வரலாறு படைத்த வரலாறு

அத்தனை முகங்களும் அழகு!

குழந்தாய், எனது பாடலின் இசை உன்னைஅன்பின் கரங்களைப் போலச் சுற்றிக்கொள்ளும்ஆசி தரும் முத்தம் போல

நாகூர் ரூமி


குழந்தாய், எனது பாடலின் இசை உன்னை

அன்பின் கரங்களைப் போலச் சுற்றிக்கொள்ளும்

ஆசி தரும் முத்தம் போல

உன் நெற்றியை அது தொடும்

நீ தனியாக இருக்கும்போது

உன் அருகில் அமர்ந்து செவிகளில் அது கிசுகிசுக்கும்

நீ கூட்டத்தில் இருக்கும்போது

உன்னைச் சுற்றி அது தனிமை வேலி அமைக்கும்

உன் கனவுகளின் இரு சிறகுகளாய் அது இருக்கும்

உன்னை அது

அறியப்பாடாதவற்றின் எல்லைகளுக்குக் கொண்டுசெல்லும்

உனது சாலை இருண்டு கிடக்கும்போது

நம்பிக்கை நட்சத்திர ஒளியாக

உன் தலைக்கு மேலே அது மின்னும்

உன் விழிப்பாவைகளில் அது அமர்ந்துகொள்ளும்

எல்லாவற்றின் இதயத்துக்கும்

உன் பார்வையை எடுத்துச் செல்லும்

இறப்பில் என் குரல் அமைதியாகிவிடும்போது

உயிர் வாழும் உன் இதயத்திலிருந்து

என் பாடல் பேசும்


My Song என்ற ஆங்கிலப்பாடலின் தமிழாக்கம் எனது. இக்கவிதையை எழுதியவர் சாதாரணக் கவிஞரல்ல. உலகப்புகழ்பெற்ற கவிஞர். இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர்!

அவரைப்பற்றிய இன்னொரு முக்கியமான விஷயம் அவர் கவிஞர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறுகதையாசிரியர், உரைநடையாசிரியர், நாவலாசிரியர், இசைநாடகாசிரியர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஓவியர், சீர்திருத்தவாதி, தத்துவவாதி, கல்வித்தந்தை  -- அப்பாடா மூச்சு முட்டுகிறது! ஆமாம். இத்தனையும் சேர்த்த மொத்த உருவம் அவர். ஆனால் எல்லாத் துறைகளிலுமே சாதனைகள் படைத்தவர்! அரிதினும் அரிதான ராட்சச ஆளுமை.  அவரைப்பற்றிய ஒரு சின்ன நிகழ்ச்சியை விவரித்துவிடுகிறேன். அவர் யார் என்பது அப்போது விளங்கிவிடும்.

1921. அப்போது அவருக்கு வயது நாற்பது இருக்கும். இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குக் கப்பலில் சென்று கொண்டிருந்தார். அப்போதெல்லாம் விமானப் பயணம் கிடையாது. கடல் கடக்க வேண்டுமென்றால் கப்பல்தான். எங்களூர்ப் பக்கம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகளை ‘கப்பசபராளி’ என்பார்கள். ‘கப்ப’லில் ‘சஃபர்’(பிரயாணம்) செய்பவர் என்று பொருள். அப்போது தொடங்கிய அந்த சொல்வழக்கு இன்றும் உயிர்வாழ்கிறது. இன்றும்கூட வெளிநாட்டில் வேலைபார்க்கும் ஆண்கள் அனைவருமே ‘கப்பசபராளிகள்’தான்! அது சிங்கப்பூர் ஏர்லைன்சாக இருந்தாலும் சரி, ஜெட் ஏர்வேஸாக இருந்தாலும் சரி!

