உடல்நலம் காக்கும் ஹோமியோபதி

2. தலைவலிக்குக் காரணம் தலையில் இல்லை!

பிறப்பு முதல் இறப்பு வரை தலைவலியே ஏற்படாத ஒரு மனிதத் தலை கூட உலகில் இருக்க முடியாது. சாதாரண தலைவலிக்கும் தலைக்கனத்திற்கும் அவரவர் வாய்ப்பு வசதிக்கேற்ப வீட்டு வைத்தியம் மூலமோ, அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும்

Dr.S. வெங்கடாசலம்

பிறப்பு முதல் இறப்பு வரை தலைவலியே ஏற்படாத ஒரு மனிதத் தலைகூட உலகில் இருக்க முடியாது. சாதாரண தலைவலிக்கும் தலைக்கனத்திற்கும் அவரவர் வாய்ப்பு வசதிக்கேற்ப வீட்டு வைத்தியம் மூலமோ, அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும் தலைவலி மாத்திரைகள் மூலமோ நிவாரணம் பெறுகின்றனர். நாள்பட்ட தலைவலியோடு நாட்களை நகர்த்துவோர்பாடு நரக வேதனைதான்.

ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது பல காரணங்களால், பல விதங்களில் ஏற்படுகிறது. Migraine என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலி, பொதுவாக ஒரு பக்கமாக வரக்கூடியது. ஆயினும் ஒற்றைத் தலைவலிக் குறிகள் ஒரு பகுதியினருக்கு தலையின் இரண்டு பக்கங்களிலும் வரவும் கூடும்.

ஒற்றைத் தலைவலிக்கு பாரம்பரியமே பிரதான காரணம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. கோபம், மன இறுக்கம், மன உளைச்சல், சுற்றுச்சூழலின் அழுத்தம் (Environmental Stress), பரபரப்பு போன்ற மனவியல் காரணங்களாலும் ஒற்றைத் தலைவலி உண்டாகிறது. மது, புகைப்பழக்கம், மசாலாப்பொருட்கள், ஊறுகாய், எலுமிச்சை, ஆரஞ்சு, சாக்லேட், மீன், அதிகளவு கொழுப்புச் சத்துள்ள உணவுகள் போன்றவைகள் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கவோ அதிகரிக்கவோ செய்கின்றன.

தலைவலியால் பெண்கள் படும்பாடு

ஆண்களை விடப் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அதிகம் அவதிப்படுகின்றனர். அவர்களிடம் காணப்படும் இயக்குநீர் (Harmone) சுரப்புகளின் மாறுபாடுகளே இதற்குக் காரணம். கர்ப்பக்காலத்தில் இந்தத் தலைவலி மாயமாய் மறைந்து விடுகிறது. பிரசவத்திற்கு பின் மீண்டும் தாக்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஒற்றைத் தலைவலி ஓடிஒளிகிறது. அறுவைச் சிகிச்சை (Hysterectomy) மூலம் கர்ப்பப்பையை அகற்றிய பெண்கள் பலரை ஒற்றைத் தலைவலி ஈவு இரக்கமின்றித் தாக்குகிறது. 50, 55 வயதைத் தாண்டும் பெண்களுக்கு இயற்கையாகவே இவ்வலி குறைந்து மறைந்து போகிறது.

விதவிதமான தலைவலிகள்!

ஒற்றைத் தலைவலியின் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். பொதுவாகக் காணப்படும் சாதாரண வகை ஒற்றைத் தலைவலி (Common or Simple Migraine) திடீரென்று தோன்றக் கூடியது. கண்களில் மேல்புறம், பின்புறம், தலையின் பின்புறத்தில், ஒருபக்கமாக வலி தோன்றக் கூடும். Classical Migraine எனப்படும் மற்றொரு வகை ஒற்றைத் தலைவலி முன் அறிகுறிகளோடு (Aura)வரக் கூடியது. ஒற்றைத் தலைவலித் தாக்கத் துவங்குவதற்கு முன்பு சிலருக்குதலைச்சுற்றல் ஏற்படலாம். சிலருக்கு குமட்டலோ, உடல்சோர்வோ, மனச்சோர்வோ ஏற்படலாம். சிலருக்கு பார்வையில் விபரீதமான மாற்றங்கள் முன் கூட்டி ஏற்படலாம். பார்வை மங்கல் அல்லது பொருட்கள் இரண்டாக தோன்றுதல், கண்முன் வெளிச்சப் புள்ளிகளோ, கருப்புப் புள்ளிகளோ பறத்தல் போன்றவை ஏற்படலாம்.

