‘இ
ந்தியா ஓர் அழகிய மணப்பெண். அவளுடைய ஒரு கண் ஹிந்து. இன்னொரு கண் முஸ்லிம்’ என்று சொன்ன அவர் யார்?
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய வள்ளுவன் வாக்கு. கல்வி இல்லாவிட்டால் கண்கள்கூட புண்கள்தான் என்பது அவரது தீர்க்க தரிசனம். வெளியே உள்ள கண்களால் உலகைப் பார்க்கலாம். கல்விக்கண்களால் மட்டுமே உள்ளத்தை, உணர்வை, உண்மையைப் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் இப்போதுகூட பெண் பிள்ளைகளுக்கு எதற்கு படிப்பு என்று கேட்கும் ‘படித்த’ பெற்றோர் இருக்கத்தான் செய்கிறார்கள்!
ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த, (உருவத்திலும்) பெரியவரான நம் கட்டுரை நாயகர் வள்ளுவன் சொன்ன உண்மையை உணர்ந்தார். ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெறவேண்டுமானால் அவர்களது மொழியைக் கசடறக் கற்றுக் கொள்ளவேண்டியது அவசியம் என்பது அவருக்கு விளங்கிவிட்டது. Paying somebody back in their own coin என்பார்களே, அதுபோல. குறிப்பாக ஏழை முஸ்லிம்களும், ஏழை ஹிந்துக்களும், எல்லா ஏழை மக்களும் உயர்கல்வி பெறவேண்டிய அவசியத்தை உணர்ந்தார். விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் அறிவினால்தான் நமது பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்று புரிந்துகொண்டார். என்னசெய்யலாம் என்று யோசித்தார். ஒரு முடிவுக்கு வந்தார். அந்த முடிவுக்காகக் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்.
அவர் ஒரு அறிஞர். ஒரு சமூக சீர்திருத்தவாதி, புரட்சிக்காரர், எழுத்தாளர், பேச்சாளர், நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் ஒருவர் என்றெல்லாம் சொல்லலாம். எப்படி விவரித்தாலும் அது அவருக்குப் பொருத்தமாகவே இருக்கும்.
விஞ்ஞானப்பூர்வமான, மேற்கத்தியக் கல்வியை ஆங்கிலம் மூலமாக அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற கனவோடு செயல்பட்டு, ஆக்ஸ்ஃபோர்டு, காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு இணையான ஒரு உயர்கல்வி நிறுவனம் இந்தியாவில் நிறுவப்படவேண்டும் என்று முயன்று அந்த முயற்சியில் இமாலய வெற்றிகண்டவர். அந்த ஒரு முயற்சிக்காகவே நினைவுகூறப்படவேண்டியவர்.
முகலாயக் குடும்பத்தில் டெல்லியில் பிறந்தவர். அவருடைய முன்னோர்கள் அரேபியாவிலிருந்து ஆப்கனிஸ்தானுக்குச் சென்று பின்பு அங்கிருந்து முகலாயர்களின் ஆட்சிக்காலத்தின்போது இந்தியாவுக்கு வந்தவர்கள். அவருடைய அம்மாவழித் தாத்தா ஒரு ’வஸீர்’ ஆக (மந்திரி) இருந்தார். அப்பாவழித் தாத்தா ’மன்ஸப்’ ஆக (தளபதி) இருந்தார். அவரது அப்பாவும் இரண்டாம் அக்பர் சக்கரவர்த்திக்கு ஆலோசகராக இருந்தார். ராஜபரம்பரை ரத்தம். குடும்பத்தினர் பலரும் அரசாங்க நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள். இது அவரது பின்னணி.
கிழக்கிந்தியக் கம்பனிக் கல்லூரியில் சட்டம் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். அக்கம்பனிக்கு சட்ட ஆலோசகர் அந்தஸ்திலும் துணை நீதிபதியாகவும் பணிபுரிந்தவர்.
அதனால்தானோ என்னவோ அவர் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவே இருந்தார். முஸ்லிம்களுக்குத் தனிநாடு வேண்டுமென்ற கொள்கையை ஆதரித்தார். காங்கிரஸை எதிர்த்தார். முஸ்லிம் லீகை ஆதரித்து வளர்த்தார். பிரிட்டிஷ் பேரரசுக்கு முஸ்லிம்கள் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று அவர் கூறினார். உர்து மொழிதான் இந்தியாவிலிருந்த அனைத்து முஸ்லிம்களின் பொதுமொழியாக இருக்கவேண்டும் என்று கூறினார். இப்படியெல்லாம் அவர் சொன்னதால், செல்வாக்கு மிகுந்த ஹிந்து, முஸ்லிம் அரசியல் தலைவர்களெல்லாம் அவரை சந்தேகத்துடனேயே பார்த்தனர். இதெல்லாம் அவருடைய இன்னொரு முகம்.
