முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 1. சிவபுராணம்-5

இந்த உலகின்மீது நாங்கள் வைத்திருக்கும் பாசம் என்கிற பற்றை அறுத்து எங்களுக்குள் நிறைந்துள்ள குருவே,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:


5

பாடலின்பம்

தாயின் சிறந்த தயாவான தத்துவனே,

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே,

தேசனே, தேன் ஆர் அமுதே, சிவபுரனே,

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே,

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெரும் கருணைப் பெரு ஆறே,

ஆரா அமுதே, அளவிலாப் பெம்மானே,

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே,

நீராய் உருக்கி என் ஆர் உயிராய் நின்றானே,

இன்பமும் துன்பமும் இல்லானே, உள்ளானே!
 

பொருளின்பம்

தாயைக்காட்டிலும் கருணை பொழியும் தத்துவனே,

குற்றமற்ற ஒளி படர்ந்த சுடர்வடிவானவனே,

ஒளி நிறைந்தவனே,

தேன் போன்ற சுவை நிறைந்த அமுதே,

சிவபுரத்துப் பெருமானே,

இந்த உலகின்மீது நாங்கள் வைத்திருக்கும் பாசம் என்கிற பற்றை அறுத்து எங்களுக்குள் நிறைந்துள்ள குருவே,

அன்பைப் பொழிந்து, எங்கள் நெஞ்சில் வஞ்சக எண்ணங்கள் வராமல் போக்கி, எங்களைவிட்டு நீங்காமல் நிற்கின்ற பெரும் கருணைப் பேராறே,

தின்னத் தின்னத் தெவிட்டாத அமுதமே,

எல்லையற்ற பெருமானே,

உன்னை ஆராய்ந்து அறியாதவர்களின் உள்ளத்திலும் ஒளிந்திருக்கும் ஒளிவடிவானவனே,

என் உள்ளத்தை நீர்போல் உருக்கி, அதில் உயிராக நின்றவனே,

இன்பமும் துன்பமும் இல்லாதவனே, இன்பமாகவும் துன்பமாகவும் உள்ளவனே,
 

சொல்லின்பம்

தயா: கருணை

மாசு: குற்றம்

தேசன்: ஒளி நிறைந்தவன்

பாரிக்கும்: பரவும்

ஆரியன்: குரு

பேராத: பெயராத/ நகராத

ஆரா: தெவிட்டா

பெம்மான்: பெருமான்

ஓராதார்: எண்ணாதவர்/ தெளிவில்லாதவர்

முழு கட்டுரையைப் படிக்க →