இரண்டு ஓடைகள் ஓடியதால், ஈரோடை என்று அழைக்கப்பட்டு பிறகு மருவி, ஈரோடு என்று பெயர்பெற்ற மாவட்டத்தில், பல்வேறு கோயில்கள் அமைந்துள்ன.
ஈரோட்டில் புகழ்பெற்ற கோயில்களின் வரிசையில் பெரிய மாரியம்மன் கோயிலும் ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த கொங்கு சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறும். திருவிழாவின் போது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஈரோட்டில் அமைந்திருக்கும் பல மாரியம்மன் கோயில்களுக்கு எல்லாம் தலைவியாக இந்த பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
மகுடேஸ்வரர் திருக்கோயில்
ஈரோட்டில் அமைந்திருக்கும் மகுடேஸ்வரர் திருக்கோயில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இக்கோயில் அமைந்துள்ளது. மகுடேஸ்வரர் திரிபுர சுந்தரியுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்குள்ள அம்மன் மதுரபாஷினி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் தேவாரத்தில் சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகும்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். இக்கோயிலில் மூன்று முகம் கொண்ட பிரம்மன், சஞ்சீவி மலையைத் தூக்க செல்லும் கோரமான பல்லுடன் கட்சி தரும் ஆஞ்சநேயர், புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட வியாக்ரபாத விநாயகர் ஆகியோர் வேறு எங்கும் காணக் கிடைக்காத அம்சங்களாகும். இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை இதுவரை கணக்கிட இயலவில்லை. இந்த மரத்தின் இலைக்கு பல்வேறு மகத்துவங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பண்ணாரியில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்கு புற்று மண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுவது இக்கோயிலின் சிறப்பாகும்.
இங்கு நடைபெறும் அக்னி குண்டம் இறங்கும் விழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். வனப்பகுதியில் சுயம்புவாக இருந்த அம்மனை, கிராம மக்கள் கண்டெடுத்து கோயில் அமைத்ததாக இதன் தல வரலாறு கூறுகிறது. செவ்வாய், வெள்ளி நாட்களில் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து பல நேர்த்திக் கடன்களை செலுத்துகிறார்கள்.
பவானி சங்மேஸ்வரர் கோயில்
தென்னகத்தில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதி ஆகியன சங்கமிக்கும் இடம் பவானி கூடுதுறை. சங்ககிரி, நாககிரி, மங்கலகிரி, வேதகிரி, பதுமகிரி என ஐந்து மலைகளுக்கு நடுவிலும், இரு நதிகளின் மத்தியிலும் அமையப் பெற்றது பவானி சங்கமேஸ்வரர் கோயில்.
சைவ, வைணவ வழிபாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் ஸ்ரீவேதநாயகியம்மன் உடனுறை சங்கமேஸ்வரர், ஸ்ரீசௌந்திரவள்ளித் தாயார் உடனுறை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் இக்கோயிலின் உறைவிட தெய்வங்களாக காட்சி அளிக்கின்றனர்.
அருணகிரி நாதர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தில் கொங்கு நாட்டில் பரவலாக உள்ள பல்லவர் கால கட்டடக் கலையைக் காணலாம். இக்கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள், பயணிகள் என ஆயிரக்கணக்கில் வருவர். பக்தர்களின் துயர் தீர்க்கும் இக்கோயில் ஈரோட்டிலிருந்து 15 கி.மீ. மற்றும் கோவையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும் இது. கோயில் காலை 5.30 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இன்னும் பல திருக்கோயில்கள் உள்ளன. அவற்றை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.