ஆனால் கல்வியின் மகத்துவத்தை, அதிலும் ஆங்கிலம் மூலமாகக் கிடைக்கின்ற கல்வியின் மகத்துவத்தை, இந்திய இளைஞர்களுக்கு உணர்த்தியவர் அவர். இளைஞர்களுக்கென்று இங்கே நான் சொல்வதில் ஒரு நோக்கம் உள்ளது. ஏனெனில் ‘பெரிசுகள்’ யாரும் அவரது கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. பயங்கரமாக எதிர்த்தார்கள். ‘தங்களின் அரசாங்கத்தை ஆங்கிலேயர்களிடம் பறிகொடுத்து அநாதைகளாய் நின்ற இந்திய முஸ்லிம்கள் ஆங்கிலேயரைத் தங்கள் பரமவிரோதியென்றும், இந்தியாவை ‘தாருல் ஹராம்’ என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் சொன்னபோது அவருக்கு எதிர்ப்பு எழுந்ததில் ஆச்சரியமில்லை’ என்கிறார் அப்துற்றஹீம் (பக்கம் 89). சரி, எந்த அளவுக்கு எதிர்ப்பு இருந்தது? ஒரு ‘சாம்பிள்’ பார்க்கலாம்.
ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஒருநாள் அவர் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு செருப்பு பறந்து வந்தது. ஜார்ஜ் புஷ் மாதிரி குனிந்து அவர் தப்பிக்கவில்லை. அதைத் தன் கையில் எடுத்துக்கொண்டு அவர் சொன்னார்:
‘பெருங்குல மக்களே! இந்த செருப்பை வீசிய நண்பர் உண்மையிலேயே பெரிய சமூக அபிமானி. தன்னிடம் பணமில்லாத காரணத்தால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் காலிலே கிடந்த செருப்பொன்றை தானம் செய்திருக்கிறார். என்ன தாராளம், என்ன பெருந்தன்மை! இவரைப் போன்ற உணர்ச்சி மிகுந்த முஸ்லிம்களல்லவா தேவை! கொதிக்கும் வெப்பத்தையும் பாராது தன் செருப்பையும் கல்விக்காக தானம் செய்த பெருமையே பெருமை! நான் இந்த ஒரு செருப்பை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. இன்னொரு செருப்பையும் அந்த நண்பர் தந்துவிட்டால், இரண்டையும் விற்று கிடைக்கும் பணத்தைக் கல்வி நிலையத்துக்காகச் சேர்த்துக்கொள்வேன். எனவே மற்றொரு செருப்பையும் தருமாறு அந்த நண்பரைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்!
ஆனால் செருப்பை வீசியவர் இந்த பேச்சுக்கெல்லாம் மசியவில்லை. அடுத்த செருப்பும் வீசப்பட்டது! இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டு அந்த அறிஞர் மீண்டும் பேசினார்.
‘வீரமக்களே! நண்பரது அடுத்த செருப்பும் வந்துவிட்டது. இதோ, இவைகளை ஏலம் விடப்போகிறேன். செருப்பைத் தந்த நண்பர் பெரிய செல்வந்தர். இந்தப் பணக்காரருடைய செருப்பை ஒரு ஏழை ஏலத்துக்கு எடுத்துவிட்டால் அது அவருடைய கௌரவத்துக்கு இழுக்கு. எனவே நான் கூறப்போகும் ஏலத்தில் அந்தப் பணக்காரரே வெற்றிபெறுவார் என்று எண்ணுகிறேன்’ என்று சொல்லி நிறுத்தினார்.
அந்த விடாக்கண்டன் கொடாக்கண்டன் போராட்டத்தில் விடாக்கண்டனே வென்றார்! செருப்பை வீசிய அந்த செல்வந்தரே தன் செருப்புக்களை ஒரு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்துச் சென்றார்!
அந்த விடாக்கண்டன் யார்? அவர்தான் சர் சையத் அஹ்மத் கான் (1817-1898).ஆங்கிலேயர் ‘சர்’ பட்டம் கொடுத்து அவரைக் கௌரவித்தனர். அன்றிலிருந்து அவர் ‘சர் சையத்’ என்றே அறியப்படுகிறார்.
அலிகர் பல்கலைக் கழகம்
மிகக்கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு அவர் 1875ம் ஆண்டு அவர் நிறுவிய கல்லூரியின் பெயர் ஆங்கிலோ மொஹம்மடன் ஓரியண்டல் காலேஜ். இன்று அது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்ற புகழ்ப்பெயருடன் விளங்குகிறது!
