தமிழகம், புதுவையில் வரலாறு காணாத வகையில் கடந்த 4 மாதங்களில் சமையல் எண்ணெய் வகைகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்களின் விலை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. தேர்தல் முடிந்த பிறகுதான் விலையேற்றம் ஒரு முடிவுக்கு வரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பாமாயில் பயிர் விளைச்சல் பாதிப்பு:
விலை உயர்வு குறித்து புதுவை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த எண்ணெய் உற்பத்தி, இறக்குமதியாளர்கள் பி.ஹரிஹரன், ஜி.ஆர்.தாமோதர் ஆகியோர் கூறியதாவது:
உள்நாட்டு சமையல் எண்ணெய் வகைகளின் உற்பத்தி மூலம் மக்களின் தேவையை ஈடுசெய்ய முடியாததால், மலேசியாவிலிருந்து இந்தியா அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறது. கடந்தாண்டு மழை காரணமாக மலேசியாவில் பாமாயில் பயிரின் விளைச்சல் குறைந்து, பாமாயிலின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. தற்போது உலகளவில் பாமாயிலின் தேவை அதிகரிப்பை சமாளிக்க முடியாமல், விலை உயர்ந்து வருகிறது.
இதேபோல, கலப்பு விதைகளை பயன்படுத்தியதால், அர்ஜெண்டினா, பிரேசிலில் சூரியகாந்தி பயிரின் விளைச்சல் குறைந்து, அந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெயின் விலையும் உயர்ந்துள்ளது.
இறக்குமதி வரி அதிகரிப்பு:
கடந்த காலங்களில் வெறும் 5 சதவீதமாக இருந்த கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை, சிறுக சிறுக அதிகரித்து தற்போதைய பட்ஜெட்டில் 17.5 சதவீதமாக உயர்த்தியுள்ளதும் விலை உயர்வுக்கு காரணம்.
ரஷியா, உக்ரைன் நாடுகளிலிருந்து கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது. அதுவரை இந்த விலையேற்றம் இன்னும் அதிகரிக்கலாம்.
நடுத்தர மக்கள் உபயோகப்படுத்தும் பாமாயில் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. ஆனால், இந்த விலையேற்றம் தற்காலிகமானதே. ஏப்ரல், மே மாதங்களில் கடலை, எள், தேங்காய் பயிர்களின் வரவு அதிகரித்தால், பழைய விலையே தொடரும். எப்படி இருப்பினும், தேர்தல் காலமே விலையேற்றத்துக்கு காரணம். தேர்தல் முடிவுக்குப் பிறகு விலையேற்றம் ஒரு முடிவுக்கு வரும் என்றனர்.
சிறு இறக்குமதியாளர்களை ஊக்குவிக்க வேண்டும்:
கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து குறைந்த அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சிறிய இறக்குமதியாளர்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படவில்லை. இதனால், பெருநிறுவனங்கள் மட்டுமே எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுகின்றன. சிறிய வியாபாரிகள் எண்ணெய் இறக்குமதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, பெருநிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து குறைந்த விலையில் ஏகபோக உரிமையுடன் கச்சா சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து, இங்குள்ள நிறுவனங்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிக விலையில் விற்பனை செய்கின்றன. சிறிய இறக்குமதியாளர்கள் இருந்தால், இப்படி அதிக விலை வைப்பது தவிர்க்கப்படும். அளிப்பு அதிகரிப்பு, போட்டி காரணமாக விலை குறைய வாய்ப்புள்ளது. இந்தப் பயன் பொதுமக்களுக்கு கிடைக்கும். எனவே, சிறிய இறக்குமதியாளர்களை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும்.
ஏற்கெனவே எண்ணெய்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக உள்ளதை, 8 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் முயற்சியையும் நிறுத்த வேண்டும் என சென்னையைச் சேர்ந்த எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் வணிகர் எம்.சுந்தர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.