நம்ம கவிஞரும் கப்பசபராளியாக இங்கிலாந்துக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தன் தாய்மொழியில் எழுதிய ஒரு கவிதையை அவரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துகொண்டிருந்தார். நேரம் போகவேண்டுமே! அது அவருடைய கன்னி மொழிபெயர்ப்பு முயற்சி. ஆனால் அந்தக் கன்னிமொழிபெயர்ப்பு அவருக்கு உலகப்புகழை வாங்கித்தரப்போகிறது என்பது அவருக்குத் தெரியாது!

லண்டனில் அவருக்கு வில்லியம் ரோதன்ஸ்டீன் என்ற ஓவியரின் நட்பு கிடைத்தது. அவரை ஏற்கனவே கல்கத்தாவில் – தற்போதைய, கொல்கத்தாவில் – சந்தித்திருக்கிறார். இவரது கவிதைகளை வாசிக்க விருப்பம் தெரிவித்தார் ஓவியர். கவிஞரின் தாய்மொழி அவருக்குத் தெரியாததால் ஆங்கிலத்தில் அவற்றை மொழிபெயர்த்துக் கொடுக்கச் சொல்லி ரோதன்ஸ்டீன் கேட்டுக்கொண்டதன் பேரில் நம் கவிஞரும் மொழிபெயர்த்துக் கொடுத்தார்.

அதைப் படித்த ரோதன்ஸ்டீன் அசந்துபோனார். ஆஹா, இப்படியெல்லாம்கூட கவிதை எழுத முடியுமா என்று வியந்தார். உடனே அவற்றை தன் நண்பரும் உலகப்புகழ்பெற்ற ஐரிஷ் கவிஞரான டபிள்யூ.பி.ஏட்ஸிடம் காட்டினார். ஏட்ஸ் ஏற்கனவே ஆங்கில இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்! நம் கவிஞரின் கவிதைகளைப் படித்துவிட்டு ஏட்ஸ் அவர்மீதும் அவர் கவிதைகள் மீதும் ‘மெர்ச’லாகிப் போனார்! நான் ஒன்றும் மிகையாகச் சொல்லவில்லை. ஏட்ஸ் சொல்வதை நீங்களே கேளுங்கள்:

‘ரயில், ஆம்னி பஸ், உணவு விடுதி என்று எல்லா இடத்துக்கும் அக்கவிதைகளின் கையெழுத்துப் பிரதிகளைத் தூக்கிக்கொண்டு திரிந்தேன். படித்துக்கொண்டே இருந்தேன். சமயங்களில் யாராவது என்னைப் பார்ப்பது போலிருந்தால், அக்கவிதைகளால் நான் எவ்வளவு தாக்கம் பெற்றிருந்தேன் என்று மற்றவர்கள் அறிந்துகொள்ளாமல் இருக்கும் பொருட்டு உடனே மூடிக்கொள்வேன்’.

இப்போது சொல்லுங்கள் ஏட்ஸ் நம்ம கவிஞர்மீது மெரசலாகிப்போனாரா இல்லையா?! அவரை மெரசலாக்கிய அக்கவிதையின் பெயர் கீதாஞ்சலி! அதை எழுதியவர் நம் வங்காளக் கவிமேதை ரவீந்த்ரநாத் தாகூர்!

நோபல் பரிசு

இந்திய பாரம்பரியத்தின் பெருமையை தன் படைப்புக்களால் இந்தியாவுக்கும், தன் கவிதைகளால் உலகுக்கும் உணர்த்தியவர் தாகூர். இந்தியர்கள் அனைவருமே அறிவார்ந்த தளத்தில் செயல்படுபவர்கள்தான் என்று வைத்துக்கொண்டால் அதில் மூன்று மாநிலத்தவருக்கு முதலிடம் இருக்கிறது. வங்காளிகள், மலையாளிகள், தமிழர்கள். இவர்கள் மூவருக்கும் அடுத்துத்தான் மற்றவர்கள் என்பது என் கணிப்பு. ஏன்?

