எந்த மொழி?
அரசின் அதிகாரப்பூர்வமொழி மக்கள் மொழியாக இருக்கவேண்டும். யந்திரத்தின் செயற்கையான மொழிபெயர்ப்பாக இருக்கக்கூடாது. ‘சைக்கிள்’ போன்ற வழக்கிலுள்ள ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துவதே சரி. பதிலாக ‘திவிச்சக்கரவாஹி’ என்பதெல்லாம் சரியாக வராது என்று அழுத்தமாகக் கூறினார் நேரு (பக்கம் 43). ‘ஐயா, இந்தக் காசோலையை எந்த வங்கியில் இடவேண்டும்?’ என்று யாரவது நம்மிடம் கேட்டால் அவரை எப்படிப் பார்ப்போம்?! இதை நேரு அன்றே தீர்க்கதரிசனத்தோடு யோசித்துள்ளார்!
நேருவுக்கு ஆங்கிலம், உர்து, ஹிந்தி ஆகிய மொழிகள் மிக நன்றாகவும், சமஸ்கிருதம், ஃப்ரெஞ்ச், லத்தின் ஆகிய மொழிகள் ஓரளவும் தெரியும். ஆங்கில மொழியில் அவரது புலமையை உலகறியும். அவருடைய நூல்களே அதற்குச் சான்றுகள். நேரு ஆங்கிலத்திலேயே சிந்தித்திருக்கிறார். தூங்கும்போது நேரு ஆங்கிலத்தில் பேசுவதைக்கேட்டு அஹ்மத் நகர் கோட்டைச் சிறையில் நேருவோடு இருந்த அபுல்கலாம் ஆஸாத் அசந்துபோனார். ‘கனவைக்கூட நேரு ஆங்கிலத்தில்தான் காண்கிறார்’ என்றார் ஆஸாத்!
பிடித்த மொழியில்
ஒருமுறை நேருவைப் பார்க்க பலகுழந்தைகள் தீன்மூர்த்திபவனுக்கு வந்திருந்தனர். ஒரு சிறுவன் நேருவிடம் ஆட்டோகிராஃப் கேட்டான். அதில் அவனுக்குக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
அதைப்பார்த்த அவன், ‘சாச்சா ஜி, தாரிக் (தேதி) போட விட்டுவிட்டீர்கள்’ என்று சொன்னான்.
உடனே அதை வாங்கி தேதியைப் போட்டுக்கொடுத்தார்.
அதைப் பார்த்த அவன் மீண்டும், ‘சாச்சா ஜி, சந்தேஷ் (செய்தி) எதுவும் எழுதவில்லையே?’ என்று கேட்டான்.
உடனே நேருவும் அவனுக்கான ஒரு செய்தியை அதிலெழுதிக்கொடுத்தார். அதைப்பார்த்த அச்சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன்?
அவரது கையெழுத்து ஆங்கிலத்திலும், தேதி உருதுவிலும், செய்தி ஹிந்தியிலும் இருந்தது! ஏன் இப்படி என்று கேட்டபோது, ‘நீ என் கையெழுத்தை ஆங்கிலத்தில் கேட்டாய். தேதியை உருதுவில் (தாரிக்) கேட்டாய். செய்தியை ஹிந்தியில் (சந்தேஷ்) கேட்டாய். அதனால்தான் இப்படி’ என்றார்!
பேச்சுதான் மூச்சு
பேசிக்கொண்டேயிருப்பதில் நேருவுக்கு அலாதிப்பிரியம். ஒருமுறை ராஜ்யசபாவில் அமெரிக்க-பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் பற்றிய ஐந்து பக்க அறிக்கையொன்றை நேரு வாசிக்கவேண்டியிருந்தது. அதை முழுமையாக வாசிக்காமல் சுருக்கத்தை மட்டும் சொன்னால் போதுமென்று ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் கூறினார். ஆனால் நேரு அந்த அறிவுரையைக் கேட்கவில்லை. ‘நான் சுருக்கமாக சொல்வதற்காக எடுத்துக் கொள்கின்ற நேரம் ஐந்து பக்கங்களைப் படிக்க எடுத்துக்கொள்கின்ற நேரத்தைவிட அதிகமாகிவிடலாம்’ என்று கூறி ஐந்து பக்கங்களையும் வாசித்துவிட்டுத்தான் அமர்ந்தார்!
