முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 13 – திருப்பூவல்லி - 4

தேவர்களின் தலைவன் இந்திரன், திருமால், பிரம்மா, மற்றுமுள்ள தேவர்கள் எல்லாருக்கும் தலைவனாக நிற்கிறவன்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார்.

தில்லையில் அருளப்பட்ட இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன.

89

பாடலின்பம்

பேராசையாம் இந்தப் பிண்டம்அற பெருந்துறையான்

சீர்ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான்,

கார்ஆர் கடல் நஞ்சை உண்டுஉகந்த காபாலி,

போர்ஆர் புரம் பாடிப் பூவல்லி கொய்யாமோ.

*

வானவன், மால்,அயன், மற்றும்உள்ள தேவர்கட்கும்

கோன்அவனாய் நின்று, கூடல்இலாக் குணக்குறியோன்

ஆன நெடும்கடல் ஆல்ஆலம் அமுதுசெய்யப்

போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ.

பொருளின்பம்

ஆசையால் வந்தது இந்தப் பிறவி. பிண்டமாகிய இந்த உடலும் பிறப்பும் அறுந்துவிடும்படி சிவபெருமான் செய்தான், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அந்தப் பெருமான் தன்னுடைய சிறப்பான திருவடிகளை என் தலைமேல் வைத்தான்,

கரிய நிறத்துடன் கடலில் இருந்து நஞ்சு எழுந்து வந்தபோது, இந்த உலகத்தைக் காப்பதற்காக அதனை விருப்பத்துடன் உண்டவன், மண்டையோட்டைக் கையில் ஏந்திய காபாலி, போர் செய்து முப்புரங்களை அழித்தவன், அவனுடைய சிறப்புகளை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

*

தேவர்களின் தலைவன் இந்திரன், திருமால், பிரம்மா, மற்றுமுள்ள தேவர்கள் எல்லாருக்கும் தலைவனாக நிற்கிறவன், அதேசமயம் யாரும் தன்னை நெருங்க இயலாதபடி சிறந்த இயல்புகள், அடையாளங்களைக் கொண்டவன் சிவபெருமான், அந்நாளில் கடலில் இருந்து தோன்றிய ஆலகாலம் என்ற நஞ்சை அவன் விரும்பி உண்டான், அது அமுதமாகவே மாறியது, அந்த அற்புதத்தை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

சொல்லின்பம்

பிண்டம்: உடல்

சீர்: சிறப்பு

பிரான்: தலைவன்

கார்: கருமை

ஆர்: ஆர்க்கின்ற/ நெருங்குகின்ற/ நிறைகின்ற

உகந்த: மகிழ்ந்த

வானவன்: விண்ணோர்களின் தலைவன்/ இந்திரன்

அயன்: பிரம்மா

கோன்: தலைவன்

குறி: அடையாளம்

ஆல்ஆலம்: ஆலகாலம் என்கிற விஷம்

போனகம்: உணவு

ஆனவா: ஆன தன்மை

முழு கட்டுரையைப் படிக்க →