வரலாறு படைத்த வரலாறு

பார்வையற்ற விளக்கு

‘சந்தோஷத்தின் கதவு ஒன்று மூடப்படும்போது, இன்னொரு கதவு திறக்கப்படுகிறது. ஆனால் மூடப்பட்ட கதவையே நாம் வெகுநேரம்

நாகூர் ரூமி

‘சந்தோஷத்தின் கதவு ஒன்று மூடப்படும்போது, இன்னொரு கதவு திறக்கப்படுகிறது. ஆனால் மூடப்பட்ட கதவையே நாம் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பதால், நமக்காகத் திறக்கப்பட்ட இன்னொரு கதவைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்’.

அற்புதமான, சத்தியமான சொற்கள்! சொன்னது யார்? சொன்னவரும்  அற்புதமானவர்தான். பகீரதப்பிரயத்தனம், இமாலய முயற்சி என்றெல்லாம் சொல்கிறோம். பகீரதன் கங்கையைக் கொண்டுவரப் பிரயத்தனப்பட்டது கதையில். இமயமலைமேல் ஏறிய முயற்சிகள் சாதனைகள்தான். ஆனால் அவையெல்லாவற்றையும்விட பெரிய சாதனையை ஒருவர் செய்தார். சாதிக்கவேண்டும் என்று துடிக்கின்ற அனைவருக்கும் அவர் ஒரு லட்சிய முன்மாதிரி. குறிப்பாகப் பெண்களுக்கு! ஏன்? அவரும் ஒரு பெண்! மேலேயுள்ள அழகான உண்மையின் வரிகளுக்குச் சொந்தக்காரியும் அவர்தான். அவரது கருப்பு வெள்ளை ஒளிப்படத்தைப் பார்த்தபோது இவ்வளவு அழகான பெண்ணா என்று நான் அசந்துபோனேன். அதேசமயம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாததொரு துக்கம் என் தொண்டையை அடைத்தது. ஏன்?

அந்த அழகான பெண்ணால் பார்க்கவும், கேட்கவும் பேசவும் முடியாது! ஆனால் அந்த ஊனங்களையெல்லாம் தன் மனஉறுதியால் வென்று, இருபத்தைந்து ஆண்டுகள் முயன்று உலகம் புகழும் பேச்சாளரானார்! பார்வையற்றவர்கள் வாழ்வில் ஒளியைக் கொண்டுவர வாழும் காலமெல்லாம் உழைத்தார். பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார். வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மகத்தான தனிமனித சாதனை அவரதுதான். அந்த மெகா சாதனையின் பெயர் ஹெலன் கெல்லர்!

1880 ஜூன் 27 அன்று பிறந்தார் ஹெலன். பிறக்கும்போது ஆரோக்கியமான குழந்தையாகத்தான் பிறந்தார். ஆறுமாதக் குழந்தையாக இருந்தபோதே பேச ஆரம்பித்துவிட்டார். ஒரு வயதானபோது தான் நினைப்பதை தன் பெற்றோர்களிடம் அவரால் சொல்ல முடிந்தது. நடக்கவும் ஆரம்பித்துவிட்டது அந்த சுட்டிக்குழந்தை.

சனியன் பிடித்த காய்ச்சல்

ஆனால் ஒன்றரை வயதானபோது பாழாய்ப்போன காய்ச்சல் ஒன்று வந்தது. அன்று பிடித்தது சனியன் ஹெலனுக்கு. பலநாட்கள் நீடித்த காய்ச்சல் ஒருநாள் காலை ஓடிப்போனது. ஆனால் சும்மா போகவில்லை. தாங்கமுடியாத சோகத்தை அந்தக் குழந்தையின்மீது திணித்துவிட்டுத்தான் சென்றது. ஹெலனின் கண்களையும் காதுகளையும் நிரந்தரமாக மூடிவிட்டுப்போனது. அன்று முதல் குருடாகவும் செவிடாகவும் ஆகிப்போனார் ஹெலன்!

நிசப்தம் மற்றும் இருளால் சூழப்பட்ட, குறிக்கோளற்ற, பகல்களே இல்லாத வாழ்க்கையாகிப்போனது ஹெலனுக்கு. அந்தக்கொடுமை எப்படியிருக்கும் என்று எனக்குக் கொஞ்சம் தெரியும். நான் வேண்டுமென்றே ஒருநாளைக்கு மௌனவிரதம் கடைப்பிடிப்பேன். மனிதர்கள் எப்படியெல்லாம் தேவையில்லாமல் பேசுகிறார்கள், நம்மால் பேசவே முடியாவிட்டால் என்னவொரு வேதனை என்றெல்லாம் அப்போது புரிந்துகொண்டேன். ஆனால் அதுவே வாழ்க்கையாகிப்போனால்? நினைக்கவே கஷ்டமாக இருந்தது. ஆனால் ஹெலனுக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் அமைந்தது. அவரது ஆற்றல்கள் யாவும் முடங்கிப் போயின. ‘எனது ஆசிரியை (ஆன்சுலிவன்) வந்தபிறகுதான் என் ஆற்றல்கள் விடுதலைபெற்றன’ என்று தன் வாழ்க்கை வரலாற்றில் ஹெலன்கெல்லர் கூறுகிறார்.

ஹெலனின் நோய்க்கு என்ன காரணம் என்று வழக்கம்போல டாக்டருக்குத் தெரியவில்லை. வயிற்றிலும்  மூளையிலும் ரத்தம் அதிகமாகக் கட்டிக்கொண்ட மூளைக்காய்ச்சல் பிரச்சனையாக இருக்கலாம் என்று சொன்னார். அவர் வயிற்றுக்கு ஏற்படவிருந்த பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு அப்படிச் சொல்லியிருப்பார் போலும்! டாக்டருக்குப் புரியாவிட்டால் நமக்கு விளங்காத ஒரு பெயரை நோய்க்கு வைத்துவிடுவார். அப்படித்தான் ஹெலன் விஷயத்திலும் நடந்தது. ‘ஸ்கார்லட் ஃபீவர் அல்லது மெனிஞ்சைட்டிஸ் என்பதாக இருக்கலாம்’ என்றார். அலோபதி டாக்டர்களைப் பொறுத்தவரை எல்லாமே ‘லாம்’கள்தான்! ஹெலனுக்கு மூளைக்காய்ச்சல் என்று சொன்னது ஒரு மூளைச்சலவையாகக்கூட இருக்கலாம். (ச்சே, இங்கேயும் ‘லாம்’ வந்துவிட்டது, நீங்கள் என்னை இங்கே மன்னிக்கலாம்). இந்த ’லாம்’களைவிட மோசமானது ஹெலன் இனி பிழைக்க வழியில்லை என்று கடைசியில் டாக்டர் சொன்னதுதான்! உலகசாதனையொன்றை நிகழ்த்தவிருந்த மகா ஆளுமை பற்றிய டாக்டரின் முன்னறிவிப்பு!

ஹெலனின் அன்றாடக்குறும்புகள்

ஹெலன் இயற்கையிலேயே அடாவடியான குழந்தை. இப்போது பார்க்கவும் கேட்கவும் முடியாது. எனவே பிடிவாதமும் முரட்டுத்தனமும் இன்னும் அதிகமானது. கோபமானால் அலறித் தீர்த்துவிடுவாள்; உதைப்பாள். சந்தோஷமாக இருந்தால் கெக்கெக்கெக்கே என்று சப்தமாக சிரித்துக்கொண்டே இருப்பாள். கோபத்தைத் தணிக்க தோட்டத்துப் பூக்களிலும் இலைகளிலும் முகத்தைப் புதைத்துக்கொள்வாள்!

பெற்றோரோடு உரையாட, தனக்கு வேண்டியதைக் கேட்டுப்பெற, கிட்டத்தட்ட 60 வகையான உடல் மொழியினை, அசைவுகளை ஏழுவயதிலேயே உருவாக்கியிருந்தாள்! ப்ரெட் வேண்டுமெனில் அவற்றை ஸ்லைகளாக வெட்டுவதுபோலவும், அவற்றின்மீது வெண்ணெய் தடவுவது போலவும் காட்டுவாள். ஐஸ்க்ரீம் வேண்டுமென்றால் ரொம்ப குளிருவதுபோல நடுநடுங்குவாள். வீட்டு சமையல்காரியின் மகள் மார்த்தாதான் விளையாட்டு ஜோடி. இருவரும் சேர்ந்து பறவைகளின் முட்டைகளை எடுப்பது, சமையல்கட்டில் ரொட்டிமாவு பிசைவது, ஐஸ்க்ரீம் செய்வது, கோழிக்குஞ்சுகளுக்கும்  வான்கோழிகளுக்கும் கொத்த ஏதாவது போடுவது என்று எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை பாவாடையில் பட்ட தண்ணீரைக் காயவைக்கிறேன் என்று நெருப்பினருகில் செல்ல, பாவாடையில் தீபற்றிக்கொண்டது. வினி என்ற நர்ஸ்தான் ஹெலன்மீது போர்வையைப் போட்டு காப்பாற்றினார்.

ஆனால் ஹெலனின் குறும்புகள் வளர்ந்துகொண்டுதான் சென்றன. ஒருமுறை அவருடைய அம்மாவையே அறையில் வைத்துப் பூட்டிவிட்டார். மூன்று மணி நேரத்துக்குமேல் அவர் அறைக்குள்ளிருந்து கதவை தட்டிக்கொண்டே இருந்தார். அதை ஹெலன் ரசித்துக்கொண்டிருந்தார்! அவருடைய ஆசிரியை சுலிவனையும் இப்படி ஒருமுறை அடைத்துவைத்தார். கடைசியில் ஹெலனின் அப்பா ஏணி வைத்து ஜன்னல் வழியாகத்தான் சுலிவனை வெளியே அழைத்துவர முடிந்தது!

ஐந்து வயதானபோது தன்னுடைய உடைகள் எவை மற்றவர்களுடையவை எவை ஹெலனால் பிரித்துணர முடிந்தது. ஆன் சுலிவன் என்ற மகத்தான பெண் ஆசிரியையாக  வருவதற்கு முன்பே, தான் மற்றவர்களைப்போல இல்லை, ஏதாவது வேண்டுமென்றால் மற்றவர்களெல்லாம் வாய்களையே பயன்படுத்துகின்றனர், தன்னைப்போல சமிக்ஞைகள் செய்துகாட்டுவதில்லை என்று ஹெலன் உணர்ந்துகொண்டார்.

அலக்சாண்டர் க்ரஹாம்பெல் திறந்த கதவு

காது கேளாத, கண்பார்வையற்ற குழந்தைகளுக்கான பள்ளிகளெல்லாம் ஹெலனின் ஊரான டஸ்கம்ப்ரியாவிலிருந்து வெகுதொலைவில் இருந்தன. அவ்வளவு தூரம்வந்து ஒரு குருட்டு, செவிட்டுக் குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்க யாரும் முன்வரவில்லை.  ஆனால் ஹெலனுக்கு ஏதாகிலும் செய்யவேண்டும் என்ற பற்றி எரியும் ஆசை ஹெலனின் அம்மாவுக்கு இருந்தது. லாரா என்ற குருட்டு, செவிட்டுப் பெண் கல்விகற்றுக்கொண்டது பற்றி டிக்கன்ஸ் எழுதிய ஒரு கட்டுரையைஹெலனின் அம்மா படித்தார். அதனால் உந்தப்பட்டு சிசோம் என்ற மருத்துவரைப் போய் பெற்றோர் பார்த்தனர். அவரால் ஒன்றும் உதவமுடியவில்லை. ஆனால் (தொலைபேசியைக் கண்டுபிடித்த ) க்ரஹாம் பெல்லிடம் ஹெலனை அழைத்துச் செல்லுமாறு அவர் ஆலோசனை கூறினார். (தொலைபேசியில் மணி ஒலிக்கிறது. அதைக்கண்டுபிடித்தவரின் பெயரில் ‘பெல்’ இருக்கிறது! இது தற்செயலா, தெய்வச்செயலா)? காதுகேளாத குழந்தைகளுக்காக க்ரஹாம்பெல் ஏதேதோ செய்துகொண்டிருந்தார்.

பெல் மிகவும் அன்பாக ஹெலனோடு பழகினார். அவளைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டார். அவரது வாட்ச்சோடு அவளை விளையாட வைத்தார். இருளிலிலிருந்து ஒளிக்கும், தனிமையிலிருந்து நட்புறவுக்குள்ளும் போவதற்கான கதவுதான் அந்த சந்திப்பு என்று ஹெலனுக்கு அப்போது புரியவில்லை. பார்வையற்றவர்களுக்கு நடத்தப்பட்ட பெர்கின்ஸன் இன்ஸ்ட்டிட்யூட் சென்று அங்கே ஹெலனுக்கு யாராவது ஆசிரியை கிடைக்குமா என்று அதன் இயக்குனரைக் கேட்குமாறு ஆலோசனை வழங்கினார் க்ரஹாம்பெல். அப்படியே ஹெலனின் பெற்றோரும் செய்தனர். சில வாரங்களுக்குப் பிறகு ஒரு ஆசிரியை கிடைத்துவிட்டதாக தகவல் வந்தது.

ஆன் சுலிவனின் வருகை

1887. மார்ச் மூன்றாம் தேதி. அன்றுதான் ஹெலனின் வாழ்வில் ஒளிவிளக்கு வந்த நாள். அன்றுதான் ஆன்சுலிவன் என்ற மகத்தான ஆசிரியை வந்தார். அப்போது ஏழுவயதாவதற்கு மூன்று மாதங்கள் பாக்கியிருந்தன ஹெலனுக்கு. தன் வாழ்க்கையின் ‘அதிமுக்கியமான நாள்’ அதுதான் என்றார் ஹெலன்.

சுலிவன் வந்து ஹெலனை அணைத்துக்கொண்டார். கண்பார்வையற்ற குழந்தைகள் செய்திருந்த ஒரு பொம்மையை ஹெலனுக்குப் பரிசாகக்கொடுத்தார். ஹெலனுடைய கையை விரித்து உள்ளங்கையில் ‘பொம்மை’ என்று ஒவ்வொரு எழுத்தாக எழுதிக்காட்டினார். அந்த ‘விளையாட்டு’ ஹெலனுக்கு மிகவும் பிடித்திருந்தது! ஏனெனில் தன் கையில் எழுதப்பட்டது ஒரு சொல் என்றுகூட ஹெலனுக்குத் தெரியாது! அடுத்து வந்த நாட்களில் இப்படி நிறைய சொற்களை எழுதக்கற்றுக்கொண்டார். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் இருந்தது என்று மெல்லமெல்ல ஹெலனுக்குப் புரிய ஆரம்பித்தது!

ஒருநாள் ஹெலனும் சுலிவனும் ‘வாக்கிங்’ போய்க்கொண்டிருந்தனர். ஒரு குழாயிலிருந்து தண்ணீர் பீறி வந்துகொண்டிருந்தது. ஹெலனின் ஒருகையை அந்தக் குழாய்க்கு அடியில் வைத்து இன்னொரு கையில் ‘த+ண்+ணீ+ர்’ என்று ஒவ்வொரு எழுத்தாக எழுதிக்காட்டினார் சுலிவன். அந்த அனுபவம் மறக்கமுடியாததாக மாறிப்போனது ஹெலனின் வாழ்வில். சொல்லுக்கு உயிர் இருப்பதை முதன்முறையாக ஹெலன் உணர்ந்தார். உயிர்கொண்ட அந்தச் சொல் அவரது ஆன்மாவை உசுப்பிவிட்டது. அதற்கு ‘ஒளியையும் நம்பிக்கையையும் கொடுத்து அதை சுதந்திரமாக்கியது’. அதன்பிறகு தான் தொட்ட ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் உயிர் இருந்ததை ஹெலன் உணர்ந்துகொண்டார். இப்படியே பாடம் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. ப்ரெய்ல் முறையில் படிக்கவும் கற்றுக்கொண்டார் ஹெலன். எல்லாவற்றையும் கதைகள், கவிதைகள் சொல்லிப் புரிய வைத்தார் சுலிவன். ஆனால் ஹெலன்கெல்லருக்கு – எனக்கும்தான் – பிடிக்காத பாடம் கணிதம்தான்!

ஒருமுறை கடலில் அவரைக் குளிக்க வைத்தனர். அலைகள் வந்து மோதி ஹெலனை முழுக்க நனைத்து வாய், காது மூக்கெல்லாம் கடல்நீர் புகுந்து அலைக்கழித்தது.  குளியல் முடிந்தபிறகு ஹெலன் கேட்ட முதல் கேள்வி: ‘தண்ணீருக்குள் இவ்வளவு உப்பைப் போட்டது யார்?’

மீண்டும் உயிர்பெற்றது பேச்சு

செத்துப்போன லசாரஸ் மீண்டும் இயேசுவின் பிரார்த்தனையால் உயிர்பெற்றதுபோல 1890ல் – சுலிவன் வந்து மூன்று ஆண்டுகள் கழித்து – மீண்டும் வாயால் பேசக்கற்றுக்கொண்டார் ஹெலன். சுலிவன் ஹெலனுக்கு நிகழ்த்திய அற்புதம் அது. பேசுவது என்றால் என்னவென்று காதுகேளாமல் போனபிறகு அவருக்கு மறந்துபோயிருந்தது! ஒரு கையை தொண்டையில் வைத்துக்கொண்டு இன்னொரு கையை உதடுகளில் வைத்து ஒலியெழுப்பி அதிர்வுகளைக் கவனிப்பார். பாடும்போது பாடகரின் தொண்டையிலும், பியானோ வாசிக்கப்படும்போது அதன்மீதும் கைவைத்து உணர்வார்.

ஆனால் அவர் வாயால் பேச முயற்சி செய்வது ஏமாற்றத்தில் முடியலாம் என்று அவரது தோழிகள் நினைத்தனர். ஆனால் ஹெலன் விடவில்லை. ஏற்கனவே இப்படி முயன்று வென்றிருந்த காட்டா என்ற நார்வே நாட்டுப் பெண்ணைப்பற்றி கேள்விப்பட்டிருந்தார். எனவே தானும் எப்படியாவது வாயால் பேசிவிடவேண்டும் என்ற ஆசைத்தீ பற்றி எரிய ஆரம்பித்தது. சாரா என்ற ஒரு பள்ளித்தலைமை ஆசிரியை உதவியுடன் அந்த முயற்சியும் 180 மார்ச் 26ம் தேதி தொடங்கியது.

சாரா ஏதாவது ஒரு ஒலியெழுப்பும்போது லேசாக அவர் நாக்கையும் உதடுகளையும் தொட்டுப்பார்க்க ஹெலன் அனுமதிக்கப்பட்டார். இப்படி பேசக்கற்றுக்கொண்ட ஹெலன் ‘இது கதகதப்பாக இருக்கிறது’ (It is warm) என்ற முதல் வாக்கியத்தைப் பேசினார். ஆனால் இது ஒன்றும் சுலபமாக இருக்கவில்லை. ஹெலன் பேசியது சாராவுக்கும் சுலிவனுக்கும்தான் புரிந்தது. ஆனால் போகப்போக எல்லா மனிதர்களையும்போல தானும் பேசவேண்டும் என்ற ஹெலனின் ஆசை நிறைவேறியது.

இளங்கலைப் பட்டம்

1896ம் ஆண்டு காம்ப்ரிட்ஜ் ஸ்கூல் ஃபார் யங் லேடீஸ் பள்ளியில் சேர்ந்தார். அவரோடு சுலிவனும் போவார். நடத்தப்படும் பாடங்களை அவர் கேட்டு ஹெலனுக்கு விளக்கிச்சொல்வார். அவர்கள் சொல்வதையெல்லாம் மகாபொறுமையோடு ஹெலனின் கைகளில் எழுதிக்காட்டுவார். இவ்விதமாக ஆங்கில இலக்கியம், வரலாறு, கணிதம், ஜெர்மன், லத்தீன் ஆகிய பாடங்களைப் படித்து எல்லாவற்றிலும் ‘ஹானர்ஸ்’ வாங்கி ‘பாஸ்’ ஆகி 1899ல் ராட்க்ளிஃப் கல்லூரியில் சேர இறுதித்தேர்வு எழுதி, 1904ம் ஆண்டு பட்டமும் பெற்றார் ஹெலன்! முதன்முதலாக கலை இலக்கியத்தில் இளங்கலைப்பட்டம் பெற்ற பார்வையற்ற, கேள்வியற்ற பெண்மணி ஹெலன்தான்!

ஹெலனின் கைகளைப் பிடித்துக்கொண்டே 1936ல் ஆன்சுலிவன் இறந்துபோனார். நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஹெலனோடு, ஹெலனுக்காகவே அவர் வாழ்ந்தார்! அவரது வரவும், உறவும், பிரிவும் காவியமாக கொண்டாடப்பட வேண்டிய விஷயங்களாகும். கற்றுக்கொடுப்பவர்கள் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் அவரிடம் அனேகமுண்டு! ஆன்சுலிவனுக்கும் பார்வைக் கோளாறு இருந்தது என்பது நம்மை வியப்பிலாழ்த்தும் இன்னொரு தகவல் !

ஹெலன் கெல்லர் சில தகவல்கள்

  • அவரது இடதுகண் வெளியே துருத்திக்கொண்டிருக்குமாகையால் அவரை எப்போதுமே பக்கவாட்டிலேயே நிழல்படமெடுத்தனர்.

  • மருத்துவக் காரணங்களுக்காக அவரது இளமைக்காலத்தில் இரண்டு கண்களையும் எடுத்துவிட்டு கண்ணாடியால் ஆன கண்கள் பொருத்தப்பட்டன.

  • ஹெலன் கெல்லர் உலகப்புகழ் பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் ஆனார்.

  • நாற்பது நாடுகளுக்குமேல் ஆன்சுலிவனோடு பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக ஜப்பானில் இவருக்கு நிறைய ரசிக ரசிகைகள் உண்டு.

  • லிண்டன் ஜான்சனிலிருந்து கென்னடி வரை, எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் ஹெலன்கெல்லருக்கு தோழர்கள்.

  • உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் எல்லாம் ஹெலனுக்கு நண்பர்கள். உதாரணமாக க்ரஹாம் பெல், சார்லி சாப்ளின், மார்க் ட்வைன்.

  • பன்னிரண்டு நூல்களை ஹெலன் கெல்லர் எழுதியுள்ளார்

  • 1964ல் ப்ரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் என்ற உயரிய உள்நாட்டு விருது கொடுக்கப்பட்டது.

  • 1965ல் நேஷனல் விமன்ஸ் ஹால் ஆஃப் ஃபேம் என்ற புகழ்பெற்ற மனிதர்களுடைய பட்டியல் அடங்கிய மாளிகையில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

  • 1968ம் ஆண்டு ஜூன் முதல் தேதியன்று உறக்கத்திலேயே மீளாத உறக்கத்துக்குச் சென்றார் ஹெலன் கெல்லர்.

  • ஆன் சுலிவனுடைய அஸ்தி புதைக்கப்பட்ட இடத்துக்குப் பக்கத்திலேயே ஹெலனது அஸ்தியும் புதைக்கப்பட்டது.

  • ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் அதிசுவாரஸ்யமான இரண்டுபேர்களில் ஒருவர் நெப்போலியன், இன்னொருவர் ஹெலன் கெல்லர்’ என்று மிகச்சரியாகச் சொன்னார் மார்க் ட்வைன்.

  • ‘பார்வையற்றவர்களுடைய ஆகப்பெரிய பிரச்சனை பார்வையின்மையல்ல. அவர்களைப் பார்க்கின்ற மனிதர்களுடைய அணுகுமுறைதான்’ என்றார் ஹெலன் கெல்லர். இனியாவது பார்வையற்றவர்களை நோக்கிய நமது பார்வை மாறுமா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! டிரம்ப்

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

SCROLL FOR NEXT