உரை நிகழ்த்துவதில் ‘ரெகார்டு’ ஏற்படுத்தி அதை முறியடிக்கவும் செய்த ஒரே பிரதர் இந்த உலகிலேயே நேரு ஒருவராகத்தான் இருப்பார்! பேசுவதானது ஒரு நோய் போல தன்னைப் பீடித்திருந்தது என்று அவருக்கே தெரியும். ‘அவருக்கு காலிலும் வாயிலும் ஒரு நோயிருந்தது’ என்று அவரது பிரயாணங்களையும் பேச்சுக்களையும் பற்றி நண்பர்கள் கிண்டலாகக் குறிப்பிடுவார்கள்.
தேர்தல்கள் வந்துவிட்டால் போதும். பேசிப் பேசியே நேரு வென்றுவிடுவார். சராசரியாக ஒருநாளைக்கு பதினைந்து அல்லது இருபது சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். ஒருமுறை இரண்டே நாள்களில் 76 முறைகள் சொற்பொழிவாற்றினார்! எல்லா சொற்பொழிவுகளுமே முன்தயாரிப்புகளின்றி செய்யப்பட்டவை! பிரதமரான பிறகுகூட எழுதிவைத்து பேசிய உரைகள் மிகக்குறைவு.
காந்தியும் நேருவும்
காந்தியும் நேருவும் ஒருவருக்கொருவர் நேரெதிரான கருத்துக்களைக்கொண்ட இரண்டு தலைவர்கள். அதேசமயம் அவர்களைப் போல ஒருவர்மீது ஒருவர் அன்புகொண்ட, புரிந்துகொண்ட தலைவர்களைப் பார்க்கமுடியாது. ‘நேருவின் கைகளில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்’ என்றார் காந்தி. ‘காந்தி ஒரு பணிவானவர். ஆனால் வைரத்தைப் போல உறுதியானவர். பாவப்பட்ட அந்த சின்ன உடம்புக்குள் பாறை இருந்தது. இந்திய மக்களின் மனங்களை ஏதோ மந்திரச்சங்கிலியால் அவர் கட்டுண்டு வைத்திருந்தார்’ என்றார் நேரு.
இன்னொரு வீடு
சுதந்திரப் போராட்டத்தின் போது நேரு சிறை செல்வது வாடிக்கையாகிப் போனது. ஆனால் அதை ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை. ஒருமுறை ட்ரக்கில் ஏற்றப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, ‘நான் இப்போது என் இன்னொரு வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். கொஞ்சநாள்தான்’ என்று மகள் இந்திராவுக்குத் தந்தி கொடுத்தார்! அது உண்மைதான். கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளை நேரு சிறையிலேயே கழித்தார்!
ஒரு முறை சிறையிலிருந்து விடுதலையான அபுல்கலாம் ஆஸாத், ‘வெளியே வந்துவிட்டேன். ஆனால் ‘ரிடர்ன் டிக்கட்’டோடு” என்றார்! அவர் சொன்னமாதிரியே விரைவிலேயெ மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்! நாடே அடிமைப்பட்டுக் கிடந்தபோது தனிமனிதன் மட்டும் சுதந்திரமாக இருப்பதில் அர்த்தமில்லை என்றே நேரு ஆஸாத் போன்றவர்கள் நினைத்தனர்.
நேரு முதன்முதலாக சிறைசென்றபோது அப்பா மோதிலால் நேரு தன் வீட்டுத் தரையில் படுத்துப்பார்த்தார்! மகனும் அப்படித்தானே படுப்பான், அவனுக்கு எப்படியிருக்கும் என்று உணர முயன்றார்! ஆஹா, அப்படி ஒரு அப்பா நமக்குக் கிடைத்தால் நாமும் கொடுத்து வைத்தவர்கள்தான்.
நேரு சிறையை சிறையாகவே நினைக்கவில்லை. சிறை வாழ்க்கைக்கு தன்னை நன்றாகப் பழக்கிக்கொண்டார். அங்கேயே உடற்பயிற்சி செய்வார், சவரம் செய்துகொள்வார், இப்படி ஏதாவது செய்துகொண்டே இருப்பார். இரவில் களைத்துப் படுத்து நன்றாக உறங்குவார். சிறையில் கூட தன் மனதை துருப்பிடிக்க விடவில்லை அவர்.
சிறையில் அவர் படித்த புத்தகங்களில் எதுவுமே பொழுதுபோக்கும் நூலல்ல. எல்லாமே ரொம்ப ‘சீரியஸான’ புத்தகங்கள். அஹ்மத் நகர் கோட்டைச் சிறையில் 1942-46 வரை நான்காண்டுகளில் அவர் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரம்! சிறையில் அவர் எழுதிய Glimpses of World History, Autobiography, The Discovery of India ஆகிய மூன்று புத்தகங்களும் அவருடைய masterpieces. நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். அதற்காக நேருவின் சிறைவாழ்க்கைக்குத்தான் நாம் நன்றி சொல்லவேண்டும்!
புத்தகம் படித்த, எழுதிய நேரம் போக மீதி நேரத்தில் மனிதர்களையும் பொருள்களையும் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துவிடுவார். அணில்களின் விளையாட்டு, குரங்குகளின் சண்டை, கிளிகளின் கூடல், தேள்கள், பாம்புகளின் குறுக்கீடு என எல்லாவற்றிலிருந்தும் அவர் உன்னிப்பாகப் படித்துக்கொண்டிருந்தார்! அதுமட்டுமல்ல, சிறையிலேயே சிரசாசனம் செய்வார், தோட்டம் போடுவார்!
ஒருமுறை அப்பாவும் மகனும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டனர். மோதிலாலுக்கு வேண்டிய எல்லாவற்றையும் நேரு தயாராக எடுத்துவைப்பார். ‘காலைத் தேநீரிலிருந்து இரவு படுக்கும்வரை எனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டுவந்து வைத்துவிடுவான்’ என்று மோதிலால் சொன்னார். ’மகன் தந்தைக்காற்றும் உதவி’ என்று பாடிய வள்ளுவனின் வாரிசாக சிறையிலும் இருந்தார் நேரு.
கற்சுவர்கள் உருவாக்குவதில்லை சிறையை
இரும்புக் கம்பிகள் உருவாக்குவதில்லை கூண்டை
என்றார் கவிஞர் ரிச்சர்ட் லவ்லேஸ். அது நேருவின் வாழ்வில் உண்மையாகிப்போனது.
வித்தியாசமான கருத்துக்கள்
‘ஜனநாயகம் என்ற அரசமைப்பில் மனிதர்கள் எண்ணப்படுகிறார்கள். மதிக்கப்படுவதில்லை’ என்ற அல்லாமா இக்பாலின் கருத்தோடு ஒத்துப்போன மாதிரி நேரு நடந்துகொண்டார். நேருவின் அரசியல் வாழ்வு எல்லா ‘இஸம்’களின் தொகுப்புபோல் இருந்தது. அவருடைய இதயத்தில் சோஷலிஸமும், அறிவில் கம்யூனிஸமும், உதடுகளில் ஜனநாயகமும், நடவடிக்கையில் சர்வாதிகாரமும் இருந்தது. ஜனநாயகம் என்பதே சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் அடக்கிப் பணியவைப்பது. இரண்டாம்தர, மூன்றாம் தரமான மனிதர்களை அதிகமாக உருவாக்குவது என்று நேரு நினைத்தார் என்கிறார் வரலாற்றாசிரியர் ரவூஃப்.
‘ஜனநாயகத்தை நான் நேசிக்கிறேன், வியக்கிறேன். ஆனால் அதிக எண்ணிக்கையிலான மனிதர்கள் சொல்வதும் செய்வதும்தான் சரி என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது’ என்று நேரு கூறினார். இன்னும் ஒருபடி மேலேபோய், ‘உங்கள் சோஷலிஸமோ கம்யூனிஸமோ இருக்கின்ற செல்வத்தைப் பங்குபோடத்தான் பயன்படும். ஆனால் இந்தியாவில் இப்போது செல்வமில்லை. இருப்பதெல்லாம் வறுமைதான். அதைத்தான் பங்குபோடவேண்டும்’ என்று ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் கூறினார் (பக்கம் 62).
கேரளாவில் நடந்த ஒரு கலகத்தின் காரணமாக அங்கே ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. அது தொடர்பாக நேருவை சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் நேரு சொன்னார்: ‘தாயையும் தந்தையையும் கொலைசெய்துவிட்டு நான் அனாதையாகிவிட்டேன், எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று கூறிய இளைஞனின் கதைதான் ஞாபகம் வருகிறது.’
‘இந்து மகாசபை போன்ற சில அமைப்புகளின் கருத்துக்கள் படுமுட்டாள்தனமானதாகப் படுகிறது. ஆனால் இந்த நாட்டில் முட்டாள்தனத்துக்கும் மன்மதத்துக்கும் ஒரு சந்தையிருக்கத்தான் செய்கிறது” என்று பாராளுமன்றத்தில் நேரு பேசினார் (பக்கம் 65).
சிறுசிறு சாமி சிலைகளை உடைத்தும், தேசியக்கொடியையும் இந்திய அரசியல்சாசனப் பிரதிகளை எரித்தும் திராவிடக் கழகத்தினர் போராட்டம் நடத்தியபோது, ‘அவர்கள் இன்னுமா மனநலக்காப்பகத்துக்கு வெளியே இருக்கிறார்கள்?’ என்று கேட்டார் (பக்கம் 64).
‘பத்தொன்பதாம் நூற்றாண்டைவிட்டு அவர் இன்னும் வெளியே வரவில்லை’ என்று ஒருமுறை ராஜாஜி பற்றி நேரு கூறினார்.
பதிலடிகளும் பொறிபறக்கும் அறிவுக்கூர்மையும்
ஆங்கிலத்தில் repartee, retort என்று சொல்வார்கள். தன்னிடம் கூறப்பட்ட ஒரு விமர்சனப்பூர்வமான கருத்துக்கு பதில் விமர்சனத்தை கணமும் தாமதிக்காமல், அதேசமயம் ரொம்ப நயமாகவும், நகைச்சுவையோடும் சொல்லும் கலையது. அதில் உலகில் மிக்குறைவான பேர்களே புகழ்பெற்றவர்கள். பாரதியார், பெர்னார்ட்ஷா, ஆஸ்கார் வொயில்ட், மார்க்ட்வைன் போல. அந்த வரிசையில் நேருவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல, ரசித்து மகிழும்படியான அறிவுப் பொறிகளும் அவ்வப்போது நேருவிடமிருந்து பறக்கும்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறையில் இரு நாடுகளிலும் ரத்த ஆறு ஓடியது. அதை நேருவும் ஜின்னாவும் சோகத்தோடு பார்வையிட்டு வந்தனர். டெல்லிக்குத் திரும்பிய நேருவிடம் பத்திரிக்கையாளர்கள், ‘எந்தப்பக்கம் அதிகமான அழிவு?’ என்றுகேட்க, அதற்கு நேரு சொன்னார்: ‘அந்தப்பக்கம் ஆறுபேர் என்றால் இந்தப்பக்கம் ஒரு டஜனில் பாதி’.
சீனாவோ ரஷ்யாவோ இந்தியாவைத் தாக்கலாம் என்று சொன்ன அன்றைய பொருளாதார அமைச்சரான கிருஷ்ணமாச்சாரியைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேருவிடம் சொன்னது. அதற்கு நேரு, ‘நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து எனக்கான உத்தரவுகளை எடுத்துக்கொள்வதில்லையே’ என்றார்!
ரஷ்யர்கள் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பியதைப் பற்றிக்கேட்டபோது, ‘உங்கள் ஜோதிடத்தின்படி சந்திரன்தான் மனிதர்களின் வாழ்வை பாதிக்கும். இப்போது பாவம் அந்த சந்திரனுக்கே பிரச்சனை வந்துவிட்டது. உயிர் பிழைத்துவிடும் என்று நம்புகிறேன்’ என்றார்!
ராஜாஜியின் கருத்துக்கு எப்போதுமே எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களே, அவர் இப்போது கவர்னர்-ஜென்ரலாக இருக்கிறார். இப்போது என்ன செய்வீர்கள் என்று நேருவிடம் கேட்கப்பட்டது. ‘இந்த முறை அவர் என்னோடு உடன்பட மறுக்கலாம்’ என்றார்!
‘ராஜாஜியின் பழமைவாதம் உங்களுக்குப் பிடிக்காது. உங்களது சோஷலிஸம் அவருக்குப் பிடிக்காது. அவர் கவர்னர் ஜென்ரலாக இருக்கும் நிலையில் இப்போது எப்படி சமாளிப்பீர்கள்?’ என்று ஒரு துடுக்கு நிருபர் கேட்டபோது உடனே நேரு, ‘நாங்கள் ஏற்கனவே சமரசமாகிவிட்டோம். அவர் பழைய ஏற்பாட்டை விரும்புகிறார். நான் புதிய ஏற்பாட்டை விரும்புகிறேன்’ என்று சொல்லி அசத்தினார்!
காஷ்மீரில் நேருவின் உருவப்படங்களும் உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டபோது அதுபற்றி அவரிடம் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டது. ‘ஆமாம், கேள்விப்பட்டேன். அது பற்றிய அறிக்கைகளை நானும் படித்தேன். எந்தவித பாதிப்புமின்றி நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று மாண்புமிகு சபை உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறினார்!
ஒருமுறை சென்னைக் கூட்டத்தில் நேரு பேசவந்தபோது ஒலிபெருக்கி சரியாக வேலைசெய்யாமல் அவர் சொல்வது காதில்விழாத பகுதியிலிருந்து சலசலப்பு எழுந்தது. கொஞ்சநேரம் அதைப்பார்த்துக்கொண்டிருந்த நேரு எழுந்துசென்று ஒலிபெருக்கியில், ‘நான் பேசுவது காதில் விழுபவர்கள் கைகளை உயர்த்தவும்” என்று சொன்னார். உடனே உரத்த சிரிப்பொலியுடன் அனேக கைகள் உயர்ந்தன. உடனே நேரு, ‘நான் சொல்வதைக் கேட்கமுடியாதவர்கள் இப்போது கைகளை உயர்த்தவும்’ என்று சொன்னார்!
காந்தி குல்லாய் அணிவதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், ‘காந்தி குல்லாய்மீது எனக்கு மரியாதையுண்டு. ஆனால் மூடபக்தி கிடையாது. காந்தி குல்லாய் முக்கியமல்ல. குல்லாய்க்குக் கீழே உள்ளதுதான் முக்கியம்’ என்றார்!
அலாஹாபாத் நகராட்சித்தலைவராக நேரு இருந்தபோது ஒரு பிரச்சனை வந்தது. விலைமகளிரை நகருக்குள் வசிக்க அனுமதிக்கக்கூடாது. ஊருக்கு வெளியே தனியிடம் ஒதுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. அப்படியானால் அப்பெண்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களுக்கும் ஊருக்குள் இடமொதுக்கமுடியாது. அவர்களுக்கும் தனியிடம் ஒதுக்கவேண்டிவரும் என்று பதிலடி கொடுத்தார் நேரு!
இந்தியா ஒரு விவசாய நாடென்றும் தொழிற்சார்ந்த நாடென்றும் வர்ணிக்கப்படுகிறது. நான் என்ன சொல்வது என்றொருமுறை பாராளுமன்றத்தில் நேரு கேட்கவும் ஒரு உறுப்பினர் எழுந்து, ‘வண்ணானின் நாய் அவன் வீட்டுக்கும் சொந்தமில்லை, அவன் பேட்டைக்கும் சொந்தமில்லை’ என்று உரக்கச் சொன்னார். உடனே நேரு, ‘மரியாதைக்குரிய நம் உறுப்பினர் அவரது அனுபவத்தை எடுத்துரைத்துள்ளார்’ என்று பதிலடி கொடுத்தார்!
இறுதிக்குறிப்புகள்
இக்கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் A.A.Ravoof எழுதிய Nehru the Man (Pearl Publications, Bombay, 1967) என்ற அரிய நூல்வழி எடுக்கப்பட்டவை.
நேருவுக்கு ஜோசியம், ஜாதகம் இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லை. பாதுகாப்புக்காக கையில் தாயத்து கட்டிக்கொள்ளும்படி ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் சொல்லியும் நேரு மறுத்துவிட்டார். கடைசியில் நேருவுக்காக பிரசாத்தே ஒரு தாயத்தைத் தன் கையில் கட்டிக்கொள்ளவேண்டியிருந்தது (76).
தன் ஷேர்வானி பித்தானில் எப்போது ஒரு சிவப்பு ரோஜா செருகி வைத்திருப்பார். அதை அவர் இழக்கவிரும்புவதே இல்லை. குழந்தைகளை நோக்கி வீசும் மாலையோடு அது சேர்ந்துபோய்விட்டால்கூட திரும்பி அதை எடுத்து செருகிக்கொள்வார்!
எப்போதும் உழைத்துக்கொண்டேயிருந்த நேருவுக்கு ஓய்வெடுப்பது பிடிக்காது. ‘ஆராம் ஹராம் ஹை’ (ஓய்வு விலக்கப்பட்டது) என்றவர் கூறினார். இன்று நம்மில் பலருக்கு உழைப்பல்லவா ஹராமாக உள்ளது!
ஷ்ரத்தா மாதா, பத்மஜா நாயுடு, மௌண்ட்பேட்டனின் மனைவி எட்வினா ஆகியோரோடு நேருவுக்கு நெருக்கமான பழக்கமிருந்ததாகக் கூறப்படுகிறது.
நான்கு முறை அவரைக்கொல்ல முயற்சி நடந்தது. 1964 மே 27 அன்று அவர் இயற்கையாக உலகைவிட்டுப் பிரிந்தார்.
‘அமைதி என்பது நாடுகளுக்கிடையேயான நல்லுறவோ, போரில்லாமல் இருப்பதோ அல்ல. அமைதியென்பது ஒரு மனநிலை. அது ஆன்மாவின் ஞானம். உள்அமைதி பெற்றவர்களுக்கு மட்டுமே நிரந்த அமைதி கிட்டும்’ என்று சொன்ன காஷ்மீர் ரோஜாவின் வாழ்வையும் வார்த்தைகளையும் பற்றி சிந்திப்பது நம் நாட்டுக்கு நல்லது.
***
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.