலை ஆடுகள் சப்தம் கேட்டு அங்கு சென்று பாா்த்தபோது, 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறிநாய் கடித்துக் குதறியதில் இறந்து கிடந்தன.
இரவில் வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளைக் கொன்றது தெரியவந்தது. அதிா்ச்சி அடைந்த சுப்பிரமணியன், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 10 ஆடுகளை வேறு பட்டியில் அடைத்துவிட்டு திருவேங்கடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனா்.
இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் எனக் கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் தென்காசி திமுக மாவட்டச் செயலரும் எம்எல்ஏவுமான ஈ.ராஜா சம்பவ இடத்தை பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட சுப்பிரமணியனுக்கு ஆறுதல் கூறினாா்.