மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நவம்பர் 1 ஆம் தேதி முதல் சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஐடி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் ஏற்பட்ட விற்பனையை தொடர்ந்து உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு ஆகியவற்றால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிவடைந்தன.
முன்னதாக, சந்தை சரிவுடன் தொடங்கி சென்செக்ஸ் 457.68 புள்ளிகள் சரிந்து 82,043.14 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 173.77 புள்ளிகள் சரிந்து 82,327.05 புள்ளிகளாகவும் அதன் இரண்டு நாள் ஏற்றத்தை முடித்துக்கொண்டது. அதே வேளையில் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 58 புள்ளிகள் சரிந்து 25,227.35 ஆக நிலைபெற்றது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.2 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடுகள் 0.4 சதவிகிதம் சரிந்தது முடிந்தன.
துறைகளில் உலோகம், தொலைத்தொடர்பு, ஐடி, எஃப்எம்சிஜி, மூலதன பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் ஆகியவை 0.5 முதல் 1% வரை சரிந்தன.
அமெரிக்காவில் தற்போதைய பணிநிறுத்தம் மற்றும் அதிகரித்து வரும் அமெரிக்க - சீன வர்த்தக பதட்டங்கள் ஆகியவற்றால் உள்நாட்டு சந்தை எச்சரிக்கையுடன் வர்த்தகமானது.
நிஃப்டி-யில் டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, நெஸ்லே, இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ஆகியவை சரிந்தும் பாரதி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்ந்து முடிந்தன.
சென்செக்ஸில் டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஐடிசி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், உறுதியான 2-வது காலாண்டு முடிவுகள் இருந்தபோதிலும், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் 3% சரிந்தன. வலுவான இரண்டாம் காலாண்டு வணிகத்தை குறித்து நிறுவனம் அறிவித்ததால் வாரீ ரினியூவபிள் டெக்னாலஜிஸின் பங்குகள் 8% அதிகரிப்பு. வெளியுறவு அமைச்சகத்தின் தடைகள் காரணமாக பிஎல்எஸ் இன்டர்நேஷனல் பங்குகள் 11% சரிந்தன. 2-வது காலாண்டில் வசூல் அதிகரித்ததால் பீனிக்ஸ் மில்ஸ் பங்குகள் 1.5% உயர்ந்தன.
பாதுகாப்பு உத்தரவை கைப்பற்றிய போதிலும் ஜென் டெக்னாலஜிஸ் பங்குகள் 2% சரிந்தன. குஜராத்துடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தான நிலையில் விவியானா பவர் பங்குகள் 6.5% அதிகரித்தன. உச்ச நீதிமன்றம் ஏஜிஆர் விசாரணையை ஒத்திவைத்தால் வோடபோன் ஐடியா பங்குகள் 3.4% சரிந்தன. போனஸ் பங்குகளை பரிசீலிக்க அக்டோபர் 15 அன்று வாரியக் கூட்டத்திற்கு முன்னதாக எச்டிஎஃப்சி ஏஎம்சி பங்குகள் 2.5% உயர்ந்தன.
எச்.பி.எல். பொறியியல், எல் அண்ட் டி பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், நிப்பான் லைஃப் இந்தியா, எஸ்பிஐ, யெஸ் வங்கி, இந்தியன் வங்கி, எடர்னல், ஆர்.பி.எல். வங்கி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன. டோக்கியோ பங்குச் சந்தைகள் விடுமுறை காரணமாக மூடப்பட்டன. ஐரோப்பிய பங்குச் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமானது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. நாஸ்டாக் காம்போசிட் 3.56 சதவிகிதமும், எஸ் அண்ட் பி 500 - 2.71 சதவிகிதம் சரிந்த நிலையில் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 1.90 சதவிகிதம் சரிந்து முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.77 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 63.84 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) தேதியன்று ரூ.459.20 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
புதிய பட்டியல்
பட்டியலிடப்பட்ட பிறகு, டாடா கேபிடல் பங்குகள், அதன் ஐபிஓ விலையை விட 1.23 சதவிகிதம் அதிகமாக வர்த்தகமானது.
இதையும் படிக்க: உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.