இலக்கியத்துக்கான விருதுகளில் ஆகச்சிறந்தது  நோபல் பரிசு (அதிலும் அரசியல் உள்ளது வேறு). கீதாஞ்சலிக்காக தாகூருக்கு 1913ல் நோபல்பரிசு கொடுக்கப்பட்டது. (அதில் ஏட்ஸின் பங்கும் உண்டு). அதன்பிறகு உலகத்தரத்தில் இந்தியாவில் எவருமே எழுதவில்லையா என்றால் அப்படியல்ல. எனக்குத் தெரிந்து தமிழிலும் மலையாளத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். (நான் இங்கே பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. அது ரொம்ப ‘பெர்சன’லாகப் போய்விடும்). ஆனாலும் இதுவரை தாகூரைத் தவிர வேறு யாரும் வாங்கவில்லை என்பதுதானே நிஜம்?

சினிமாவைப் பொறுத்தவரை ஆகச்சிறந்த விருது ஆஸ்கார். அதைப் பெற்ற ஒரே இயக்குனர் வங்காளியான சத்யஜித்ரே ஒருவர்தான். அதுவும் சிறப்பு ஆஸ்கார் விருது. அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது விருதுக் குழுவினர் விருதை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றனர்.

நான் ரேயின் சில படங்களைப் பார்த்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்தது  சாருலதா! கருப்பு வெள்ளையில் அதைவிட அழகானதொரு திரைப்படம் இந்த உலகில் இதுவரை வரவில்லை என்று எண்ணுகிறேன். அழகான மனைவியையும், அவளது திறமைகளையும் கண்டுகொள்ளாமல் வேலை வேலை என்று அலைந்துகொண்டிருக்கும் கணவனால் தனிமைப்படுத்தப்படும் மனைவி, கணவனின் தம்பிமீது கொள்ளும் காதலை வெகுநுட்பமாகவும், வெகுஅழகாகவும், கொஞ்சம் கூட விரசம் மேலிடாமல் எடுக்கப்பட்ட படம் அது. ஒரு நூலைக்கட்டி மலையை இழுப்பது மாதிரியான காரியத்தில் வெற்றிபெற ரே போன்ற ஒருவரால்தான் முடியும் என்று நம்புகிறேன். அது மண்ணின் சிறப்பாகத்தான் இருக்கவேண்டும். ‘சாருலதா’ பார்த்தால் வங்காள மூளையின் சிறப்பு புரியும். அவரையடுத்து இசைத்துறையில் இரண்டு ஆஸ்கார்களை வென்ற பெருமைக்குரிய தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான்.

விருதுகளை வைத்து எதையும் அளக்கவேண்டும் என்று சொல்வது தவறு. ஆனால் விருதுகள் உலக அங்கீகாரத்தின் குறியீடுகளாக உள்ளன. அவற்றை நோக்கி நம் தகுதிகளை மேம்படுத்திக்கொள்வதில் தவறில்லை. இங்கே மேற்கொண்டு மலையாளிகள், தமிழர்களைப் பற்றி சொல்லத் தொடங்கினால் அது தனியான கட்டுரையாக அல்லது நூலாக மாறலாம். எனவே இங்கே நிறுத்திக்கொள்கிறேன். 

நான் மாணவனாக இருந்த காலத்திலேயே தாகூரை வியந்துள்ளேன். அவரது ஒரு சிறுகதையில் – பெயர் ஞாபகமில்லை -- ஒரு குழந்தை ஆற்றில் விழுந்துவிடும். ஆறு அதை இழுத்துக் கொண்டு போய்விடும். குழந்தையைத் தேடி ஆற்றின் கரையோரம் சொந்தக்காரர்கள் அலைவார்கள். பயனின்றித் திரும்புவார்கள். கதையை இப்படி முடிப்பார் தாகூர்: ‘ஒன்றுமே தெரியாத மாதிரி ஓடிக்கொண்டிருந்தது அந்த ஆறு'!

