பகுதி 1. சிவபுராணம்-4
கறந்த பாலோடு கரும்புச்சாறு, நெய்யைக் கலந்ததுபோல, தேன்போல அடியவர்களின் சிந்தனைக்குள் ஊறி நிற்கிறவனே,
4
பாடலின்பம்
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்,
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான்!
பொருளின்பம்
கறந்த பாலோடு கரும்புச்சாறு, நெய்யைக் கலந்ததுபோல, தேன்போல அடியவர்களின் சிந்தனைக்குள் ஊறி நிற்கிறவனே,
நாங்கள் எடுத்த பிறப்பைக் கெடுத்து மோட்சம் பெறச்செய்யும் எங்கள் பெருமானே,
ஐந்து நிறங்களைக் கொண்டவனே,
தேவர்கள் உன்னைப் போற்றினார்கள், ஆனால், நீ அவர்களுக்குத் தோற்றமளிக்கவில்லை. (எளியவனாகிய எனக்குத் தோற்றமளித்து அருளினாய்!)
சொல்லின்பம்
கன்னல்: கரும்பு
நிறங்கள்: இங்கே இந்தச் சொல் வண்ணங்களைக் குறிக்கவில்லை. சிவன் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்று ஐந்து தொழில்களைச் செய்கிறவர், அவற்றுக்காக ஐந்து உருவங்களைப் பெற்றவர் என்ற கருத்தைக் குறிப்பிடுகிறது
ஏத்த: பாராட்ட