அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய (திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க;
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க;
இங்(கு)இப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்!
விளக்கம்: எங்கள் தலைவனே, "உன் கையிலுள்ள பிள்ளை உனக்கே சரண்' என்னும் பழமொழியைப் புதுப்பிக்கின்றோமென்று நீ சொல்லக் கூடியதை அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பஞ் செய்கின்றோம். நீ கேட்டருள்வாயாக. எமது நகில்கள், நினது அன்பரல்லாதார் புயங்களைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கன்றி (வேறு தேவர்க்கு) எவ்வகையான தொண்டுஞ் செய்யாதொழிக. இரவும் பகலும் எங்கள் கண்கள் நின்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக. இந் நிலவுலகில் இம்முறையே எங்களுக்கு ஐயனே! நீ அருள் புரிவாயாயின், பகலவன், எத்திசையில் உதித்தால் எங்களுக்கு என்ன? (எது எப்படியானாலும் கவலை யாதுமில்லை).
குறிப்பு: பெண்கள் பலரும் இறைவனை வேண்டிப் பாடல். தாயே தன் பிள்ளையைக் காத்துக் கொள்ளுவளாதலின், அவள் பிள்ளை அவளுக்கு அடைக்கலமென்று பிறர் சொல்லுதல் மிகையாகும். அதுபோல, இறைவனிடம் வேண்டுகோள் செய்தல் மிகையென்ற அச்சம் இருப்பினும், ஆசைபற்றி வேண்டுகோள் செய்வோம் என்பர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.