பீரலி பிராமணர்

தாகூரின் குடும்பம் பிராமணக் குடும்பம். அதிலும் பீரலி பிராமணக் குடும்பம் என்று அறியப்படுகிறது. அதென்ன பீரலி பிராமணக் குடும்பம் என்று வரலாற்றைக் கொஞ்சம் ஊடுறுவிப் பார்த்தால் அங்கே எனக்கோர் ஆச்சரியம் காத்திருந்தது. வங்காளத்தில் ஜெஸ்ஸோர் பகுதியில் இருந்த சில பிராமணக் குடும்பங்கள் அரசாங்க அதிகாரிகளாக இருந்தனர். அதில் ஒரு பிராமணர் முஸ்லிமாகி தன் பெயரை பீர்அலி என்று மாற்றிக்கொண்டார். அவரோடு அவரது குடும்பத்தினரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஹிந்து மதத்திலிருந்து மாறாத அவரது சொந்தக்கார பிராமணக் குடும்பங்களை பாரம்பரிய ஹிந்து பிராமணர்கள் வெறுத்து ஒதுக்கினர். அவர்கள் மதம் மாறவில்லை என்ற போதும். அவர்களை பீரலி பிராமணர்கள் என்று அழைத்தனர். அந்த பீரலி பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்தான் தாகூர்!

’ஜீன்இயஸ்’

மேதை என்பதற்கு ஆங்கிலத்தில் ‘ஜீனியஸ்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.‘ஜீன்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து அது வந்திருக்கவேண்டும். தாகூரின் வாழ்க்கை அப்படித்தான் சொல்கிறது. தாகூரின் குடும்பமே ஒரு கலைக்குடும்பம். தாகூரின் அப்பாவுக்கு பதினான்கு பிள்ளைகள்! தாகூர் எட்டாவது மகன்!

அந்தக் காலத்தில் மனிதர்கள் பெரும்பாலும் இப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள். என் தாத்தாவுக்கு மூன்று மனைவிகள். (ஒருவர் இறந்து ஒருவராக). ஒவ்வொரு மனைவிக்கும் பத்து பிள்ளைகள்! நாமிருவர், நமக்கிருவர் என்றெல்லாம் அவர்கள் யோசித்ததே கிடையாது. அதுதான் சரி என்று தோன்றுகிறது. எவ்வளவு முயன்றாலும் குழந்தை வராத தம்பதிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்! அப்படியானால் ஒரு உயிரைத் தருவது இறைவன்தானே? அதற்குரிய உணவையும் அவனே ஏற்பாடு செய்து தருவான். (பெற்றோர் சோம்பேறியாகப் படுத்துறங்கலாம் என்ற அர்த்தத்தில் அல்ல. சம்பாதிக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும் இறைவன் கொடுப்பானல்லவா?) இரண்டுக்கு மேல் வேண்டாம், ஒன்றே போதும் என்றெல்லாம் இந்தக் காலத்தில் நினைப்பதற்குக் காரணம் மக்கள் தொகை பெருகிவிடும் என்பதனால் அல்ல. இத்தனை பேருக்கு எப்படி சம்பாதிக்கப் போகிறோம் என்ற அவநம்பிக்கையும் அச்சமும்தான் காரணம். எனவே இது மனம் சார்ந்த ஒரு பிரச்சனைதான். சரி, தாகூருக்கு வருவோம். 

