பாடல் - 5
குழையும் வாள்முகத்து ஏழையைத்
தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண்
பிரான் இருந்தமை காட்டினீர்,
மழைபெய்தால் ஒக்கும் கண்ணநீரினொடு
அன்று தொட்டு மையாந்து இவள்
நுழையும் சிந்தையள், அன்னைமீர், தொழும்
அத்திசை உற்றுநோக்கியே.
அன்னைமார்களே, வருந்துகிற, ஒளிபொருந்திய முகத்தைக்கொண்ட இந்தப்பெண்ணைத் தொலைவில்லிமங்கலம் அழைத்துவந்தீர்கள், ஒளியையே ஆபரணமாகக்கொண்ட பெருமான், செந்தாமரைக்கண்களையுடைய பிரானை அவளுக்குக் காட்டினீர்கள், அன்றுதொடங்கி, இவளுடைய கண்களில் மழைபெய்தாற்போல் கண்ணீர் பொழிகிறது, மயங்கிநிற்கிறாள், பெருமானின் குணங்கள்மட்டுமே இவள் சிந்தனையில் நுழைகின்றன, அப்பெருமான் இருக்கும் திசையை உற்றுநோக்கித் தொழுகிறாள்.
***
பாடல் - 6
நோக்கும் பக்கம்எல்லாம் கரும்பொடு
செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண்
தொலைவில்லிமங்கலம்
நோக்குமேல் அத்திசை அல்லால் மறுநோக்கு
இலள், வைகல் நாள்தொறும்
வாய்க்கொள் வாசகமும் மணிவண்ணன்
நாமமே இவள் அன்னைமீர்.
அன்னைமார்களே, தாமிரபரணியின் வடகரையில் உள்ள தொலைவில்லிமங்கலத்தில், பார்க்கும் திசையெல்லாம் கரும்பும் செந்நெல்லும் செந்தாமரைகளும் செழிப்பாக வளர்ந்துள்ளன, குளிர்ந்த அந்தத் திருத்தலத்தை இவள் பார்த்தாளானால், அதன்பிறகு, அந்தத் திசையைமட்டுமே பார்த்துக்கொண்டிருப்பாள், வேறு திசைகளையே பார்க்கமாட்டாள், ஒவ்வொருநாளும் இவளுடைய வாயில் மணிவண்ணனின் பெயர்மட்டுமே ஒலிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.