விடுதலைப்போராட்ட வீரரும், பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ராஜா மஹேந்த்ர பிராதாப் சிங்தான் அலிகர் முஸ்லில் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற முதல் பட்டதாரி! பின்னர் டாக்டர் ஜாகிர் ஹுசேன் போன்றவர்கள் பட்டம் பெற்றனர்.
கடுமையான எதிர்ப்பில் தொடங்கினாலும் போகப்போக சர் சையதுக்கு ஆதரவு கிடைக்க ஆரம்பித்தது. செருப்பிலும் வெறுப்பிலும் தொடங்கியது சிவப்புக் கம்பள விரிப்பிலும், விருந்திலும் முடிந்தது. ஒருமுறை கல்லூரிக்காக அவர் ஹைதராபாத் சென்றபோது பெரிய விருந்தொன்றை அளிக்க புரவலர்கள் விரும்பினர். ஆனால் அவரோ, ‘விருந்து வேடிக்கையெல்லாம் வேண்டாம். விருந்திற்காகக் செலவிடும் பணத்தை கல்லூரி நிதிக்குக் கொடுங்கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்’ என்று கேட்டு முப்பதாயிரம் ரூபாய்களைப் பெற்றுக்கொண்டார்!
அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் வைத்து ராம் சந்தர் என்பவர், தன்னுடைய கிராமத்துப் படித்த இளைஞர்களிடம் தலைக்கு இரண்டனா என்று வசூலித்துக் கிடைத்த எட்டு ரூபாய் தொண்ணூறு காசுகளை சர் சையதுக்கு வழங்கினார்! அதை நன்றியோடு பெற்றுக்கொண்ட சையத், ‘பணக்காரர்கள் தந்த ஆயிரக்கணக்கான ரூபாய்களைவிட இது மிகவும் மதிப்பு வாய்ந்தது’ என்று சொன்னார்.
அமிர்தசரஸில் இறங்கியவுடன் அவரை வண்டியில் வைத்து கோலாகலமாக இழுத்துச் செல்ல விரும்புவதாக மாணவர்கள் கூறினர். ஆனால் அப்படியெல்லாம் செய்யவேண்டாம் என்று சையத் மறுத்துவிட்டார்.
தன் தலையில் இருந்த துருக்கித் தொப்பியைக் கையில் ஏந்தி அலிகர் பல்கலைக் கழகம் உருவாவதற்காக சையத் பிச்சை கேட்ட தருணங்களும் உண்டு என்கிறார் வரலாற்று ஆசிரியர் அப்துற்றஹீம் (96).
நகைச்சுவை உணர்வு
சர் சையத் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஒருமுறை சையத் ரயிலில் ஏறினார். பெட்டியில் இரண்டு ஆங்கிலேயர்கள் அமர்ந்திருந்தனர். மற்ற இடமெல்லாம் அவர்களுடைய சாமான்களால் நிரம்பியிருந்தன. அவர்களிருவருக்கும் இடையிலிருந்த கொஞ்சம் இடத்தில்போய் சையத் அமர்ந்துகொண்டார். அந்த ஆங்கிலேயர்கள் வெகுண்டனர். சையதுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து, ‘இவன் ஒரு கழுதை’ என்றார் ஒருவர். ‘இவன் ஒரு குரங்கு’ என்றார் இன்னொருவர். ‘ஒரு கழுதைக்கும் குரங்குக்கும் மத்தியில் நான் உட்கார்ந்திருக்கிறேன்’ என்று சையத் சாவதானமாக ஆங்கிலத்தில் சொன்னதும் அந்த ஆங்கிலேயர்களுக்கு முகத்தில் ஈயாடவில்லை!
இன்னொருமுறை ரயில் பயணத்தின்போது நீங்கள் யார் என்று ஒரு ஆங்கிலேயரைப் பார்த்து சையத் கேட்டார். அவர் பந்தாவாக, ‘நான் ஒரு பாரிஸ்டர்’ என்று கூறினார். அப்படியா என்று கேட்டுவிட்டு சையத் மௌனமானார். அவர் ‘பாரிஸ்ட’ரை சாதாரணமாக எடுத்துக்கொண்டது அந்த வெள்ளைக்கார பாரிஸ்டரின் ஈகோவைக் காயப்படுத்திவிட்டது. ‘பாரிஸ்டரா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்பார் என்று எதிர்பார்த்த அவர் ஏமாந்துபோனார். பதிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், ‘நீங்கள் யார்?’ என்று சையதைக் கேட்டார்.
‘நான் பாரிஸ்டரின் அப்பன்’ என்று சொன்னார் சையத்! பதிலைக் கேட்ட ஆங்கிலேயருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் என்று திரும்பவும் கேட்டார். கொஞ்ச தூரத்தில் அமர்ந்திருந்த தன் மகனைக் காட்டிய சையத், ‘அவர் என் மகன். அவர் ஒரு பாரிஸ்டர்’ என்று கூறினார்!
சிப்பாய்க் கலகத்தின்போது நடத்தப்பட்ட வன்முறையில் அப்பாவி இந்தியர்கள் கொடுமையாக உயிரிழந்ததை நேரில் பார்க்கும் அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. அவருடைய தாயார் தன் குதிரையோட்டியின் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தார். ஐந்து நாட்களாக குதிரைக்கு வைக்கும் கொள் மட்டுமே அவருடைய உணவாக இருந்தது. தண்ணீரே கிடைக்கவில்லை. நிலமையறிந்து ஓடிச்சென்று சையத் ஒரு கூஜாவில் தண்ணீர் கொண்டுவந்தார். ஆனாலும் அவரது தாயார் பிழைக்கவில்லை. ஒரு மாதத்திற்குள் அவரது உயிர் பிரிந்தது.
இந்த அனுபவங்களினால் பாதிக்கப்பட்ட சையத் ‘அஸ்பாப்-எ-பகாவத்-எ-ஹிந்த்’ என்ற ஒரு நூலை எழுதினார். The Causes of Indian Mutiny என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நூலில் பிரிட்டிஷாரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். அவர்களின் முட்டாள்தனமான, பிடிவாதமான கொள்கைகளே கலகத்துக்குக் காரணம் என்று சொன்னார். அதனால் பல பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. ஆனாலும் துணிச்சலாக அந்நூலின் பிரதிகளை இங்கிலாந்துக்கும் இந்திய அரசுக்கும் அனுப்பிவைத்தார்!
சர் சையத் அஹ்மத் கான், சில தகவல்கள்:
சர் சையத் 6000 பக்கங்களுக்கு மேல் எழுதியுள்ளார்
அதிகமாக உர்து நூல்களையே எழுதினார்
23வது வயதில் எழுத ஆரம்பித்தார்
காலை நான்கு மணிக்கு எழுந்து புத்தகங்களும், பத்திரிகைகளுக்கான கட்டுரைகளும் எழுத ஆரம்பிப்பார்!
800 ஆண்டுகால முகலாயர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட வரலாற்று நினைவிடங்களைப் பற்றி ‘அஸ்ராருஸ் ஸனதீத்’ என்ற விரிவானதொரு நூலை எழுதினார். அது ஒரு தொல்பொருளாராய்ச்சி தொடர்பான ‘மாஸ்டர்பீஸ்’ என்று கருதப்படுகிறது.
புனித பைபிளுக்கு முதன்முதலாக விளக்கவுரை எழுதிய முஸ்லிம் அறிஞர் அவர்தான்.
வில்லியம் முய்ர் Life of Mahomet என்ற தனது நூலில் நபிகள் நாயகத்தைப் பற்றித் தவறாகக் கூறிய கருத்துக்களுக்கெல்லாம் தனது ‘குதாஃபதே அஹ்மதிய்யா” என்ற நூலில் விரிவாக பதிலடி கொடுத்தார்.
1864ல் அலிகர் விஞ்ஞானக் கழகம் (The Scientific Society of Aligarh) தொடங்கினார். இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் விஞ்ஞானக் கழகம் அதுதான் என்று கூறப்படுகிறது.
இஸ்லாம் தொடர்பாக அவர் கொண்டிருந்த பல கருத்துக்களை அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை ஒரு புதுமைவாதியாகவே பார்த்தனர். அவர் முஸ்லிமே அல்ல என்று ‘ஃபத்வா’ எனும் மார்க்கத் தீர்ப்புகூட ஒருமுறை மக்காவிலிருந்து அவருக்கு அனுப்பப்பட்டது! பின்னே, ஒரு கையில் குர்’ஆனும் இன்னொரு கையில் விஞ்ஞானமும் இருக்கவேண்டும் என்று சொன்னால் பழமைவாதிகளுக்குக் கோபம் வராதா என்ன!
1898ம் ஆண்டு மறைந்த சர் சையதின் உடல் அவர் நிறுவிய அலிகர் பல்கலையின் மசூதி வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
‘எல்லா மனிதர்களும் நம் சகோதர சகோதரிகளாவார்கள். அவர்களின் நன்மைக்காகப் பாடுபடுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்’ என்று சர் சையத் கூறினார். நாம் ஒவ்வொருவரும் இப்படி நினைப்போமானால் எந்தப் பிரச்சனையைத்தான் வெல்ல முடியாது?!
உதவிய நூல்கள் 1. முஸ்லிம் பெரியார்கள் மூவர். அப்துற்றஹீம். யுனிவர்சல் பப்ளிஷர்ஸ். சென்னை: 2007 2. விடுதலைப்போரில் முஸ்லிம்கள் வி.என்.சாமி. பாவலர் பதிப்பகம், மதுரை, 2009. |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.