Cluster headache என்று இன்னொரு வகை ஒற்றைத் தலைவலி உண்டு. இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு (20 முதல் 45 வயதிற்குள்) ஏற்படக் கூடிய தீவிரத் தலைவலியாகும். இந்த வகை ஒற்றைத் தலைவலி ஒரு கண்ணில் ஏற்பட்டு கண் சிவக்கும். மூக்கிலிருந்து நீர் ஒழுக்கு அல்லது மூக்கடைப்பு உண்டாகக் கூடும். தினமும் இவ்வலி ஓரிரு தடவைகள் ஏற்பட்டு கால் மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கடுமையாகக் காணப்படும்.

தீர்வை நோக்கி

மைக்ரேன் தலைவலி எனப்படும் நரம்பியல் தொடர்பான தலைவலிக்கு, ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தரத் தீர்வு ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ளது. ஒற்றைத் தலைவலியால் சித்ரவதை அனுபவிக்கும் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஹோமியோபதி மருந்துகள் தேவைப்படும். ஹோமியோபதி மருந்துகள் வெறும் வலி நிவாரணிகள் அல்ல; நோயை முழுமையாய் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்கவை. தலைவலி தோன்றிய இடம், பக்கம், வலியின் தன்மை, வலி எப்போது எதனால் குறைகிறது அதிகமாகிறது என்ற விபரம், நோயாளியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தலைவலியுடன் சேர்ந்து வந்துள்ள வேறு உடல் தொந்தரவுகள் போன்ற அனைத்து அம்சங்களுடன் ஆய்வு செய்யப்பட்டு ஹோமியோபதியில் மருந்து தேர்வு செய்யப்படுவதால் ஆண்டு கணக்கில் அவஸ்தைப்படுத்திய ஒற்றைத் தலைவலி கூட முற்றிலும் குணமாகிறது

+++

28 வயது இளைஞர் கடுமையான தலைவலியால் நெற்றிப் பொட்டுக்களை இறுக்கப் பிடித்துக் கொண்டு வேதனை மிக்க தோற்றத்துடன் அமர்ந்திருந்தார். அவரது பிரச்னைகள் பற்றி விசாரித்தபோது சில முக்கிய அறிகுறிகள் கிடைத்தன. ஐந்து மாதமாக இந்தத் தலைவலி அதிகரிக்கும்.

ஆங்கில மருத்துவ நிபுணர்கள் அவரைப் பரிசோதனைகள் செய்துவிட்டு, நீரிழிவு மற்றும் இரைப்பைப் புண்கள் இருப்பதாகவும் உறுதி செய்தனர். அது பற்றி மேலும் கேட்ட போது நீரிழிவு குடும்ப வியாதி என்றும் தாத்தா, அப்பா, சித்தப்பா, அனைவருக்கும் நீரிழிவு இருப்பதாகவும், ஆனால் தனக்கு இப்போதே வந்து விட்டதே என்றும் வருத்தப்பட்டார். நீரிழிவைக் கட்டுப்படுத்தவும், பலவீனத்தைப் போக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் ஐந்து மாதமாக ஆங்கில மாத்திரைகள் சாப்பிடுகிறார். இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை சிறுநீர் பரிசோதனையும் வாரத்திற்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனையும் செய்து கொள்கிறார். ரத்த சர்க்கரை அளவு 200 மி.கி முதல் 300 மி.கி வரை ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருக்கிறது. உணவுக் கட்டுப்பாடும் காலை நடைப்பயிற்சியும் மேற்கொள்கிறார்.

திறந்தவெளிக் காற்று அவருக்கு மிகவும் இதமாக இருக்கும். குளிர்ந்தவைகளை விரும்புகிறார். சாப்பிட்டபின் ஏற்படும் வயிற்றுவலியும், அசெளகரியமும் இரைப்பைக் குழியிலிருந்து வயிறு முழுவதும் பரவும். சில சமயங்களில் முதுகிலும் வலி ஏற்படும். ஏறக்குறைய வயிற்றுப் போக்கு போல அவ்வப்போது மலம் கழிக்க வேண்டியிருக்கும். தலைவலியின் போது சில நாட்களில் குளிர் உணர்வும், நடுக்கமும் ஏற்படும்.

அவருக்கு பிடித்தது இனிப்புகளும் ஐஸ்கீரிமும் அவருக்கு நீரிழிவு இருப்பதாக டாக்டர்கள் அறிவிப்பதற்கு முன்பு வரை ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னும் ஒரு சாக்லேட் சாப்பிடுவது அவரது வழக்கம். சிறு வயது முதலே இனிப்புப் பண்டங்களில் அவருக்கு அலாதி பிரியம். இளநீர் மற்றும் குளிர் பானங்களும் விரும்பிக் குடிப்பார். அவரது இப்போதைய முக்கிய பிரச்னை தலைவலி. ஆங்கில மருந்துகளுக்கு டாட்டா காட்டி விட்டு, நாள் முழுவதும் நீடிக்கிற இப்படிப்பட்ட தலைவலிகளுக்கு ஹோமியோபதியில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று கேள்விப்பட்டு வந்திருந்தார். நீரிழிவு நோய்க்கான சிகிச்சையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

அவரை வரவேற்பறையில் சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லி விட்டு அவருக்கான மருந்துத் தேர்வில் ஈடுபட்டேன். சில நிமிடங்களில் பெண் உதவியாளர் அறைக்குள் வந்தார். தலைவலி தாங்க முடியாமல் கர்சீப்பை வைத்து இறுக்கித் தலையைக் கட்டி உட்கார்ந்திருக்கிறார் என்றும் கொஞ்சம் சீக்கிரம் மருந்து தந்தால் நல்லது என்று அவர் கேட்பதாகவும் கூறினார். மருந்துத் தேர்வை இறுதிப்படுத்துவதற்கு உதவியாக முக்கியமான மாறுமைக் குறி (தலையை இறுக்கிக் கட்டுதல்) கிடைத்ததால் சுலபமாக இருந்தது. அர்ஜெண்டம் நைட்ரிகம் எனும் மருந்தினை உயர் வீரியத்தில் 2 வேளை மட்டும் ஒரே நாளில் சாப்பிடக் கொடுத்தோம்.

ஒரு வாரம் கழித்து முக மலர்ச்சியுடன் நன்றிப் பெருக்குடன் வந்தார். மாத்திரை சாப்பிட்ட முதல் நாளே நிவாரணம் கிடைத்துவிட்டு என்று தெரிவித்தார். வயிற்றுத் தொந்தரவுகள் பற்றிய உணர்வே இல்லை என்றார். மலம் கழிக்கும் தொந்தரவுகளும் நன்றாகக் குறைந்துள்ளன என்றார். ஆனால் ஒருவித சோர்வும், இடுப்பு வலியும் இருப்பதாகக் கூறினார். தலைவலி பற்றி இனி பயமில்லை என்றும் சர்க்கரை வியாதியைப் பற்றித்தான் கவலையும் பயமும் உள்ளது என்றும் கூறினார். இடையிடையே சிறுநீர்த்தாரையில் எரிச்சல், வலி ஏற்படுவதாகவும் கூறினார். பழங்களும் சாப்பிட முடியவில்லை. இனிப்பும் சாப்பிட முடியவில்லை. இளம் வயதிலேயே துறவி போல ஆகிவிட்டேன் என்று வருத்தப்பட்டார்.

மீண்டும் அர்ஜெண்டம் நைட்ரிகம் உயர் வீரியத்தில் 1 வேளை மட்டும் அளித்தோம். 15 நாட்கள் கழித்து ரத்த சர்க்கரை ஆய்வு அறிக்கையுடன் வந்தார். முதன் முறையாக 153 மி.கி என்று கீழிறங்கி வந்திருப்பது அவருக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவரது பெரும்பாலான்ஹ உபாதைகள் குணமாகிவிட்டன. நீரிழ்வு நோயையும் ஹோமியோபதி மருந்துகளால் முறியடிக்க முடியும் என்ற முழு நம்பிக்கையோடு அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இன்று வரை அவருக்கு அர்ஜெண்டம் நைட்ரிகம் தவிர வேறு மருந்து தேவைப்படவே இல்லை.

