வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் இரண்டு குறியீடும் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதற்கு பின் உள்ள காரணிகளை நிபுணர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
1. இந்திய ரூபாய் பலவீனம்
இந்திய ரூபாய் மதிப்பு அதன் வரலாறு காணாத சாதனை சரிவை நோக்கி பயணித்து வருகிறது. அதே வேளையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அந்நிய நிதி இடைவிடாத வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.15 ஆக சரிந்தது நிலைபெற்றது.
இந்தியாவின் வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் வரலாறு காணாத குறைந்த பணவீக்கம் இருந்தபோதிலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் புதிய வீழ்ச்சியை நோக்கி பயணித்து வருவதால், இது முதலீட்டாளர்களையும் நிபுணர்களையும் வெகுவாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் இந்திய பங்குச் சந்தையிலிருந்து தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி உள்ளிட்டவையால், கடந்த வாரம் டிசம்பர் 4 ஆம் தேதி இந்திய ரூபாய் மதிப்பானது, அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.90.46 என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
2. அமெரிக்க பெடரல் கொள்கை முடிவுக்கு முன்னதாக எச்சரிக்கை மணி
நாளை மறுநாள் (டிசம்பர் 10) அமெரிக்க பெடரல் வட்டி விகித முடிவு குறித்து தெரிய வரும் நிலைக்கு முன்னதாக மத்திய வங்கியானது 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என்ற அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்தாலும், அதன் எதிர்மறையான தாக்கத்தைத் தவிர்க்க சில்லறை முதலீட்டாளர்கள் பங்குதாரர்கள் அவர்களிடமுள்ள பங்குகளை விற்பனை செய்ததாக தெரிகிறது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்காவிட்டாலும், டாலர் மதிப்பு மேலும் வலுவடைந்து, இந்திய ரூபாயை மேலும் பலவீனம் அடைய செய்யும், அதே வேளையில் அந்நிய நிதி வெளியேற்றம் காரணமாகப் போராடி வரும் இந்திய பங்குச் சந்தையில் இது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிய வந்துள்ளது.
3. இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து நீடிக்கும் நிச்சயமற்ற தன்மை
இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் குறித்து நேர்மறையான அறிகுறிகள் இருந்தபோதிலும், ஒப்பந்தத்தின் நேரம் மற்றும் இறுதி வடிவம் குறித்து இன்னும் நிச்சயமற்ற தன்மை உள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்த வாரம் இந்தியா வர உள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்தது.
நேற்று முன்தினம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் உச்சிமாநாட்டில் உரையாடிய, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சூசகமாக தெரிவித்தார். ஆனால் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நலன்கள் குறித்து அரசின் நோக்கம் முதன்மையான இருக்கும் என்றார்.
4. ஜப்பானிய பத்திரம் விலை திடீர் அதிகரிப்பு!
ஜப்பானிய அரசு பத்திரமானது பல ஆண்டுகளுக்கு பிறகு அதன் உச்சத்தை எட்டியது. இது யென் கேரி வர்த்தகத்தின் கூற்றை மாற்றம் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது. ஜப்பானிய பத்திரம் அதிகரிப்பு உள்ளிட்டவையால், வட்டி விகிதங்கள் உயரக்கூடும். அதே வேளையில் இது யென் மதிப்பை வலுப்படுத்தும்.
5. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இடைவிடாத விற்பனை
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்த ஆண்டு ஜூலை முதல் இந்திய பங்குகளை விற்று வருகின்றனர். ஜூலை வரையான விற்பனையில் இது வரைக்கும் சுமார் ரூ.1.60 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள இந்திய பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
அதே வேளையில் டிசம்பர் மாதத்தில் கடந்த ஐந்து அமர்வுகளில் மட்டுமே அவர்கள் இந்திய சந்தையில் ரூ.10,404 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
இதையும் படிக்க: ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.