வரலாறு படைத்த வரலாறு

உயிரை வாங்கிய ஒரு கையெழுத்து

போரில் பிடிபட்ட கைதிகளைப் பார்க்க தன் உதவியாளரோடு சென்றிருந்தார் அவர். பார்த்து நலம் விசாரித்தார்! ‘சாப்பிட்டீர்களா? உங்களுக்கான வசதிகள் எல்லாம் கொடுக்கப்படுகிறதா?’

நாகூர் ரூமி

போ 

ரில் பிடிபட்ட கைதிகளைப் பார்க்க தன் உதவியாளரோடு சென்றிருந்தார் அவர். பார்த்து நலம் விசாரித்தார்! ‘சாப்பிட்டீர்களா? உங்களுக்கான வசதிகள் எல்லாம் கொடுக்கப்படுகிறதா?’ என்றெல்லாம் கேட்டுத்தெரிந்துகொண்டார். ஏதாவது குறை சொல்லப்பட்டால், உடனே அதனை நிவர்த்தி செய்யவும் உத்தரவிட்டார்! அந்த வித்தியாசமான விஜயத்தினால் கடுப்பாகிப்போன அவரது பெண் காரியதரிசி, ‘Sir this is not the way to deal with your enemies’ என்று பவ்யமாகக் கூறினார். அதைக் கேட்ட அவர் புன்னகைத்துக்கொண்டே, ‘Yes, I know. But have I not made them friends now?’ என்று கேட்டார்! பகைவனை அழிப்பதற்குரிய சிறந்த வழி அவனை நண்பனாக்கி விடுவதுதான் என்று சொன்னவரல்லவா!

யாரந்த உயர்ந்த மனிதர்? அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி! தனக்குப் பிடிக்காத நாடுகளின் மீதெல்லாம் வான்வழி குண்டுகள் போட்டு அனைவரையும், அனைத்தையும் காலி செய்துகொண்டிருக்கும் கொல்லரசான, ஸாரி, வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதி! தெரிந்தே தன் வசமிருக்கும் ஆயிரக்கணக்கான அலோபதி மருந்துக் கம்பெனிகளின் வழியாக கோடிக்கணக்கான உலக மக்களுக்கு லட்சோபலட்பம் மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் என்று கொடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை குழிக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதி!

ஆனால் அவரது காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு! ஆமாம். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியாக இருந்த மாமனிதர் ஆப்ரஹாம்லிங்கன்தான் (1809-65) அந்த ஜனாதிபதி.

முன்மாதிரி மனிதர்கள் என்று சிலரைத் தேர்ந்தெடுத்தால் அதில் லிங்கனின் பெயர் நிச்சயம் இருக்கும். கறுப்பின அடிமைகளின் விடுதலைக்கான பிரகடனத்தில் கையெழுத்துப் போட்டதனால் உயிரை இழந்தவர் அவர். அடிமைகளின் விடுதலையைத் தன் உயிரால் எழுதியவர். உயிரெழுத்தென்பது அதுதானோ! இன்று ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பதற்குக் காரணமாக அமைந்தவர் அவர்தான் என்றால் மிகையாகாது.

மூன்று நிமிடங்கள், 272 சொற்களில் ‘ஜனநாயகஅரசு’ என்பதற்கு அழகான, உலகப்புகழ் பெற்ற, எளிமையான வரையறையைச் சொன்னார். ‘The Government of the people, by the people and for the people’ என்று கெட்டிஸ்பர்க் யுத்தகளத்தில் அவர் பேசியதுதான் இன்றுவரை அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது. அதைவிடச் சுருக்கமான, எளிமையான, தெளிவானதொரு வரையறையை யாரும் சொல்லிவிடமுடியாது என்றே தோன்றுகிறது.

ஆரம்பகால வாழ்க்கை

அவருடைய வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது! அவர் பிறந்தபோது குடும்பம் இருந்த வீடு மரத்துண்டுகளால் மட்டுமே ஆனது. ஒரு கதவு, ஒரு ஜன்னல், ஒரு அடுப்பு அல்லது தீமூட்டிக் குளிர்காயுமிடம். அவ்வளவுதான். ஹால், படுக்கையறைகள், கழிவறைகள், பால்கனி, கொல்லை என எந்த வசதியும் கிடையாது! வீடு இருந்ததும் ஊருக்குள் அல்ல. மனித சந்தடியில்லாத தூரத்தில், எங்கோ காட்டுக்குள். அப்பா தாமஸ் லிங்கன் விவசாயி, தச்சர். எழுதப்படிக்கத் தெரியாதவர். அம்மா நான்ஸிக்கு எழுதப் படிக்கத் தெரியும். லிங்கனை உருவாக்கியதில் அம்மாவின் பங்கு அதிகம். உண்மை சொல்லவேண்டும், நன்மை செய்யவேண்டும், நேர்மையாக இருக்கவேண்டும் என்றெல்லாம் அவர் இதயத்தில் ஆழமாகப் பதித்தது அம்மாதான். வியாபாரம் செய்தபோது ஒரு கிழவி விட்டுவிட்டுப்போன 65 பைசாவை பல மைல்கள் நடந்து சென்று அவளுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்த நேர்மைக்குக் காரணம் அம்மாவின் தாக்கம் என்று சொல்லலாம். அவருக்கு ஒன்பது வயதிருந்தபோது அம்மா இறந்துபோனது ஈடு செய்ய முடியாத இழப்பு. தன் வாழ்வில் தனக்குக் கிடைத்த தேவதை என்று அம்மாவை அவர் நினைவு கூர்ந்தார்.

புத்தகங்களின், சட்டத்தின் காதலன்

அந்தக் காலத்தில் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை பிரம்பாலும் சாட்டையாலும் அடித்தார்கள். ஆனால்  லிங்கன் ஒருமுறைகூட அடிவாங்கியதில்லை. படிப்பில் அவ்வளவு சுட்டி! வீட்டில் இருந்த ஒரே புத்தகமான பைபிளை பலமுறை படித்து அவருக்கு அதில் பெருமளவு மனப்பாடமாக ஆகியிருந்தது.

ஒருமுறை ஆங்கில இலக்கணம் பற்றிய ஒரு நூலை வாங்கிப் படிப்பதற்காக கிர்காம் என்ற ஊருக்கு இருபது மைல்கள் நடந்தே சென்று வாங்கி வந்தார்! புத்தகங்களின்மீது அவருக்கு அவ்வளவு கிறுக்காம்!

சட்டத்தின் மீதிருந்த அதீத ஆசையால், வழக்கு நடப்பதை கவனிக்க அவருடைய வீட்டிலிருந்து பதினேழு மைல் தொலைவிலிருந்த உள்ளூர் நீதிமன்றம்வரை நடந்தே சென்று வழக்குகளை உன்னிப்பாக கவனித்தார்! ஒருமுறை பூன்வில் என்ற இடத்தில் ஜான்பெக்கன்ரிட்ஜ் என்ற கிரிமினல் வழக்கறிஞரின் வாதத்தை நேரில்சென்று பார்க்க முப்பத்து நான்கு மைல்கள் நடந்து சென்றார்! அவராகவே படித்து 1836ல் வழக்கறிஞரானார்! தன் வழக்கு தொடர்பான ‘பேப்பர்’களையெல்லாம் தன் நீண்ட கருப்புத்தொப்பிக்குள் போட்டு வைத்திருந்தார்!

அடிமை ரட்சகன்

ஜேம்ஸ்ஜெண்ட்ரி என்பவருக்காக சின்னச்சின்ன பொருள்களை விற்று நியூஆர்லியன்ஸ் என்ற ஊரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோதுதான் அடிமைகள் விற்கப்பட்டதையும், முதுகில் ரத்தம் வரும்வரை அவர்கள் அடிக்கப்பட்டதையும் நேரில் கண்டார்.  அந்தக் காட்சி அவர் மனதைப் பிழிந்தது. அவர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று அவர் துடித்துக்கொண்டிருந்தார். வழக்கறிஞரானதும் அந்த வாய்ப்பும் அவருக்கு வந்தது.

நான்ஸ் என்ற ஒரு கறுப்பின அடிமைப் பெண்ணுக்காக இல்லினாய்ஸ் பகுதியில் நடந்த வழக்கில், மனிதர்களை விற்பதும் வாங்குவதும் சட்டத்திற்குப் புறம்பானது என்று வாதாடி வென்றார். அடிமைகளுக்காக அவர் செய்த முதல் சேவை அதுதான் என்று சொல்லலாம்.

மல்யுத்த வீரர்

அபி உடல் உறுதியும் மன உறுதியும் ஒருங்கே அமையப்பெற்றவர். ஒருமுறை ஜாக்ஆம்ஸ்ட்ராங் என்ற மல்யுத்த வீரனை அவன் சவால் விட்டதன் பேரில் அவனோடு சண்டைபோட்டு வென்றார்!

சின்னப்பெண்ணுக்கு சேவை

ஒருமுறை நீதிமன்றத்திலிருந்து அவர் வெளியே வந்தபோது ஒரு சின்னப்பெண் தன் பெட்டியுடன் ரொம்ப சோகமாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தார். என்ன விஷயம் என்று விசாரித்தார். தன் ஊருக்கான வண்டியை விட்டுவிட்டதாக அவள் சொன்னாள். அவளுக்கு ஆறுதல் சொன்ன அவர், உடனே அவளது பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அவளையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த ரயில்வே ஸ்டேஷன் சென்று அவள் செல்லவேண்டிய ஊருக்கு டிக்கட் எடுத்துக்கொடுத்து அவளை ரயிலேற்றி அனுப்பிவைத்தார்!

சிறுமியின் கடிதத்துக்கு மரியாதை

1860ல் ஜனாதிபதி பதவிக்காக முதன்முறையாக லிங்கன் போட்டியிட்ட நேரம். க்ரேஸ் பெடல் என்ற ஒரு சின்னப்பெண்ணிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் கன்னங்கள் ‘டொக்கு’ விழுந்திருப்பதாகவும், தாடி வைத்துக்கொண்டால் அது அவருக்கு அழகாக இருக்கும் என்றும், அப்படிச் செய்தால் தன் அண்ணன்களை அவருக்கு வாக்களிக்கச் சொல்வேன் என்றும் க்ரேஸ் கூறியிருந்தாள்! சின்னப்பெண் எழுதிய கடிதம்தானே என்று நினைக்காமல் அவளை மதித்து அவர் பின்னாளில் தாடி வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்ல. ஜனாதிபதியானபிறகு அந்தச் சிறுமியைச் சந்தித்து நீ சொன்னமாதிரியே செய்துவிட்டேன் என்றுசொல்லி பலர் முன்னிலையில் அவளை கௌரவப்படுத்தினார்!

நகைச்சுவை நாயகன்

நேரத்துக்கு ஏற்றவாறு சட்டென்று பதில்கொடுப்பதில் லிங்கன் நிபுணர். ஒருமுறை தன் 14-சைஸ் ஷூவுக்குப் பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார்! அப்போது அவர் அமெரிக்க ஜனாதிபதி! அதைப் பார்த்த ஒரு விஐபி, ‘உங்க ஷூவுக்கு நீங்களேவா பாலீஷ் போடுகிறீர்கள்?’ என்று கேட்டார். உடனே லிங்கன், ‘நீங்கள் யாருடைய ஷூவுக்குப் பாலீஷ் போடுவீர்கள்?’ என்று திருப்பிக் கேட்டார்!

லிங்கன் எல்லா வகையிலும் மிகவும் உயர்ந்த மனிதர். ஆமாம். ஆறடி நாலங்குலம்! குறிப்பாக அவருக்கு மிக நீண்ட கால்கள். அதுபற்றி ஒருமுறை கிண்டலாக அவரிடம் ‘ஒரு  மனிதருடைய கால்கள் எவ்வளவு நீளம் இருக்கலாம்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு உடனே அவர், ‘தரையைத் தொடுமளவுக்கு நீளமாக இருந்தால் போதும்’ என்று சொன்னார்!

அவரைப்போலவே அவருடைய மகனும் இருந்தான். ஒருமுறை அவருடைய மகன் வளர்த்த வான்கோழி வாக்களிக்கும் ‘பூத்’களுக்கு மத்தியில் சுற்றிக்கொண்டிருந்தது. ‘என்னப்பா, உன் வான்கோழியும் வாக்களிக்கப் போகிறதா?’ என்று மகனைக் கிண்டலாகக் கேட்டார் ஜனாதிபதி லிங்கன்! அதற்கு மகன், ‘இல்லை அப்பா, அதற்கு இன்னும் வாக்களிக்கும் வயது வரவில்லை’ என்று ‘சீரிய’ஸாகச் சொன்னான்!

ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

தன் மகனுக்கு என்னென்ன சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று லிங்கன் ஆசிரியர் ஒருவருக்கு எழுதிய கடிதம் உலகப்புகழ் பெற்றது. அதிலிருந்து ஒரு சில வரிகள்:


‘புத்தகங்கள் என்ற அதிசயத்தை அவனுக்குப் புரிய வையுங்கள்…

வானத்துப் பறவைகள், சூரியனுக்கு கீழே தேனீக்கள், பச்சை வயல்வெளிகளில் இருக்கும் பூக்கள் இவை பற்றிய ரகசியங்களை அவன் அறிந்து கொள்ள நேரம் கொடுங்கள்…

எல்லாருமே தவறு என்று சொன்னாலும், தன்னுடைய கருத்துக்களில் நம்பிக்கை வைக்கும்படி அவனுக்கு சொல்லிக்கொடுங்கள்…

மிருதுவானவர்களிடம் மிருதுவாகவும், அடாவடியானவர்களிடம் அடாவடியாகவும் நடந்துகொள்ள கற்றுக்கொடுங்கள்…

கும்பலைப் பின்பற்றக் கூடாது என்று என் மகனுக்குக் கற்றுக்கொடுங்கள்…

சோகமாக இருக்கும்போது எப்படி சிரிப்பது என்றும், அழுவதில் எந்த அவமானமும் இல்லை என்றும் அவனுக்கு சொல்லிக்கொடுங்கள்…

அவனுடைய மூளையை மிக அதிக  விலைக்கு விற்கவும், அதே சமயம் அவனுடைய இதயத்துக்கும் ஆன்மாவுக்கும் எந்த விலையும் வைத்துவிடாமல் இருக்கவும் கற்றுக்கொடுங்கள்…

அவனிடம் மிருதுவாக நடந்துகொள்ளுங்கள், ஆனால் அதற்காக அவனைக் கொஞ்சிக்கொண்டிருக்காதீர்கள். ஏனெனில், நெருப்பிலிடும்போதுதான் ஸ்டீல் உறுதி பெறுகிறது…

இது பெரிய உத்தரவுதான். உங்களால் என்னவெல்லாம் முடியும் என்று பாருங்கள். அவன் அழகான சின்னப் பையன், என் மகன்!

ஆப்ரஹாம் லிங்கன்.


விடுதலைப் பிரகடனம்

1862ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி ‘இமான்சிபேஷன் ப்ரொக்லமேஷன்’ என்று அறியப்படும் விடுதலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார் லிங்கன். அது 1863ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து அமுலுக்கு வந்தது. அன்றிலிருந்து அமெரிக்காவில் அடிமைகள் யாரும் கிடையாது. அவர்கள் நிரந்தரமாக விடுதலை பெறுகிறார்கள் என்று அந்தப் பிரகடனம் கூறியது. தன் வாழ்க்கையில் செய்த மிகச்சரியான காரியம் அதுதான் என்று எனக்கு நிச்சயமாகத் தோன்றியது என்று அதில் கையெடுத்திட்டதைப் பற்றி லிங்கன் கூறினார்.

அவர் ஜனாதிபதியாக ஆன போதுகூட வடக்கு, மேற்கு மாகாணங்களின் ஆதரவுடன்தான் அதிக வாக்கு எண்ணிகையில் வெற்றிபெற்றார். கிட்டத்தட்ட ஆயிரம் தெற்கு மாகாணங்கள் இருந்தன. அவை அடிமைத் தளையை ஆதரித்தன. அவற்றில் இரண்டில் மட்டுமே அவர் வெற்றி பெற்றிருந்தார்! தெற்கு மாகாணங்களெல்லாம் ஒன்று சேர்ந்து கான்ஃபெடரேட்ஸ் (Confederates) என்ற பெயரில் தனி அரசமைத்தன. லிங்கனின் கட்டுப்பாட்டிலிருந்த யூனியன் பிரதேசத்துக்கும் கான்ஃபெடரேட்ஸுக்கும் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. 1861ல் தொடங்கிய அந்த யுத்தம் ஆயிரக்கணக்கானவர்களின் ரத்தத்தைக் குடித்த பிறகு 1865ல் முடிவுற்றது. லிங்கனுக்கு இறுதியில் வெற்றி கிடைத்தது. ஆனால் அடிமைத்தளையை ஒழித்த அந்த பிரகடனமும் அந்த யுத்தமும் அவரின் உயிருக்கே உலை வைத்தது. ஏனெனில் அடிமைத் தளையை விரும்பிய பல மனிதர்களின் மனங்களில் லிங்கனுக்கு எதிரான வெறுப்பு பற்றி எரிந்துகொண்டிருந்தது.

விடுதலையின் விலை

லிங்கனுக்கு எதிராக வெறுப்பின் நெருப்பை மனதில் எரியவிட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவன் பெயர் ஜான் வில்கின்ஸ் பூத். அவன் ஒரு நாடக நடிகன். தென்மாகாணங்களின் தோல்விக்கு லிங்கனே காரணம் என்றும் அவன் கடுப்பாகியிருந்தான். அவரைக் கொல்ல தருணம் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த நேரமும் வந்தது.

1865, ஏப்ரல் பதினான்காம் தேதி லிங்கன் தன் மனைவியோடு ‘Our American Cousins’ என்ற நாடகம் பார்க்க ஃபோர்டு தியேட்டருக்குச் சென்றார். நாடகம் நடந்துகொண்டிருந்தபோது திடீரென்று ஜனாதிபதி இருந்த பெட்டி அறைக்குள் நுழைந்த அவன் துப்பாக்கியை எடுத்து அவர் பிடரியில் சுட்டான். காலை ஒடித்துக்கொண்டாலும் அவன் குதித்து ஓடித்தப்பித்தான். ஆடியன்ஸில் இருந்த ஒரு மருத்துவர் முயன்றும் பயனின்றி லிங்கன் உயிர் பிரிந்தது.

முன்னறிவிப்புக் கனவு

லிங்கன் இறந்து போவதற்கு மூன்று நாட்களுக்கு முன் ஒரு கனவு கண்டார். அதில் பாராளுமன்ற வளாகத்தில் நிறையபேர் கூக்குரலிட்டு அழுதனர். ஏனிவ்வளவு சப்தம்? என்ன நடக்கிறது வெள்ளை மாளிகையில்? என்று லிங்கன் கேட்கிறார். ‘ஜனாதிபதி இறந்துவிட்டார்’ என்று பாதுகாப்பு அதிகாரி அதற்கு பதில் கூறுகிறார்! இக்கனவை அவர் தன் மனைவியிடமும் தன் பாதுகாப்பு அலுவலர் லமான் என்பவரிடமும் கூறுகிறார். Recollections of Abraham Lincoln என்ற நூலில் லமான் இந்நிகழ்ச்சியைப் பதிவு செய்கிறார்! கனவுதானே என்று நாம் அலட்சியப்படுத்திவிடுகிறோம். ஆனால் இறைவன் நமக்கான செய்திகளை கனவுகள் மூலமாகவும் அனுப்பலாம்!

  • தோல்விகண்டு துவளாதவர்

  • ஒன்பது வயதில் அம்மாவை இழந்தார்.

  • 22வயதில் வேலைபோனது

  • 23 வயதில் கடன்தொல்லை அதிகமானது

  • 29வயதில் ஸ்பீக்கர் எலக்‌ஷனில் தோல்வி

  • 35வயதில் காங்கிரஸ் வேட்பாளராக இரண்டுமுறை தோல்வி

  • 39வயதில் மறுதேர்வில் தோல்வி

  • 41வயதில் மகன் இறப்பு

  • 45வயதில் செனட் தேர்தலில் தோல்வி

  • 47வயதில் துணைஜனாதிபதி தேர்வில் தோல்வி

  • 49வயதில் செனட்டில் மீண்டும் தோல்வி

  • 51வது வயதில் அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாகத் தேர்வு!

‘ஒரு மரத்தை வெட்டித்தள்ளுவதற்கு எனக்கு ஆறுமணிநேரம் கொடுத்தீர்களென்றால் நான்கு மணிநேரத்துக்கு நான் கோடரியை தீட்டிக் கூர்மையாக்கிக்கொண்டிருப்பேன்’ என்று லிங்கன் கூறினார்.

அற்புதமான வார்த்தைகள்! எதைச்செய்வதென்றாலும் அதற்கு நம்மைச் சரியாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வரிகள். லிங்கனின் வாழ்க்கை நமக்கு இரண்டு பாடங்களைச் சொல்கிறது:

ஒன்று, வாழ்க்கை முழுவதும் உன்னைத் தயார்படுத்திக்கொண்டே இரு.

இரண்டு, லட்சியமா உயிரா என்றால் லட்சியம்தான் முக்கியம்.

மனிதர்கள் அனைவரும் ஒருநாள் போய்த்தானாகவேண்டும். இன்று கொலை செய்பவனும் நாளை உதிர்ந்த இலையாகிவிடுவான். ஆனால் சக மனிதர்களுக்கு சேவைசெய்யும் மனிதன் மட்டும் சாவதே இல்லை. ஆபிரஹாம்லிங்கனின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி அதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! டிரம்ப்

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

SCROLL FOR NEXT