அகிலா – ஐதீகமான குடும்பத்தைச் சேர்ந்த பெண். இருபத்தைந்து வயது. கிராமப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிகிறாள். இரண்டு குழந்தைகள், கணவர் அருகிலுள்ள டெக்ஸ்டைல் மில் ஒன்றில் ஷிப்ட் முறையில் பணியாற்றுகிறார். இருவரும் ஒன்றாய் உட்கார்ந்து ஆற அமரப் பேசிய நாட்களும் நேரமும் குறைவு.

அதிகாலையிலேயே எழுந்து காலைக்கடன்கள் முடித்து, வீட்டை, வாசலை சுத்தம் செய்து, டீ காபி தயாரித்து குழந்தைகளும் கணவரும் குளிப்பதற்குத் தண்ணீர், வென்னீர் ஏற்பாடு செய்து, காலை உணவும் மதிய உணவும் ஒரே நேரத்தில் சமைத்து,பரிமாறி, மதிய வேளைக்கான உணவைத் தனித்தனி டிபன் பாக்ஸ்களில் எடுத்து வைத்து, தானும் குளித்து, சாப்பிட்டுவிட்டு, பேருந்தில் ஏறி, பள்ளிக்கூடம் சென்று ஆசுவாசமாய் அமரும் போது அகிலாவுக்குத் தலைவலி வந்துவிடும். வலி நிவாரண மாத்திரை போட்டுக் கொண்டால் தான் வகுப்பு நடத்த முடியும்.

ஏதேனும் ஒரு பத்திரிகை அல்லது புத்தகம் தொடர்ந்து வாசித்தாலோ, எழுத்து வேலை செய்தாலோ இரண்டு நெற்றிப்பொறிகளிலும் வலி வந்துவிடும். தூங்கி எழுந்தால் வலி குறைந்து விடும் என்பது ஆறுதலான விஷயம். பல சந்தர்ப்பங்களில் தூங்க இயலாது. மாறாக செய்யத் துவங்கிய வேலை தொடர்ந்து செய்து முடிக்க வேண்டிய நிலையில் அரைகுறையாய் நிற்கும். என்ன செய்வது? கைப்பையிலிருந்து ஒரு தலைவலி மாத்திரிகையை ப் போட்டுக் கொண்டு வேலையைத் தொடர்வாள்.

அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை வந்தது. வீட்டில் நிம்மதியாக ஓய்வெடுக்கவும், விரும்பிய இடங்களுக்குப் போய் வரவும், உறவினர்களைப் பார்த்து வரவும் விரும்பினாள். ஒரு நாள் காலை குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று திரும்பினாள். அன்று மாலை சில பொருட்கள் வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றாள். இரண்டு கடைகள் ஏறி இறங்கி சிறிது நேரத்திலேயே வீடு திரும்பினாள். ஆனால் வீட்டுக்குள் வந்து சேரும் முன்னரே வழக்கமான தலைவலி அவளைத் தாக்கியது.

மறுநாள் காலை சிகிச்சை பெற வந்த அகிலா இவ்வளவு விவரங்களையும் தெரிவித்துவிட்டு காலையில் வெயிலோடு கோயிலுக்குப் போனேன் கூட்டமாகவும் இருந்தது. இருந்தாலும் தலைவலி வரவில்லை. மாலையில் வெயில் இல்லை. விளக்கு வைக்கும் நேரம் கடைகளுக்குச் சென்று சிறிது நேரத்திலேயே திரும்பி விட்டேன். தலைவலி வந்துவிட்டது – ஏன் டாக்டர்? என்று கவலையோடு விசாரித்தாள். என்ன பதில் சொல்வது? அவளது குடும்பப் பின்னணி, மனநிலை போன்ற மேலும் சில விவரங்க்ளையும் கேட்டறிந்தேன். இது போன்ற தலைவலிகளை ஹோமியோபதி மருந்துகள் மூலமே முழுமையாக குணப்படுத்த முடியும் என்று நம்பிக்கை அளித்தேன்.

