மும்பை: மந்தமான வர்த்தகத்தில் நடுவிலும், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 40 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 41.25 புள்ளிகள் உயர்ந்து 25,763 புள்ளிகளாக நிறைவடைந்தது.
முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டோ மற்றும் வங்கி பங்குகளை வாங்கியதன் காரணமாக இரண்டு நாட்கள் சரிவிலிருந்து மீண்டது இந்திய பங்குச் சந்தை.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 84,127 புள்ளிகளும் சென்ற நிலையில், குறைந்தபட்சமாக 83,609.54 புள்ளிகளை எட்டியது.
வர்த்தக முடிவில், 30 பங்குகளை கொண்ட சென்செக்ஸ் 39.78 புள்ளிகள் உயர்ந்து 83,978.49 புள்ளிகளாகவும், 50 பங்குகளை கொண்ட நிஃப்டி 41.25 புள்ளிகள் உயர்ந்து 25,763.35 புள்ளிகளாக நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.6%, ஸ்மால்கேப் குறியீடு 0.7 சதவிகிதம் வரை உயர்ந்தன.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எம் & எம், அப்பல்லோ மருத்துவமனைகள், எஸ்பிஐ, டாடா கன்ஸ்யூமர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் மாருதி சுசுகி, ஐடிசி, டிசிஎஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எல் & டி ஆகியவை பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
அக்டோபர் மாத விற்பனை தரவுகளுக்குப் பிறகு 1.7% விற்பனை அதிகரித்ததால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா பங்கின் விலை உயர்ந்தன. அதே வேளையில் டாடா மோட்டார்ஸ் பயணிகளின் வாகன பங்குகள் 1.69% வரை உயர்ந்தன.
சென்செக்ஸில் எடர்னல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பாரதி ஏர்டெல் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மாருதி சுசுகி அதிகபட்சமாக 3.37% சரிந்தது. ஐடிசி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், லார்சன் & டூப்ரோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டைட்டன் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
துறை ரீதியாக, மருந்து, தொலைத்தொடர்பு, ரியால்டி, பொதுத்துறை வங்கி குறியீடுகள் 1 முதல் 2% வரை அதிகரித்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், கோத்ரெஜ் நுகர்வோர் பங்குகள் செப்டம்பர் காலாண்டு வருவாயில் 5% உயர்ந்த நிலையில் நிதியாண்டின் 2-வது காலாண்டில் வாராக் கடன் அளவு சரிந்ததால் பரோடா வங்கியின் பங்குகள் கிட்டத்தட்ட 5% வரை அதிகரித்தன. அக்டோபர் மாத விற்பனை வளர்ச்சியைத் தொடர்ந்து மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் விலை கிட்டத்தட்ட 2% வரை உயர்ந்தன.
நிதியாண்டின் 2-வது காலாண்டில் லாபம் அதிகரித்தும் ஜே.கே. சிமென்ட் பங்குகள் 5% வரை சரிந்தன. கலைவையான 2-வது காலாண்டு முடிவுகளை அடுத்து வேதாந்தா பங்குகள் 3% மேல் உயர்ந்தன. ஷாஃப்லர் இந்தியா பங்குகள் லாபம் அதிகரித்ததால் அதன் பங்குகள் 5% வரை உயர்ந்தன. ஜென் டெக்னாலஜிஸ் பங்குகள் பாதுகாப்பு ஆர்டரில் பெயரில் 3% வரை உயர்ந்தன.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ், நவின் ஃப்ளோரின், பாங்க் ஆஃப் பரோடா, எம்சிஎக்ஸ் இந்தியா, எல் அண்ட் டி ஃபைனான்ஸ், பிபிசிஎல், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ், ஆதித்யா பிர்லா கேபிடல், இந்தியன் வங்கி, ஹெச்பிசிஎல், கனரா வங்கி, லாரஸ் லேப்ஸ், எம்ஆர்பிஎல், பாங்க் ஆஃப் இந்தியா, ஐஓசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எஸ்பிஐ, கம்மின்ஸ் இந்தியா, ஃபெடரல் வங்கி உள்ளிட்ட 1,470க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டியது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அன்று ரூ.6,769.34 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.7,068.44 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு உயர்ந்து முடிந்தன.
ஐரோப்பிய சந்தைகள் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமை) அன்று உயர்ந்து முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.14 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 64.71 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.