இதுவரை இல்லாத வகையில், ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் அளவுக்கு விலை குறைந்ததால் விரக்தி அடைந்த விவசாயிகள், அதற்கு இறுதிச் சடங்கு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் மன்ட்சௌர் மாவட்டத்தில் வெங்காயத்துக்கு மாலை அணிவித்து, மேள தாளங்களுடன் இறுதி ஊர்வலம் போல இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று சடங்குகள் செய்து, விவசாயிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
நாட்டிலேயே அதிகம் வெங்காயம் உற்பத்தியாகும் பகுதியான மல்வா - நிமர் பகுதியில், ஒரு கிலோ வெங்காயம் ரூ.1 முதல் ரூ.10 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. வெங்காயம் உற்பத்திக்கே குறைந்தபட்சம் ஒரு கிலோவுக்கு ரூ.10 - 12 வரை செலவாகியிருக்கும்போத, வெறும் 1 அல்லது 2 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதால் வெங்காய விவசாயிகள் கடும் நட்டத்தை சந்தித்துள்ளனர்.
வெங்காய உற்பத்திக்கு அதிக பணம் செலவிட்டிருக்கிறோம். இப்போது அந்த பணத்தை எங்கிருந்து பெறுவது? அரசுகள் எதையாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நட்டத்தை எப்படி ஈடுகட்ட முடியும்? என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய 25 சதவீத ஏற்றுமதி வரி செலுத்த வேண்டும். இது நீண்டகாலமாகவே நீடிக்கிறது. இதனால் எங்களால் வெளிநாடுகளின் போட்டியை சமாளிக்க முடியவில்லை. இதனால், ஏற்றுமதியாக வேண்டிய வெங்காயங்கள் உள்ளூர் சந்தைகளுக்குச் செல்கின்றன. அதனால், வெங்காயம் வரத்து அதிகரித்து, விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான்தான், தற்போதைய மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்த போதும்கூட, ஏற்றுமதி வரியை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
வெங்காய ஏற்றுமதி வரியைக் குறைக்காமல், வெங்காயத்துக்கு உரிய விலை நிர்ணயிக்கப்பட நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிக்க.. அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? பிஆர் கவாய் நேர்காணல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.