அறைக்குள் பேசிக் கொண்டிருந்த பத்து நிமிடங்களில் அனுமதி பெற்று இரண்டு தடவை வெளியே சென்று திரும்பினாள். வேறு ஏதேனும் தொந்தரவு உள்ளதா? என்று கேட்டபோது ஆமாம் டாக்டர்! நிஜமான தலைவலியை விட இன்னொரு தலைவலி! ஆர்வமாக கவனித்தேன். தொடர்ந்து சொன்னாள். எனக்கு எச்சில் அதிகம் சுரக்கிறது. அது கூடப் பரவாயில்லை. ஆனால் பிசுபிசுப்பாய் ஒட்டுவது போல் இருப்பதால் அடிக்கடி துப்ப வேண்டியுள்ளது. அது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது.

அகிலாவின் முகத்தில் வாட்டம் தெரிந்தது. ‘இந்தப் பிரச்னைக்கும் தலைவலிக்கும் சம்பந்தம் உள்ளதா?’ என்று கேட்டாள். இல்லை என்று மறுத்துவிட முடியுமா? ஹோமியோபதியின் அடிப்படையில் பார்த்தால் உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு நோய் தான். இவையெல்லாம் அதன் வெளிப்பாடுகள். அடையாளங்கள். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வியாதி என்று ஆங்கில மருத்துவர்கள் கூறுவார்கள். அதனால் தான் இவ்வளவு காலம் நீங்கள் சாப்பிட்ட நூற்றுக்கணக்கான தலைவலி மாத்திரைகளாலும் தலைவலியைத் தீர்க்க முடியவில்லை என்று எடுத்துக் கூறினேன். அகிலா புரிந்து கொண்டாள்.

‘கடைக்குப் போனால் தலைவலி வருகிறது என்கிறீர்களே. இதே அனுபவம் இதற்குமுன் ஏற்பட்டுள்ளதா?’ என்று விசாரித்த போது ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, ஆமால் டாக்டர்! முன்பெல்லாம் இதை நான் உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. ஆனால் கடந்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை என் அம்மாவுடன் ஷாப்பிங் சென்றேன். அப்போதும் தலைவலி வந்தது. வேறு இடங்களுக்குச் செல்லும் போது தலைவலி வருவதில்லை. ஆனால் அதிக வேலை செய்தாலோ, வழக்கமான வேலைகளுக்கு மாறாக புதியதாக ஏதாவது வேலை செய்தாலோ தலைவலி வந்துவிடுகிறது. வெள்ளையடிப்பதற்காக வீட்டிற்குள் உள்ள பொருட்களை ஒதுங்க வைக்கத் துவங்கியதும் கடுமையான தலைவலி வந்துவிட்டது’ என்று விவரமாய் பதிலளித்தாள்.

அகிலாவின் தலைவலி அனுபவங்களிலிருந்து குறிகளைத் தொகுத்து உரிய மருந்தைத் தேர்ந்தெடுக்க அவகாசம் கேட்டேன். அடுத்தநாள் வந்து மருந்தைப் பெற்றுக் கொள்ள சொன்னேன். இறுதியில் அவளது பிரத்யேகமான தலைவலிக்குரிய மருந்தாக எபிபிகஸ் (Epiphegus) என்ற மருந்தைத் தேர்வு செய்தேன். ஆனால் மருந்து கைவசம் இல்லை. மருந்துக் கடைகளிலும் விசாரித்து இல்லை என்று அறிந்தபோது சோர்வு ஏற்பட்டது. ஆனால் சேவை மனப்பான்மையுடன் ஹோமியோபதி சிகிச்சை அளிக்கும் நண்பர் ஒருவரிடம் இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். அவரிடமிருந்து சிலவேளை மருந்தை மட்டும் பெற்று அடுத்த நாள் அகிலாவுக்குக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னேன்.

பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் வரச் சொல்லியிருந்தேன். ஆனால் அப்பெண் ஒரு மாதம் கழித்து வந்தாள். வாரம் ஓரிரு முறையாவது வரக் கூடிய தலைவலி இப்போது ஒரு மாதமாக வரவேயில்லை. அடிக்கடி எச்சில் துப்புவதும் குறைந்துவிட்டது என்று பூரிப்போடு சொன்னாள். தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டுமா? என்று கேட்டாள். தேவையில்லை! உங்களுக்குத்தான் குணமாகிவிட்டதே! என்று கூறி அனுப்பி வைத்தேன்.
 

Dr. S. வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்
94431 45700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT