விசாகப்பட்டினத்தில் (விசாக்) நிறுவப்படும் 15 பில்லியன் டாலர் செய்யறிவு மையம், அமெரிக்காவிற்கு வெளியே தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும் என்று கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியிருக்கிறார்.
கூகுள் நிறுவனத்தின் இந்த முதலீடு, விசாகப்பட்டினத்தின் நிலப்பரப்பை முழுமையாக மாற்றும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 14 அன்று, கூகுள் வெளியிட்ட அறிவிப்பில், இந்த முதலீடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கானதாக (2026-2030) இருக்கும் என்றும், சக்திவாய்ந்த ஜிகாவாட் அளவிலான தரவு மைய செயல்பாடுகள், புதிய பெரிய அளவிலான எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட ஃபைபர்-ஆப்டிக் நெட்வொர்க் ஆகியவற்றை இணைத்து, பல்வேறு துறைகளிலும் செய்யறிவால் ஏற்படும் மாற்றத்தை துரிதப்படுத்தும் திறன் கொண்ட, இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் முதல் செய்யறிவு மையமாக இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் முயற்சியில்,நாம் அனைவரும் இணைந்திருக்கிறோம், அதனுடன் வரும் மாற்றத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சேல்ஸ்ஃபோர்ஸின் ட்ரீம்ஃபோர்ஸ் ஆண்டுக் கூட்டத்தில், சுந்தர் பிச்சை கூறினார்.
நாம் செய்யறிவுடன், இன்னும் ஒரு படி மேலே செல்ல எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியா முழுவதும் தன்னுடைய ரயில் பயணங்களை அவர் நினைவுகூர்ந்ததுடன், கூகுள் இந்த மிகப்பெரிய முதலீட்டைச் செய்யும் 'அழகான கடற்கரை நகரம்' விசாகப்பட்டினம் பற்றியும் புகழ்ந்துரைத்தார்.
அமெரிக்காவிற்கு வெளியே எங்கள் மிகப்பெரிய செய்யறிவு முதலீட்டை நாங்கள் தற்போது அறிவித்திருக்கிறோம். ஒரு ஜிகாவாட் பிளஸ் டேட்டா சென்டர், 80 சதவிகிதம் சுத்தமான ஆற்றலால் இயக்கப்படுகிறது, கடலுக்கு அடியில் கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று இந்த மையம் குறித்தும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், பேசிய சுந்தர் பிச்சையிடம் ஓபன் ஏஐ பற்றி கேட்டதற்கு, கூகுள் ஏற்கனவே செய்யறிவு குறித்த பணிகளில் இறங்கியிருந்தது. நல்ல வேளை, ஓபன் ஏஐக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் அதனை முதலில் வெளியிட்டிருந்தார்கள் என்றும் பதிலளித்தார்.
எப்படியும் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் சாட்பாட்டை வெளியிட்டிருப்போம். ஆனால், அது முன்னதாக முழுமையாகத் தயாராகியிருக்கவில்லை. அந்த நேரத்தில் சில சிக்கல்களும் இருந்தன என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க... தேசிய விருது பார்சல்... பாராட்டுகளைப் பெறும் பசுபதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.