தாகூரின் அப்பா ஒரு ஆன்மிகவாதி. ‘மஹரிஷி’ என்று அழைக்கப்பட்டார். பரமஹம்சரின் ஆசிபெற்றவர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனாலும் அவர் துறவியாகவில்லை. நல்ல வியாபாரியாக தன்னை உருவாக்கிக்கொண்டார். பணத்தை மதிக்காத விடுபட்ட மனநிலையோடு நிறைய பணம் சம்பாதித்தவர். பட்டு, நிலக்கரி போன்றவற்றில் வாணிபம் செய்து பெரும் பொருளீட்டினார். அந்தக் காலத்து ‘பில்லியனர்’ என்று சொல்லவேண்டும். சொந்தமாக லண்டனில் வீடு, வங்காளத்தில் பல எஸ்டேட்டுகள் என்று இருந்தன! அவரது எஸ்டேட்டுகளில் ஒன்றுதான் சாந்தி நிகேதன்! அங்குதான் தாகூர் பிற்காலத்தில் உருவாக்கிய விஸ்வபாரதி என்ற கல்லூரி (பின்னாளில் பல்கலைக்கழகம்) இருந்தது!

தாகூருக்கு ஜோதிரிந்திரநாத் என்று ஒரு அண்ணன். அவரும் ஒரு ஜீனியஸ். அவர் கவிஞர், இசையமைப்பாளர், ஓவியர், பாடலாசிரியர், நாடகாசிரியர், நடிகர். ‘பாரதி’ என்ற பெயரில் பத்திரிக்கையும் நடத்தினார். ஸ்வர்ணகுமாரி என்றொரு சகோதரி இருந்தார். வங்காளப் பெண்களில் முதன் முதலில் புதினம் எழுதியவர்களில் அவரும் ஒருவர்! தன் முதல் நாவலுக்குப் பிறகு கவிதைகள், நாடகம், கட்டுரைகள் எல்லாம் எழுதினார் அவர். 

இப்போது புரிகிறதா? இலக்கியம், இசை, ஓவியம் எல்லாம் தாகூரின் பரம்பரை ரத்தத்திலேயே, ஜீனிலேயே இருந்திருக்கிறது. அதனால்தான் அவர் ‘ஜீன்’இயஸ் என்று சொன்னேன். நூற்றுக்கணக்கான ஓவியங்களை வைத்து பாரிஸிலும் பெர்லினிலும் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்ததை தாகூர் ஏற்றுக்கொண்டார்! தாகூரே பாடும் பாடலும் இணையத்தில் உள்ளது கேட்டுப்பாருங்கள்.

ட்ராப் அவ்ட்

தாகூருக்கு ஏனோ பள்ளிப்படிப்பில் ஆர்வமே வரவில்லை. எத்தனைப் பள்ளிகளில் சேர்த்தாலும் கொஞ்ச நாள்தான். வந்துவிடுவார். ஆனால் பெற்றோர் அதற்காக அவரை அடிக்கவில்லை, திட்டவில்லை. தாங்களே படிப்பு சொல்லிக்கொடுத்தனர் (பெற்றோர்கள் கவனிக்கவேண்டும்). அதுசரி, பள்ளிப்படிப்பில் அவருக்கு ஏன் நாட்டம் வரவில்லை?

எந்த மேதைக்கும் பள்ளிப்படிப்பில் நாட்டம் வராது. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கல்வி முறை ஒரு மேதையின் மூளை இயங்கும் விதத்துக்கு எதிரானது. பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல விரும்பாத அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருமுறை சொன்னார்: ‘என் கல்வியை நிர்ணயிக்கும் உரிமையை நான் எந்த பள்ளிக்கூடத்துக்கும் தரமுடியாது'! சொந்தமாக சிந்திக்கத் தெரிந்த யாரும் கிளிப்பிள்ளையாக இருக்க விரும்புவதில்லை. கடைசியாகச் சேர்ந்த தூய சேவியர் பள்ளியிலும் தாகூர் ‘ட்ராப்அவ்ட்’ தான்! 148 ஆண்டுகள் கழித்து தன்னிடமிருந்து படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓடிய மேதையின் பிறந்தநாளை அப்பள்ளி 2009ல் கொண்டாடியது! பில்கேட்ஸ்கூட ஹார்வர்டின் ட்ராப் அவ்ட்தான்!

