நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்!
எம்.எஸ்.வி என்று அழைக்கப்பட்ட எம்.எஸ். விஸ்வநாதன் பற்றி நமக்கு என்ன தெரியும்?
எம்.எஸ்.வி என்று அழைக்கப்பட்ட எம்.எஸ். விஸ்வநாதன் பற்றி நமக்கு என்ன தெரியும்? மிக வெளிப்படையாக சொல்லப்போனால், தமிழில் திரை இசை என்றாலே பலருக்கும் இளையராஜாவோடு முடிந்துவிடுகிறது. அவருக்கு முன்னால் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது? அந்தக் காலகட்டங்களில் திரையிசையில் சாதனை படைத்த ஜீனியஸ்கள் யார் எவர்? என்பதெல்லாம் தெரிந்துகொள்ள நாம் ஆர்வம் காட்டுவதே இல்லை. ஆனால், இப்போது வரை தமிழில் இசையமைக்கப்பட்டு வரும் பெரும்பாலான பாடல்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் எம்.எஸ்.வியே. அவர் போட்டுக்கொடுத்த மெட்டுகளின் கட்டமைப்பில்தான் (டெம்ப்ளேட்) இப்போதுவரை பல தமிழ்ப்பாடல்கள் (அறிந்தோ அறியாமலோ) இசையமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்த் திரையிசையின் முதல் பிதாமகர் எம்.எஸ்.விதான்.
எப்படி என்று தெரிந்துகொள்ள, ஆரம்பகாலத்தில் இருந்து தற்போது வரை வந்திருக்கும் சில பாடல்களைக் கேட்டுப்பாருங்கள். பாடல்கள் எப்படிப் பரிணாமம் அடைந்துள்ளன என்று புரிந்து விட்டால் எம்.எஸ்.வியின் மகத்தான பங்களிப்பும் புரிந்துவிடும்.
தமிழ்த் திரையிசை எப்படிப்பட்டது என்று முதலில் சுருக்கமாகக் கவனிப்போம்.
இயக்குநர் முதலில் திரைக்கதையில் எங்கெல்லாம் பாடல்கள் வரவேண்டும் என்று தீர்மானிக்கிறார். பின்னர் அந்த சிச்சுவேஷன்களை இசையமைப்பாளரிடம் விவரிக்கிறார். அப்போது பாடல் எப்படி வரவேண்டும் என்று தனக்கு இருக்கும் குறைந்தபட்ச/அதிகபட்ச இசையறிவை வைத்து ஒரு சில கருத்துகளும் கொடுத்து விடுகிறார். இதை வைத்துக்கொண்டு யோசித்து, இசையமைப்பாளர் ட்யூன் ஒன்றை உருவாக்கி, அதன்பின் பாடலாசிரியர் வரிகளை நிரப்பி, பின்னர் ஒலிப்பதிவு முடிந்து படத்தில் பாடல் வைக்கப்படுகிறது. இதுதான் நடைமுறை. இப்போது வரை.
இதில் என்ன பிரச்னை என்றால், பெரும்பாலான இயக்குநர்களுக்கு இசை அறிவு என்பது இருக்காது. காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள். அவர்கள் அதுவரை கேட்டு ரசித்த இசையிலிருந்தே முன் மாதிரிகள் அவர்களால் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு இயக்குநர் இளையராஜாவை மட்டுமே கேட்டு வளர்ந்திருப்பாரானால், ‘மதுர மரிக்கொழுந்து வாசம்’ டைப்ல ஒரு ட்யூன் வேணும் என்பார். அல்லது அவருக்குப் பிடித்த வேறொரு இளையராஜா பாடலாகவும் இருக்கலாம். அதுவே லெட் ஸெப்ளின், நிர்வாணா போன்ற குழுக்களைக் கேட்டிருந்தால் அவர்களின் பாணியில் வேண்டும் என்று சொல்லலாம் (அல்லது அதே பாடலை உருவவும் சொல்லலாம். அது இந்தியத் திரையிசையில் அடிக்கடி நிகழ்வதுதான்).
எனவே பெரும்பாலான நேரங்களில், எந்த வகையில் இசையமைப்பது என்பது பற்றிய இயக்குநர் கருத்து (அல்லது அப்படி ஒரு கருத்து இருக்கிறதா இல்லையா என்பதே) இசையமைப்பாளருக்குத் தெரியாது (ராக் பாடலா, ரெக்கேவா, ப்ளூஸ் பாடலாக வேண்டுமா, வெஸ்டர்னா, பாப் பாடலா இத்யாதி).. அதிலும் இப்போதைய இயக்குநர்களுக்காவது ஓரளவு எக்ஸ்போஷர் உண்டு. ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள் ஆகிய காலகட்டங்களில்?
இருந்தும், அப்போதே ஸ்ரீதர் போன்ற வித்தியாசமான இயக்குநர்கள் இருந்தனர். ஸ்ரீதர்+விஸ்வநாதன் கூட்டணியில் உருவான பாடல்களில் பெரும்பாலானவை எம்.எஸ்.வியின் முழுத்திறனும் வெளிப்படும்படியான பாடல்கள். எனவே இப்போதும் அவை பசுமையாக, புதிதாகவே இருக்கும். முடிந்தால் இந்தக் கூட்டணியின் பாடல்களைக் கேட்டுப்பாருங்கள்.
சொல்ல வந்தது என்னவென்றால், ஒரு திரைப்படத்தில் பாடல் ஒன்று வேண்டும் என்று இயக்குநர் விரும்புகையில், இசை பற்றிய நல்ல புரிதலும் அவருக்கு இருந்தால் பாடல்கள் அவசியம் காலம் தாண்டி நிற்கும். அப்படி இல்லை என்றால், முழுப்பொறுப்பும் இசையமைப்பாளரைச் சார்ந்தே நிற்கும். ஒரு இசையமைப்பாளராக, தன்னிஷ்டத்துக்குப் பாடலின் வகையை முடிவு செய்யும்போது, சில ஹிட்டாகும்; சில சரியாக அமையாது. காரணம் இயக்குநரின் மனதில் உள்ள கதைக்கேற்றபடிதான் பாடல்கள் அமைதல் வேண்டும். இதுதான் திரைப்படங்களை மட்டும் சார்ந்து நிற்கும் இசைத்துறையின் பிரச்னை. ஏனெனில் இது இசையமைப்பாளரை மட்டும் நம்பி வெளியாகும் ஆல்பம் இல்லை.
அறுபதுகளின் முடிவிலும் எழுபதுகளிலும் எம்.எஸ்.வி இப்படிப் பல பரீட்சார்த்தமான பாடல்களை இசையமைத்தார். அவற்றில் பல்வேறு இசை வடிவங்களைக் கலந்து, fusion என்று அழைக்கப்படும் விதத்தில் வழங்கியிருப்பார். அப்படிப்பட்ட பாடல்களை இப்போது கேட்டுப்பார்த்தால் இசை ரசிகர்களுக்கு அவசியம் அவை அட்டகாசமான அனுபவத்தை வழங்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
அத்தகைய பாடல்களில் ஒன்றுதான் ‘நம்ம ஊரு சிங்காரி…’
’நினைத்தாலே இனிக்கும்’, அதன் இசையை மட்டும் எடுத்துக்கொண்டால் அவசியம் தமிழில் புதிய முயற்சிதான். வெஸ்டர்ன் பாடகர்களை ஆதர்சமாக எடுத்துக்கொண்ட ஒரு இசைக்குழு, வெளிநாடு சென்று சந்திக்கும் அனுபவங்கள் என்ற களத்தில், பல பிரமாதமான பாடல்கள் அடங்கிய படம். Musical என்று இதை தாராளமாகச் சொல்லமுடியும்.
இப்படி ஒரு படத்துக்கு இசையமைக்கக்கூடிய இசையமைப்பாளர் அக்காலத்தில் யார்? எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், சங்கர்-கணேஷ், வி.குமார் போன்றவர்கள்தான் அப்போது டாப். இதில் வெஸ்டர்ன் இசையைத் தங்கு தடையின்றி வழங்குபவராக விளங்கியவர் எம்.எஸ்.வியே. ஒரு இசையமைப்பாளருக்கு இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளில் முற்றிலுமாக ஈடுபடும் வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கும். ஆங்காங்கே ஏதாவது பாடல்களில் இதைச் செய்திருக்கலாம். ஆனால் ஒரு படமே இப்படி அமைந்தால்?
