ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் பண்டிகைக் கால சலுகை என கடந்த அக்டோபர் மாதத்தில் கார்களின் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து உச்சம் தொட்டுள்ளது.
மொத்த விற்பனையை விட சில்லறை விற்பனை அதிகரித்துள்ளதாக ஷோரூம்களுக்கு கார்களை விநியோகிக்கும் உபகரண உற்பத்தியாளர்கள் பெரும்பாலானோர் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி அக்டோபரில் 1,76,318 கார்களை விற்பனைக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10.5% அதிகமாகும்.
மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இது குறித்து கூறியதாவது, ''அக்டோபர் மாதத்தில் மட்டும் 2,42,096 கார்களை விற்பனைக்கு அனுப்பியுள்ளோம். இதன்மூலம் எங்கள் பங்குகள் கடந்த மாதத்தில் மட்டும் 43.5% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% அதிகரித்துள்ளது.
தற்போது, அதிக கார்களை விநியோகிக்க முயற்சி செய்து வருகிறோம். பண்டிகை விழாக்களின் 40 நாள்களில் 5 லட்சம் முன்பதிவுகளைப் பெற்றுள்ளோம். இதில், சில்லறை விற்பனை மட்டும் 4.1 லட்சமாகும். இது கடந்த ஆண்டை விட இரட்டிப்பாகும்'' எனக் குறிப்பிட்டார்.
ஸ்போர்ட்ஸ் பிரிவு வாகனமாக எஸ்யூவிக்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 71,624 கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 31% அதிகமாகும். இதோடுமட்டுமின்றி கடந்த மாதத்தில் மட்டுமே இதுவரை இல்லாத அளவுக்கு முன்பதிவுகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் மாதாந்திர மொத்த விற்பனை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. வீட்டுப் பயன்பட்டு கார்களின் விநியோகம் 61,134 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 27% உயவாகும். இது ஹுண்டாய் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களை விட அதிகமாகும்.
2025 அக்டோபரில் ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 69,894 கார்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் 53,792 கார்கள் உள்நாட்டிலும் 16,102 கார்கள் வெளிநாடுகளுக்கும் விற்பனையாகியுள்ளன.
தசரா, தான்டிராஸ், தீபாவளி போன்ற பண்டிகைகளோடு மட்டுமின்றி கூடுதல் சலுகையாக ஜிஎஸ்டி விகிதமும் குறைக்கப்பட்டது, இந்திய ஆட்டோமொபைல் துறையில் எதிரொலித்துள்ளதாகவும் இது கணிசமான முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளதாகவும் ஹுண்டாய் குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்று, டொயோட்டா மற்றும் கியா நிறுவனங்களும் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்தைக் கண்டுள்ளன. டொயோட்டா நிறுவனம் 40,257 கார்களை விற்பனை செய்து 43% வளர்ச்சியைக் கண்டுள்ளது. கியா நிறுவனம் 30% வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக 29,556 கார்களை விற்பனை செய்துள்ளது.
இதையும் படிக்க | ரஷிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சரிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.