பங்குச்சந்தை வர்த்தகம் இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் நிறைவு பெற்றுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
84,625.71 புள்ளிகளில் சரிவில் தொடங்கிய நிலையில் பிற்பகலில் ஏற்றமடைந்தன. எனினும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 150.69 புள்ளிகள் குறைந்து 84,628.16 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் வர்த்தக முடிவில், 29.85 புள்ளிகள் குறைந்த நிலையில் 25,936.20 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
கடந்த 2024 செப்டம்பர் 27 ஆம் தேதி நிஃப்டி அதிகபட்சமாக 26,277 புள்ளிகளை எட்டிய நிலையில் இன்று நிஃப்டி 26,000 புள்ளிகளைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தை, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு ஆகியவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸில் டிரென்ட், ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், டிசிஎஸ் ஆகியவற்றின் பங்குகள் 0.9% முதல் 1.5% வரை சரிவைச் சந்தித்தன.
ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகள் நடுநிலையுடன் வர்த்தகமாகின.
துறைகளில் பொதுத்துறை வங்கிகள் அதிக லாபத்தைப் பெற்றன. உலோகம், நிதி சேவைகள், தொழில் துறை ஆகியவையும் ஏற்றமடைந்தன. அதேநேரத்தில் ரியல் எஸ்டேட், ஐடி, நுகர்வோர் பொருள்கள், பார்மா உள்ளிட்ட துறைகள் இன்று சரிவைச் சந்தித்துள்ளன.
அதேநேரத்தில் நிஃப்டியில் டாடா ஸ்டீல் பங்குகள் 2.9% வரை உயர்ந்தன. இதுதவிர லார்சன் & டூப்ரோ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
ஆசிய பங்குச்சந்தைகளின் வர்த்தகமும் இன்று சரிவுடனே நிறைவு பெற்றுள்ளன. அமெரிக்க பங்குச்சந்தை நேற்று(திங்கள்) ஏற்றத்துடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் ஒரு பேரல் 1.78% குறைந்து 64.42 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா குறைந்து ரூ. 88.27 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.