முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 18 – குயில் பத்து - 2

மணிகள் பதித்த நீண்ட மாடங்கள் அழகாகத் தோன்றுகிற, ஒழுக்கமும் பண்புகளும் நிறைந்த திருவுத்தரகோசமங்கை கோயிலில் பூங்கொடி போன்ற மங்கையான உமையம்மை

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

ஒரு பெண் சிவபெருமானைத் தன் தலைவனாக எண்ணுகிறாள். அவரைக் காண இயலவில்லையே என்ற ஏக்கத்தால் குயிலிடம் பேசுகிறாள்.  ‘அவர் இங்கே வர வேண்டும். அதற்காக நீ கூவு’ என்கிறாள்.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

120

பாடலின்பம்

நீல உருவில் குயிலே, நீள் மணிமாடம் நிலாவும்

கோல அழகில் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில்,

சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை

ஞாலம் விளங்க இருந்த நாயகனை வரக் கூவாய்.

*

தேன்பழச் சோலை பயிலும் சிறுகுயிலே, இது கேள் நீ,

வான்பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்

ஊன்பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வதுவாய ஒருத்தன்,

மான்பழித்து ஆண்ட மெல்நோக்கி மணாளனை நீ வரக் கூவாய்.

பொருளின்பம்

நீலக் குயிலே,

மணிகள் பதித்த நீண்ட மாடங்கள் அழகாகத் தோன்றுகிற, ஒழுக்கமும் பண்புகளும் நிறைந்த திருவுத்தரகோசமங்கை கோயிலில் பூங்கொடி போன்ற மங்கையான உமையம்மை எழுந்தருளியிருக்கிறாள், அவளோடு, இந்த உலகம் சிறப்புறுவதற்காகச் சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார், அந்த நாயகர் இங்கே வரவேண்டும் என்று நீ கூவு.

*

தேன்போன்ற இனிய பழங்கள் நிறைந்த சோலையில் வாழும் சிறு குயிலே, இதைக் கேள்,

விண்ணுலகில் தேவர்களெல்லாம் இருக்க, அவர்களை விட்டு இந்த மண்ணுக்கு வந்து மனிதர்களை ஆட்கொண்ட கருணை வள்ளல் சிவபெருமான், என்னுடைய உடல் என்கிற எண்ணத்தை நீக்கி, உள்ளத்தில் புகுந்து உணர்வில் கலந்துவிட்டவன், மானின் பார்வையைவிட மென்மையான பார்வையைக் கொண்ட உமையம்மையின் மணாளன், அவன் இங்கே வரவேண்டும் என்று நீ கூவு.


சொல்லின்பம்

கோலம்: அழகு

உறை: உறைகிற/ வசிக்கிற

சீலம்: ஒழுக்கம்

ஞாலம்: உலகம்

பயிலும்: வாழும்/ தங்கும்

பழித்து: விட்டுவிட்டு

ஊன்: உடல்

மெல்நோக்கி: மென்மையான பார்வையை உடையவள்/ உமையம்மை

மணாளன்: கணவன்/ சிவபெருமான்

முழு கட்டுரையைப் படிக்க →