எம்.எஸ்.வி இப்படத்தின் பாடல்களில் புகுந்து விளையாடியிருப்பார். பல்வேறு விதமான இசைவகைகளை அனாயாசமாக வழங்கியிருப்பார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘சம்போ சிவ சம்போ’ (விஸ்வநாதனே பாடியது) ஆகிய இரண்டு பாடல்களும் இன்னும் நூறு வருடங்கள் கழிந்தாலும் நினைவில் நிற்கக்கூடியவை. இசை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவை. ஆனால், ‘பாரதி கண்ணம்மா’, ‘சயனோரா’, ‘தட்டிக் கேட்க ஆளில்லேன்னா’, ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ’காத்திருந்தேன் காத்திருந்தேன்’ (இப்பாடல் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கும்), ‘நிழல் கண்டவன் நாளும் இங்கே’, ’ஆனந்தத் தாண்டவமோ’ போன்ற பல பாடல்கள் இப்படத்தில் உண்டு. இவற்றில் பெரும்பாலானவை மிகச்சிறிய பாடல்களும் கூட.
ஒரு இளைஞன், அவனுக்குப் பிடித்த பெண்ணை ஊரெங்கும் தேடுகிறான். அப்படி ஒரு தருணத்தில் அவளைப் பற்றி நினைத்துப் பார்க்கிறான். அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் திலீப். அவன் கேட்கும் இசையெல்லாம் வெஸ்டர்ன் (எம்.எஸ்.வியின் தமிழ்ப்பாடல்களையே போட்டால் கூட ஓடிவிடுவான். அப்படி ஒரு கதாபாத்திரம்). அவன் குணம், எப்போதும் துறுதுறுப்பாக உலவும் வகையிலானது. குறும்பானவன் (சுஜாதாவின் வசந்த் போன்றவன். நினைத்தாலே இனிக்கும் திரைக்கதையில் சுஜாதாவும் வேலை செய்திருக்கிறார் என்பது திரை ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும்).
இப்படி ஒருவன், ஒரு பெண்ணுடன் பாடுவது போன்ற சூழலில், பாடல் எவ்வளவு குறும்பாக இருக்கவேண்டும்? கச்சிதமாக அந்த சிச்சுவேஷனுக்கு எம்.எஸ்.வி இசையமைத்த பாடல் இது. பாடலில் உபயோகிக்கப்படும் இசைக்கருவிகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எழுபதுகளில் உலக இசையில் ஆதிக்கம் செலுத்திய இசைக்குழுக்களையும் கொஞ்சம் தேடிப்பாருங்கள். இந்த இரண்டு விஷயங்களுக்கும் இருக்கும் தொடர்பு அப்போதுதான் முழுமையாகப் புரியும். இந்தப் பாடலையும் முழுக்க முழுக்க அப்போதுதான் நன்றாக அனுபவிக்கவும் முடியும்.
பாடலுக்கான சுட்டி:
எம்.எஸ்வியின் இப்படிப்பட்ட வெஸ்டர்ன் பாதிப்பில் அமைந்த ஃப்யூஷன் முயற்சிகளுக்கு இன்னொரு பிரமாதமான உதாரணம், ’காசேதான் கடவுளடா’ படத்தில் வரும் ‘ஜம்புலிங்கமே ஜடாதரா…’ பாடல். சர்வசாதாரணமாக ஒரு மிகத்தரமான ஃப்யூஷன் பாடலை வழங்கியிருப்பார். அந்தப் பாடலையும் கேட்டுப் பாருங்கள். மிக உற்சாகமான மனநிலையில் இப்பாடலை எப்போது கேட்டாலும் சந்தோஷம் பீறிடுவதை உணர்வீர்கள். வெஸ்டர்னை எடுத்துக்கொண்டு, அதைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றி, அற்புதமாக இசையமைப்பதில் எம்.எஸ்.வி வல்லவர் என்று நன்றாகவே அப்போதுதான் தெரியும்.
கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக வைத்தே பலகாலம் இயங்கிய தமிழ்த்திரையிசையில் இப்படியாக எம்.எஸ்.வி துவங்கிவைத்த ஃப்யூஷன் இசையைத்தான் இப்போது வரை நாம் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். இதே பாணியில்தான் இளையராஜாவும் இசையமைத்தார். மெல்லிய மெலடிகளாக இருந்தாலும் சரி – அட்டகாசமான வெஸ்டர்ன் பாடல்களாக இருந்தாலும் சரி, தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு ஒரு அற்புதமான சாலையைப் போட்டுக்கொடுத்தவர் இப்படியாக எம்.எஸ்வியே. அந்தச் சாலையில்தான் பின்னர் இளையராஜா, ரஹ்மான் என்று இப்போதுள்ள அநிருத் வரை அனைவரும் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(தொடருவோம்)