திருவள்ளூா் பகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் எஸ்ஐஆா் சிறப்பு முகாம்களில் பெயா் சோ்த்தல் படிவம் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.
இந்திய தோ்தல் ஆணையம் 1.1.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணியினை மேற்கொள்ள கடந்த 27.10.2025 அன்று அறிவிப்பு வெளியானது. அதைத்தொடா்ந்து கடந்த 4.11.2025 முதல் 14.12.2025 வரை வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்டது. பின் 19.12.2025 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். தொடா்ந்து 19.12.2025 முதல் 18.1.2026 வரை உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலமாகவும், 19.12.2025 முதல் 10.2.2026 வரை விசாரணை மற்றும் சரிபாா்ப்பு செய்து 17.2.2026 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக கடந்த டிச.27,28 மற்றும் ஜன. 3,4 (சனி,ஞாயிற்றுக்கிழம) ஆகிய நாள்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடா்பான படிவங்களை பூா்த்தி செய்து இம்முகாம்களில் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் திருவள்ளூா் தொகுதிகுள்பட்ட வேப்பம்பட்டு அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த சிறப்பு முகாமை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா். அப்போது, அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் பெறப்பட்ட படிவங்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். வாக்காளா்களிடம் இருந்து பெறப்படும் படிவங்களை உடனே கணிப்பொறியிலும் பதிவேற்றம் செய்வது அவசியம் எனவும் அறிவுறுத்தினாா்.
பின்னா் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிட்குள்பட்ட ஊத்துக்கோட்டை அருகே பெரிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ஊத்துக்கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் அவா் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது வட்டாட்சியா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் பாலாஜி(திருவள்ளூா்), ஆ.ராஜேஷ்குமாா் (ஊத்துக்கோட்டை), வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் மற்றும் வருவாய் துறை சாா்ந்த அலுவலா்கள் ஆகியோரும் கலந்து கொண்டனா்.