அடுத்த தலைப்பு
|
1) மது ஒழிப்பு..
மது... மது... மது...
அன்பைக் கெடுக்குமது
மரியாதைக் குலைக்குமது
குடும்பம் தவிர்க்குமது
உயர்வைக் தடுக்குமது
மனதைக் கலைக்குமது
பண்பைக் தொலைக்குமது
குளிர்ந்த நிலையில் கசந்த திரவம்
உடனே செய்யுமே உபத்திரவம்
மதுவில் தொடங்கி
மாதில் தொடர்ந்து
வாழ்வைக் குடித்து
மரணத்தில் முடிக்கும்
மதுவுக்கு
விலக்கும் வேண்டாம்
ஒழிப்பும் வேண்டாம்
முற்றிலும் செய்வோம் மது அழிப்பு
அரசு செய்யட்டும்
அமைச்சர் செய்யட்டும்
ஆண்டி செய்யட்டும்
குப்பன் சுப்பன் பெருமாள் பேராண்டி
யரோ தொடங்கட்டும்
என்ற எண்ணம் தவிர்த்து
தனிமனிதன் தன் ஒழுக்கத்திலிருந்து
துவங்கட்டும்
மது அழிப்பும் மது ஒழிப்பும் …
ஹேமா பாலாஜி, சென்னை
***
2) மது ஒழிப்பு..
உதவி கேட்டு சிக்னலில்
நீளும் சின்ன கைகள்
படிப்பை நிறுத்தி ஸ்பானர்
எடுக்க நீளும் சிறுவனின் கைகள்
ஏற்றுமதி ஆடையகத்தில்
துணி அடுக்க நீளும்
சின்னப் பெண்ணின் கைகள்
பழைய சான்றிதழ்கள் தேட
நீளும் ரப்பர் வளையல் கைகள்
இவையாவுமே புரிவதில்லை
கூட்டத்தில்,
இரும்பு சதுரங்களின் வழியே
பாட்டில் வாங்க
லேசாக நடுங்கியபடி,
நீளும் கைகளுக்கு.
**
3) மது ஒழிப்பு..
கள்ளீரல்கள் கல்லீரல்களாக
மாற வேண்டும்
போதையால் விழுந்து கிடக்காத
பாதையோரம் வேண்டும்
குடியில் குடிநோய்
புகாதிருக்க வேண்டும்
சிறு மகன்கள் நெருப்பெரியும்
மண்சட்டி தூக்காதிருக்க வேண்டும்
மது நீரின்றி அமைய வேண்டும்
புது உலகு
- டோடோ
***
3) மது ஒழிப்பு..
குட்டிச் சுவராய்ப் போகும் அய்யா
குடியில் மூழ்கும் நாடு!
சட்ட திட்டம் போதா துங்க
சாரா யத்தை ஒழிக்க!
வெட்டிப் பேச்சு மேடைப் பேச்சால்
வெற்றி வந்தி டாது!
திட்ட வட்ட மாகச் சொல்றேன்
திருந்தும் வழியும் ஒன்றே!
பட்ட துன்பம் சொல்லும் ஜனங்க
பள்ளி எல்லாம் சென்று
சுட்டிப் பசங்க மனத்தில் உண்மை
சுட்டுப் போட வேணும்
குட்டிப் பசங்க வீடு போயி
குடியின் கேடு சொன்னால்
புட்டி போடும் வீடும் மாறும்
புள்ளை கெஞ்சல் கேட்டே!
- பசுபதி, கனடா
***
4) மது ஒழிப்பு
விலக்கு!விலக்கு! மதுவை விலக்கு!
விலக்கா திருக்கும் மனிதன் விலங்கு!
ஒழிக! ஒழிக! மதுவே ஒழிக!
ஒழியா திருப்பின் சேரும் பழியே!
கெடுக! கெடுக! மதுவே கெடுக!
கெடாதி ருப்பின் கெடுக்கும் குடியை!
உழைக்கும் ஒருநாள் கூலியை ஏனோ
அழையா விருந்தாய் மதுவினுக் களிப்பீர்?
புத்தியைக் கெடுக்கும் போதையை ஒழிப்பீர்!
நித்தமும் சேரும் நிம்மதி பெறுவீர்!
மதுவால் உடல்நலம் மிகவே கெட்டு
பொதுவாய்ப் பேசும் கேலிக் காகி
குடும்பம், மனைவி, குழந்தை, பெற்றோர்,
நடுவீ தியிலே துணையின் றிநிற்கும்
கொடுமை வேதனை கொடுக்கும் மதுவினை,
தடுமாற் றந்தரும் தனியொரு விடத்தை*
மனிதா...மனிதா...மறந்தும் மறுபடி
மனிதா, மதுவைத் தொடலாமோ,நீ!
மதுவை ஒழிக்கும் மனங்கொள் மனிதா!
புதுமை செய்யும் புண்ணியம் பெறுவாய்!
ஒழிக.....ஒழிக......மதுவே ஒழிக!
பழியைக் கொடுக்கும் மதுவே ஒழிக!
அரசின் வருவாய் பெருக்கும் எனினும்
அறஞ்செய் அரசிற் கிழுக்கை அளிக்கும்,
ஆதலின் அரசே அறஞ்செய விரும்பி
பாதகஞ் செய்யும் பாழ்மது ஒழிக்க!
மாநிலம் முழுதும் மக்கள் நலஞ்செய
தானமும் தவமாய் ஒழிப்போம் மதுவை!
*விடம்....நஞ்சு
- கவிஞர் "இளவல்" ஹரிஹரன்,
மதுரை.
***
5) மது ஒழிப்பு..
ஒரு மதுக்கடை
ஒன்பது சுடுகாடுகள்
· சுடுகாட்டுக்குப் போகச்
சுருக்கமான வழி
இதோ… மதுக்கடை!
· தள்ளாடிய மந்திரி
மேடையில் வாந்தி
காந்தி பிறந்தநாள் விழா
· வனவிலங்காய்
மாறி வந்தது
மதுக்கடையில் நுழைந்த மனிதன்
· மதுக்கடையில்
சரக்கு காலி
கல்லூரி விழா
· கற்பை விலைதந்தாள்
கால்புட்டி மதுவுக்கு
கண்ணகி வாழ்ந்த நாடு
· மதுவேடனின்
வலைவிரிப்பு
மாட்டும் இளைஞா் பறவைகள்
· உலகம் சுழல்வதைக்
கண்டுபிடித்தவனும்
குடிகாரனோ…?
· மதுஒழிப்புப் போராட்டம்
பங்கேற்ற அனைவருக்கும்
குவாட்டர் பட்டுவாடா
· ஊருக்குள்
ஒரேஒரு மதுக்கடை
ஒன்பது சுடுகாடுகள்
- கோ. மன்றவாணன்
•••
6) சூன்யமாக்கிடும் மது !
சிந்தையை சிறைப்படுத்தி
தன்னிலை மறக்கடித்து
மதிப்பையும் தானழித்து
எண்ணம் - வண்ணம் எல்லாம்
குழம்பிப் போய் - பேசும்
வார்த்தைகளும் நிலை தடுமாற
நடையிலும் தள்ளாட்டம் சேர்ந்திட
சுற்றம் சூழ்நிலை மறந்த நிலையில்
ஊர் உலகுக்கு காட்சிப் பொருளாக்கி
தன்மானத்திற்கும் மரியாதைக்கும்
தானே இட்டுக் கொண்ட கொள்ளியாய்
சுட்டெரித்து சூன்யமாக்கிடும் - மது !
பி.தமிழ் முகில், கனடா
***
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.