சுற்றுலா

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்கள்

மஞ்சள் மற்றும் கைத்தறி ஆடை உற்பத்திக்கு பெயர் போன ஈரோடு மாவட்டம் ஒரு சிறந்த சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகவும் விளங்குகிறது.

தினமணி

மஞ்சள் மற்றும் கைத்தறி ஆடை உற்பத்திக்கு பெயர் போன ஈரோடு மாவட்டம் ஒரு சிறந்த சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகவும் விளங்குகிறது.

பவானி சாகர் அணை

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் கட்டப்பட்ட அணை பவானி சாகர் அணையாகும்.  இவ்வணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் 105 அடியாகும். இதன் கொள்ளவு 33 கோடி கன அடியாகும். அணைக்கு அருகே அமைந்துள்ள நகர்ப் பகுதி பவானி சாகர் என்றே அழைக்கப்படுகிறது. இந்த அணையின் மேற்பகுதியில் நின்றவாறு, தண்ணீர் தேங்கி கடல் போல காட்சி அளிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஈரோட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயமாக பவானி சாகர் அணையை தவறாமல் பார்த்துச் செல்வார்கள்.

கொடிவேரி அணை

கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கேரளம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விசேட நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலாத் துறை சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பில் பூங்கா, தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விடுமுறை நாட்களிலும் கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

பவானி கூடுதுறை

வடமாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடுமிடம் திரிவேணி சங்கமம். தென்னகத்தில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதி ஆகியன சங்கமிக்கும் இடம் பவானி கூடுதுறை என்று அழைக்கப்படுகிறது.  தென்னகத்தின் திரிவேணி சங்கமம் என்று கூறப்படும் இப்பகுதியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகின்றனர்.

பவானி சங்மேஸ்வரர் கோயில்

தென்னகத்தில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதி ஆகியன சங்கமிக்கும் இடம் பவானி கூடுதுறை. சங்ககிரி, நாககிரி, மங்கலகிரி, வேதகிரி, பதுமகிரி என ஐந்து மலைகளுக்கு நடுவிலும், இரு நதிகளின் மத்தியிலும் அமையப் பெற்றது பவானி சங்கமேஸ்வரர் கோயில்.

சைவ, வைணவ வழிபாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் ஸ்ரீவேதநாயகியம்மன் உடனுறை சங்கமேஸ்வரர், ஸ்ரீசௌந்திரவள்ளித் தாயார் உடனுறை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் இக்கோயிலின் உறைவிட தெய்வங்களாக காட்சி அளிக்கின்றனர்.

அருணகிரி நாதர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தில் கொங்கு நாட்டில் பரவலாக உள்ள பல்லவர் கால கட்டடக் கலையைக் காணலாம்.  இக்கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள், பயணிகள் என ஆயிரக்கணக்கில் வருவர். பக்தர்களின் துயர் தீர்க்கும் இக்கோயில் ஈரோட்டிலிருந்து 15 கி.மீ. மற்றும் கோவையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

காளிங்கராயன் அணை

ஆங்கிலேயர் ஆட்சியில் சேலம், கோவை மாவட்டத் தலைநகராக விளங்கியது பவானி நகரம். பவானிக்கு மேலும் புகழ் சேர்ப்பது காளிங்கராயன் அணை. வெள்ளோட்டைச் சேர்ந்த காலிங்கராயன் என்பவர் பவானி ஆற்றில் அணையைக் கட்டியதோடு, 90 கி.மீ. தூரத்துக்கு கால்வாயும் வெட்டினார்.

கி.பி.1253-ல் தொடங்கிய இப்பணி 1265-ல் முடிந்தது. இதன்மூலம் தற்போது 14 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணைக்கட்டுக்குச் செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளது.

மேலும் ஈரோட்டில் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. அவற்றை அடுத்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT