சங்க காலம் 
கீழடி ஸ்பெஷல்!

கீழடி ஸ்பெஷல்: தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-2

கீழடியில் கிடைத்த கால்வாய் மற்றும் வடிகட்டி அமைப்புகள் சங்க இலக்கியங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது. பழந்தமிழர்களின் வாழ்வியலை அகம் புறம் என பிரித்து சங்க இலக்கியங்கள்

DIN


கீழடியில் கிடைத்த கால்வாய் மற்றும் வடிகட்டி அமைப்புகள் சங்க இலக்கியங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது. பழந்தமிழர்களின் வாழ்வியலை அகம் புறம் என பிரித்து சங்க இலக்கியங்கள் வகைப்படுத்தி உள்ளன. இந்த இலக்கியங்களில் வரும் பல்வேறு தகவல்களை வெறும் கற்பனைக் கதைகள் என்றும் தமிழகத்தில் முற்காலத்தில் நாகரிகமடைந்த சமூகம் இல்லை என்றும் இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.

அதனால் தமிழ் இலக்கியங்களை அவர்கள் வரலாற்றுக்கான சான்றாக ஏற்காமல் நிராகரித்து வந்தனர். இந்த நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் அகழாய்வுகளில் வெளிப்படும் தொல்பொருட்கள் சங்க இலக்கியங்கள் பழந்தமிழர்களின் வாழ்வியல் சாட்சிகள் என்பதற்கான ஆதாரமாக உள்ளன. 

யவனர்
சங்ககாலத்தில் தமிழ்நாட்டோடு யவனர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அராபியர் ஆகிய அனைவரையும் 'யவனர்' என அழைக்கும் வழக்கம் இருந்தாலும் பெரும்பாலும் ரோமானியரே மிகுதியாகத் தமிழகம் வந்தனர்.

மேற்குக் கடற்கரைக்கு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம், சில விலங்குகள், பறவைகள் ஆகிய பல பொருள்களுக்காக வந்த ரோமானியர் பாலக்காடு, போளுவாம்பட்டிக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டுக்கு வந்து பல வண்ணக் கல்மணிகளை விரும்பி வாங்கினர். சோழநாடு, பாண்டிய நாட்டின் துறைமுக நகரங்கள் வரை சென்றனர். கிழக்குக்கரை முத்துக்களையும் பெற்றனர். ரோம் நாட்டவரின் ரெளலடெட், அரிட்டைன் என்ற உயர்வகைப் பானை ஓடுகள், அம்போரா என்னும் கூர்முனை மதுக்குடங்கள், ரோமானிய சுடுமண் பொம்மைகள், ரோம அரசரின் பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. அகஸ்டஸ் (கி.மு. 44 - 14); டைபீரியஸ் (கி.பி. 14 - 37); நீரோ (கி.பி. 54 - 68) போன்ற ரோம் நாட்டு அரசர்களின் பெயரும் உருவமும் பொறித்த நாணயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன.

மிளகு யவனர்கட்கு மிகவும் பிடித்தமான பொருள். அதனை 'யவனப்பிரியா' என அழைத்தனர். யவனர் கப்பல்களில் பொன்னொடு முசிறிக்கு வந்து பொன்னைக் கொடுத்துவிட்டு கப்பலில் மிளகை ஏற்றிச் செல்வர்.

'சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி'
என அகநானூறு (149) கூறும்.

'யவனர் இயற்றிய வினைமாண் பாவை' (நெடுநல் 101)
'வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமாண் நல் இல்' (முல்லை 61-62)
'நயனில் வன்சொல் யவரைப் பிணித்து
நெய்தலைப் பெய்து கையிற் கொளீஇ' (பதிற். பதிகம் - 2)
'யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்க இனிது ஒழுகுமதி' (புறம் 56)
என்பன சங்க இலக்கியம் குறிக்கும் யவனர் பற்றிய தொடர்களாகும். இத்தொடர்பு 2000 ஆண்டுகட்கு முற்பட்டதாகும்.

தொல்லெழுத்தியல்
பழங்காலக் குகைகளில் உள்ள சமணப்பாழிகளிலும், அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓடுகளிலும், பழங்காசுகளிலும், மோதிரங்களிலும், முத்திரைகளிலும், கற்களிலும் ஏறக்குறைய 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தொல்லெழுத்துக்கள் பல காணப்படுகின்றன. இவற்றைத் 'தமிழி' என அழைப்பர். கரூர் அருகேயுள்ள புகலூர் ஆறுநாட்டார் மலையில் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்திற்குரிய அரசர்கள் அதே வரிசையில் குறிக்கப்பட்டுள்ளனர்.

'மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இ) ளங்
கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்'

என்பது ஆறுநாட்டார்மலைத் தமிழிக் கல்வெட்டாகும்.
மதுரை அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தை அந்துவன் பாடியதாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. அதே மலைக் குகையில் 'அந்துவன் கொடுபித்தவன்' என்ற 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிக் கல்வெட்டு உள்ளது. (அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை. அகம் 59)

திருக்கோவிலூரைச் சங்க இலக்கியம் 'கோவல்' என்று கூறும். மலையமான் ஆட்சிப்பகுதி. தகடூர் அதியமான் மலையமானை வென்று கோவலை அழித்தான் என்று அவ்வையார் பாடுகிறார் (புறம் 99). திருக்கோவிலூர் அருகில் உள்ள ஐம்பையில் அதியமான் சமண முனிவர்கட்குப் பாழி அமைத்துக் கொடுத்த செய்தி தமிழிக் கல்வெட்டொன்றில் கூறப்படுகிறது.

'ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி' என்பது ஜம்பைக் கல்வெட்டாகும். அசோகனின் பிராமிக் கல்வெட்டில் 'ஸதியபுத்ரர்' குறிக்கப்படுகின்றனர். 'அதியாமகன்' என்ற சொல்லே ஸதியபுதோ எனக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே தகடூர் அதியமான் மரபில் ஒருவன் அசோகன் காலத்தவன் என்பதில் ஐயமில்லை.

மாங்குளம் தமிழிக் கல்வெட்டில் 'நெடுஞ்செழியன்' என்ற பெயர் காணப்படுகிறது. அந்தை, ஆந்தை, நள்ளி, பிட்டன், கீரன், ஓரி, பரணன், சாத்தந்தை, பண்ணன், வண்ணக்கன் போன்ற சங்க இலக்கியங்களில் மட்டுமே பயின்று வரக்கூடிய பல சொற்கள் தமிழி என்ற தொல் எழுத்துக்களில் எழுதப்பட்டுக் கிடைத்துள்ளன. குறவன் (நற் 201), தித்தன் (புறம் 80), தாயன் (குறு 319), சாத்தன் (நற் 370), வேட்டுவன் (அகம் 36), குட்டுவன்கோதை (புறம் 54), கொல் இரும்பொறை (புறம்53), மாக்கோதை (புறம் 48), பெருவழுதி நற் 55) என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளும், மோதிரங்களும், காசுகளும் தமிழ்நாட்டில் பெரும்பாலும் கரூர்ப் பகுதியில் கிடைத்துள்ளன. இவற்றின் எழுத்தமைதி கொண்டு இப்பெயர்கள் எறக்குறைய 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை என அறியலாம்.

புலி முத்திரை
புகார் நகரின் துறைமுகத்தில் சங்ககாலத்தில் பொருள்களுக்குப் புலி முத்திரை பொறிக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை கூறிகிறது.

'அளந்து அறியாப் பலபண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெரும் காப்பின்
வலியுடைவல் அணங்கின் நோன்
புலி பொறித்துப் புறம் போக்கி'

என்பது பட்டினப்பாலைப் பகுதி (131 - 135). அவ்வாறு புலிச்சின்னம் பொறிக்கப் பயன்படுத்திய முத்திரையொன்று பூம்புகார் நகரில் அண்மையில் கிடைத்துள்ளது.

கடல் கடந்த சான்றுகள்

சங்கத் தமிழர் கடற்செலவில் தேர்ந்தவர்களாக விளங்கினர். கடல் கடந்து பல நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.

'நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக' (புறம் 66)
'சினம் மிகு தானை வானவன் குடகடல்
பொலம்தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிறகலம் செல்கலாது' (புறம் 126)

என்பன அதைப்பற்றிய சான்றுகளுள் சிலவாகும். பருவக் காற்றின் பயந்தெரிந்து 2000 ஆண்டுகட்கு முன்பு தமிழர் 'கப்பலோட்டிய' தமிழர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதை 'வளிதொழில் ஆண்ட' என்ற தொடர் சிறப்புடன் விளக்குகிறது.

தமிழ்நாட்டில் வெளிநாட்டார் குறிப்புகளும், வெளிநாட்டார் தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. பிற வெளிநாடுகளில் இதுவரை சங்ககாலத் தமிழகச் சான்றுகள் பெரும்பாலும் அகப்படாமல் இருந்தன. அண்மைக் காலத்தில் மேற்கு நாடுகளிலும், கிழக்கு நாடுகளிலும் சங்ககாலச் சான்றுகள் பல கிடைத்துள்ளன. எகிப்து நாட்டில் நைல்நதிக் கரையில் உள்ள 'குவாசிர் அல் காதிம்' என்னும் ஊரில் அமெரிக்க நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்ணன், சாத்தன் என்ற சங்ககாலத் தமிழி எழுத்துப் பொறிப்புக்கள் கிடைத்துள்ளன.

எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் லெய்டன் பல்கலைக்கழகத்தார் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 'கொற்ற பூமான்' என்ற சங்ககாலத் தமிழி எழுத்துக்கள் பொறித்த மதுச்சாடி கிடைத்துள்ளது. இவையிரண்டும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துப் பொறிப்புக்கள் ஆகும்.

வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ள 'பேபிரஸ்' எனப்படும் பண்டைய தாளில் எழுதப்பட்ட கி.பி. முதல் நூற்றாண்டு ஆவணத்தில் முசிறி வணிகன் ஒருவன் கப்பலில் ஏற்றிச் சென்ற வாசனைப் பொருள், தந்தப் பொருள், துணிகள் பற்றிய செய்திகளும். அவற்றின் எடையும் கூறப்பட்டுள்ளது. ஒரு கப்பலில் 150 வணிகரின் பொருள்கள் இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.

தாய்லந்து நாட்டில் கிளாங்தோம் நகரில் நடத்திய அகழாய்வில் சோழரின் சதுர வடிவான புலிபொறித்த ஒரு செப்புக்காசும், 8 x 4 சென்டி மீட்டர் அளவுள்ள தங்கம் மாற்றுரைத்துப் பார்க்கும் பட்டைக்கல் 'பெரும்பத்தன் கல்' என்ற சங்ககாலத் தமிழிப் பொறிப்போடு கிடைத்துள்ளது. இந்த அயல்நாட்டுச் சான்றுகள் அனைத்தும் 2600 ஆண்டுகட்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும், மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பல்வேறு தொல்பொருட்கள் மூலமும், அறிவியல் பூர்வமாக கால நிர்ணயம் கணிக்கப்பட்டதில் அவை சுமார் 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை எனத் துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் மேல் எல்லை கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என்றும், கீழ் எல்லை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றோடு சங்க இலக்கியம் பல்வேறு வகைகளில் நெருங்கிய தொடர்பு உள்ளவையாக இருப்பதால் சங்க காலமும் அக்காலமே என்று உறுதிப்படுகிறது. எனவே தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்பது கி.மு. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை என ஓரளவு நாம் கணிக்கலாம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT