மரணமில்லாப் பெருவாழ்வு

13. அழிவதும் உணவாலே…

நமது உடல் உறுப்புகள், செல்கள், ரத்தம் எல்லாம் கெட்டுப்போய், செயலிழந்து, நோயைத் தந்து மரணப்பிடியில்

டாக்டர் அப்பன்

நமது உடல் உறுப்புகள், செல்கள், ரத்தம் எல்லாம் கெட்டுப்போய், செயலிழந்து, நோயைத் தந்து மரணப்பிடியில் சிக்கவைப்பது, இயற்கைக்கு மாறான உணவுகளால்தான் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை! இயற்கைக்கு மாறான, நமது உடலை, உயிரை அழிக்கவைக்கும் உணவுகள் எவை என்பதைப் பற்றி இந்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மக்கள் தினமும் காலையில் குடிக்கும் காபி, டீ மற்றும் தாகத்துக்குக் குடிக்கும் குளிர்பானங்கள் உடல் நலனுக்கு எவ்வளவு கெடுதல் என்பதை யாரும் யோசிப்பதில்லை. ரசாயன நஞ்சு கலந்த அனைத்து செயற்கையான குளிர்பானங்கள், டானிக், சத்து நிறைந்த பானம் எனும் பெயரில் புழக்கத்தில் இருக்கும் செயற்கையான திரவ உணவுகள் அனைத்தும் நம்மை அழிக்கும் உணவுகள். மேலும், பால் மற்றும் பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவையும் நம்மை அழிக்கும் உணவுகளே. பால், பால் பொருட்களை நம் உணவில் சேர்ப்பதால், சளி ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. தவிர, மூலிகைச் சாறு, திரவ வடிவில் உள்ள மருந்துகள் அனைத்தும் நம்மை அழிக்கும் உணவுகளே!

விருந்தும் மருந்தும் மூன்று நாட்களே. ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள்) மேல் எவ்வித மூலிகை உண்டாலும் உடலுக்குக் கேடு என அகத்தியர் கூறியுள்ளார். மனிதரைத் தவிர வேறெந்த உயிரினமும் (விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் பிற), உலகில் மேற்கூறிய எவ்வித உயிரை அழிக்கும் திரவ உணவுகளை அருந்துவதில்லை.

பால் குடித்து வளரும் பிற உயிரினங்களான மாடு, ஆடு, குதிரை, மான், முயல், புலி, சிங்கம், கரடி, ஒட்டகம், குரங்கு, யானை, ஒட்டகச் சிவிங்கி, மற்றும் பிற குட்டி போட்டுப் பால் கொடுக்கும் உயிரினங்கள் எல்லாம், பால் குடிக்கும் குட்டிப் பருவத்தில் மட்டும் தனது இன தாய்ப்பாலை மட்டும் மடியில் இருந்து நேரடியாக அருந்தி, பின் பால் குடிப் பருவம் மறந்து வளர்ந்தபின், அதனதன் இயற்கை உணவைத் தின்று உயிர்வாழப் பழகிய பின், எந்த விலங்கினமும் பால் குடிப்பதில்லை. இவ்வித இயற்கை விதிப்படி, மனித இனமும், குழந்தைப் பருவத்தில் – பால் குடிப் பருவத்தில் மட்டும் தனது இனமான மனித தாய்ப்பாலை மட்டும் குடித்து வளர்ந்தபின், பால் குடி பருவம் மறந்தபின், மனித இன தாய்ப்பாலுக்கு இணையான தேங்காய்ப் பால் கொடுத்து பால் குடி பருவத்தில் வளர்க்கலாம். தேங்காய்ப் பாலை காய்ச்சக்கூடாது. பச்சையாகத்தான் கொடுக்க வேண்டும். தேவையெனில். தண்ணீர் கலக்கலாம். இனிப்பு தேவை என்றால், தேங்காய்ப் பாலில் தேன் அல்லது நாட்டு வெல்லம் சேர்க்கலாம்; வெள்ளைச் சர்க்கரை சேர்க்கவே கூடாது.

அனைத்து பால், முட்டை, கோழி, இறைச்சி, மீன், கருவாடு முதலான அசைவ உணவுகளும் நமது உடலை, உயிரை அழிக்கும் உணவுகளாகும். புலிகூட மறைமுகமாக சைவத்தைத்தான் பின்பற்றுகிறது. புலி பசித்தால் ஒரு சைவ உணவு விலங்கைத்தான் உயிரோடு அடித்து, அதன் இறைச்சியைப் பச்சையாகத் தின்று உயிர் வாழ்கின்றது; புலி ஒரு அசைவ உணவு விலங்கை அடித்து அதன் இறைச்சியைத் தின்னாது. அனைத்து சமைத்த சைவ உணவுகளும் உயிரை அழிக்கும் உணவுகளே; அதுவும் எண்ணெய்யில் தயாரித்த உணவுகள் மேலும் மோசமானவை.

ஆவதும் உணவாலே…

அப்படியானால், நம்மைக் காப்பாற்றக்கூடிய உணவுகள் எவை? மனிதரைத் தவிர அனைத்து உயிரினங்களும், உலகில் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை, தனது உணவை மாற்றவில்லை; வாழ்வியலையும் மாற்றவில்லை. பச்சையாக, சமைக்காது, தனக்குரிய இயற்கையுணவை மட்டும் உண்டு, இயற்கையாக வாழ்ந்து நம்மைவிட உடலாலும் உள்ளத்தாலும் உயர்வாக வாழ்கின்றன. அதுபோல், உணவால் மெள்ள மெள்ள சிதைந்துகொண்டிருக்கும் நாமும், மெள்ள மெள்ள அவரது இயல்புக்கேற்ப, சமைக்காது, பச்சையாக, அதிலும் தேங்காய் மற்றும் பழங்களாகிய மனிதனது இயற்கை உணவை உண்டு, இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழும்போதுதான், நாம் அழிவிலிருந்து காப்பாற்றப்படுவோம்; மரணத்தைத் தள்ளிப்போட இயலும்.

மனிதனது இயற்கை உணவாகிய தேங்காய், பழங்களும், ரசாயன உரமிடாது இயற்கை உரமிட்டு, பூச்சி மருந்துகள் பிடிக்காது, இயற்கையாக விளைந்து இயற்கையாக பழுத்துக் கிடைக்கும் உணவுகள் மிக மிக உயர்வானது. அதுபோல், இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரை மட்டும் தேவைப்படும்போது, தேவையான அளவு அருந்தலாம். மேலும் இளநீர், கரும்புச் சாறு, பழச்சாறு போன்ற இயற்கை பானங்களும் தேவைப்பட்டால் அருந்தி, மரணமில்லாப் பெருவாழ்வு வாழ முற்படலாம்.

தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர் வெளியேற்றம்!

துல்கர் சல்மான் - 41 அப்டேட்!

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

நாட்டின் மிக நீண்ட கண்ணாடிப் பாலம்! எங்கு அமைகிறது?

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

SCROLL FOR NEXT