அறிவைத் திணிக்கும் (வன்)முறையை மாற்ற வேண்டித்தான் அவர் விடுதலையை மையமாக வைத்து சாந்திநிகேதனில், நோபல் பரிசின் மூலம் தனக்கு வந்த பணத்தையெல்லாம் போட்டு விஸ்வபாரதி கல்லூரியைத் தொடங்கினார் தாகூர்! 

பணமும் படைப்பும்

ஒரு  பணக்காரன் அறிவாளியாகவும் சிறந்த படைப்பாளியாகவும் இருக்க முடியுமா? முடியாது என்பது சில படைப்பாளிகளின் கருத்து. ஆனால் இக்கருத்து தவறானது என்பதை நிரூபித்தவர் தாகூர். ஆயிரக்கணக்கான பாடல்கள், 84 சிறுகதைகள், ஆறு கவிதைத் தொகுப்புகள், ஏழு நாடகங்கள், நான்கு நாவல்கள், இரண்டு நினைவுக் குறிப்புகள், மொழிபெயர்ப்புகள் என எழுதிக் குவித்திருக்கிறார். கீதாஞ்சலியில் மட்டுமே 103 பாடல்கள் இருப்பதாகவும் 150க்கும் மேற்பட்ட பாடல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்தனையும் முத்துக்களாக. ஆகச்சிறந்த நோபல் பரிசையும் வென்றிருக்கிறார். ஒருவர் பணக்காரராக இருப்பதற்கும் படைப்பாளியாக இருப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. படைப்பு மனம் இருந்தால் யார் வேண்டுமானால் படைப்பாளியாகலாம் என்பதற்குத் தாகூரே சான்று.

இசை

ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் தூம்ரி ஸ்டைலில் அல்லது அதோடு இணைந்து செயல்படுமாறு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இசையோடு அமைத்திருக்கிறார் தாகூர்! அவை பாரம்பரிய சங்கீத முறையில் பாடப்பட்டன. இந்த விஷயத்தில் நம்ம பாரதியைப் போன்றவர் தாகூர்.

நம்நாட்டு தேசியகீதத்தை மட்டுமல்ல, வங்காளத்தின் தேசியகீதமான ‘அமர் ஷோனார் பங்க்ளா’ என்பதையும் எழுதியவர் தாகூரே!

காந்தி, நேரு, ஐன்ஸ்டீன், ஏட்ஸ், பெர்னார்ட்ஷா, ராபர்ட் ஃப்ராஸ்ட் போன்ற ‘பெரிசு’களெல்லாம் தாகூரின் நண்பர்கள்! ஒருமுறை தாகூருக்கு உடல்நலக் குறைவாக இருந்தபோது அவரை நேருவும் இன்னும் சிலரும் சேர்ந்து மாடிக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். பகல் நேரத்தில் சாப்பாட்டுக்குப் பிறகு ஓய்வெடுக்கக் கூடாதா என்று காந்தி கேட்டபோது, சின்னவயதில் பகல் நேரத்தில் எக்காரணம் கொண்டும் ஓய்வெடுக்காமல் உழைக்கவேண்டுமென்று 67 ஆண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த உறுதியை மீறமுடியாது என்று தாகூர் கூறினார் தன் எழுபதுகளில்!

நானில்லாதபோது

என் பணியை யார் செய்வீர்கள்?

கேட்டது அஸ்தமிக்கும் சூரியன்

நாங்கள் செய்வோம் தலைவா

என்றன மெழுகுவர்த்திகள்!

என்கின்றது தாகூரின் ஒரு கவிதை. அம்மெழுகுவர்த்திகளாகவாவது நாம் இருக்கவேண்டும்! எண்பது வயதில் மறைந்த மகாகவிக்கு நாம் செய்யும் மரியாதையாக அது இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! டிரம்ப்

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

SCROLL FOR NEXT