பாடல் 10
வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன் வைத்த சடையிடைத்
தேன் அஞ்சு ஆடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே

விளக்கம்

சாடும் = சிதைக்கும், இருளை நீக்கி ஒளி கொடுக்கும் சந்திரனின் தன்மை. தேன் அஞ்சு = தேனுடன் கலந்த பஞ்சாமிர்தம். பலவிதமான பழங்களைக் கலந்து இறைவனுக்கு அபிடேகம் செய்வது வழக்கம். அவ்வாறு கலக்கப்படும் பழங்களுடன் தேனையும் கலந்து அபிஷேகம் செய்வது வழக்கம் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

சந்திரனும் பாம்பும் பல அம்சங்களிலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. மேலும் அவைகளின் இடையே பகையும் உண்டு. சந்திரன் பலர் காண இரவில் ஆகாயத்தில் பவனி வருவது; பாம்போ மற்றவர் தன்னைக் காணாதவாறு புற்றில் பதுங்கி இருப்பது. உடலுக்கு வெம்மை தரும் கொடிய விடம் கொண்டது பாம்பு; உடல் வெப்பத்தைத் தணிக்கும் குளிர்ச்சியைத் தருவது சந்திரன்; காண்போர் அனைவரையும் நடுங்க வைப்பது பாம்பு, தன்னைக் காணும் அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது சந்திரன். பெரும்பாலான பாம்புகள் கருமை நிறத்தில் காணப்படுகின்றன; சந்திரனோ பால் வெள்ளை நிறம். பாம்பின் உடலைக் கொண்டது இராகு கோள்; பாம்பின் தலையைக் கொண்டது கேது கோள்; இந்த இரண்டு கோள்களும் சூரியனையும் சந்திரனையும் பிடிக்கும் நாட்கள் கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது. எனவே சந்திரன், பாம்பினிடம் எப்போதும் பயத்துடன் இருப்பதாக கருதப்படுகின்றது. இந்த இரண்டு பகைவர்களும் ஒருவருக்கொருவர் அச்சம் கொள்ளாமல் இருப்பது அதிசயம்தானே. சர்வ வல்லமை பொருந்திய ஈசனின் சந்நிதானத்தில், பகைமை உணர்வுகளுக்கு இடம் ஏது? அதனால்தான், தங்களுக்கு இடையே உள்ள பகையை மறந்து, இருவரும் இறைவனின் சடையில் உலாவுகின்றார்கள் என்று இங்கே அப்பர் பிரான் தெரிவிக்கின்றார்.

கொடிய நஞ்சினை உடைய பாம்புடன் சந்திரனை ஒரே இடத்தில் வைத்தவன் என்றும், இருவருக்கும் இடையில் இருந்த பகையினை தீர்த்து ஆண்டவன் என்றும் பல தேவார பாடல்களில் இந்த கருத்து உணர்த்தப்படுகின்றது. அத்தகைய நயமான பாடல்களில் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பாம்பினையும் சந்திரனையும் தங்களுக்கு இருந்த பகையை மறந்து ஒருவருக்கொருவர் மிகவும் அருகினில் இருக்குமாறு உனது சடையில் வைத்தவனே, என்று அப்பர் பிரான் தான் அருளிய கடைப் பதிகத்தில் (6.99.2) குறிப்பிடுகின்றார். ஆல மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்த செய்கை ஆல் நிழலாய் என்று உணர்த்தப்படுகின்றது. பாற்கடலிலிருந்து திரண்டெழுந்த நஞ்சினைக் கண்டு அனைவரும் பாய்ந்து ஓடிய போது, சந்தேகம் ஏதுமின்றி, அந்த நஞ்சினை உண்ட பெருமானுக்கு, நஞ்சு எந்த விதத்திலும் கேடு விளைவிக்காததால், சாவா மூவாச் சிங்கமே என்று பெருமானை அப்பர் பிரான் இந்த பாடலில் அழைக்கின்றார்.

அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆனேறு ஊர்ந்தாய்
பங்கம் ஒன்றில்லாத படர் சடையினாய் பாம்போடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய தேவதேவே

ஞான சம்பந்தர் தனது பூந்தராய்ப் பதிகத்தின் முதல் பாடலில் (2.1.1) பிறையினை பாம்புடன் சடையில் வைத்த காரணம் ஏன் என்பது தனக்குத் தெரியவில்லை என்று பெருமானை நோக்கி உரைத்து அவனிடமே விடையினை எதிர்பார்ப்பதாக அமைந்த பாடல் இது. பூந்தராய் என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும். இமையோர்கள் முடிகள் அணிந்த தலைகள் கொண்டு சிவபெருமானின் திருப்பாதங்களை வணங்குவதால், முடிகள் தோயும் பாதங்கள் என்று பெருமானின் பாதங்களை குறிப்பிடுகின்றார். பாம்புக்கும் சந்திரனுக்கு இடையே இருக்கும் பகைமைதான் சம்பந்தரை, அவை இரண்டையும் ஒன்றாக வைத்தது ஏன் என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டுகின்றது என்பதை நாம் உணரலாம்.

செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
புன்னை வெண்கிழியில் பவளம் பூந்தராய்
துன்னி நல இமையோர் முடி தோய் கழலீர் சொலீர்
பின்னு செஞ்சடையில் பிறை பாம்புடன் வைத்ததே

ஒன்றுக்கொன்று பகைமை கொண்ட பாம்பினையும் சந்திரனையும், அவர்களுக்கு இடையே உள்ள பகையைத் தீர்த்து ஒரே இடத்தில் வைக்கும் திறமை சிவபெருமானைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதை உணர்த்தும் வண்ணம் வாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.76.5) சுந்தரர் கூறுகின்றார். பரிசு என்றால் தன்மை என்று பொருள். பைதல் = இளைய. கூவிள மாலை = வில்வ மாலை. கைதை = தாழம் பூ.

மைகொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்
பைதல் வெண்பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே

இவ்வாறு பாம்பும் சந்திரனும் ஒரே இடத்தில் இருப்பதை, தனது கற்பனையுடன் சேர்த்து சுவையாக அப்பர் பிரான் அருளிய பாடல் திருப்பழனம் தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் ஒரு பாடல் (5.35.4). இந்த பாடலில், சிவபெருமானின் சன்னதியில் இருப்பதால், சந்திரனை விழுங்க முடியாமல் போனதே என்று ஏங்கும் பாம்பு பெருமூச்சு விடுவதாகவும், பெருமூச்சு விடும் பாம்பினைக் கண்டு சந்திரன் நடுங்குவதாகவும் கற்பனை செய்யும் அப்பர் பிரான், இவ்வாறு இருவரையும் அந்த நிலைக்கு உள்ளாக்கி, பெருமான் தனது சடையில் அணிந்து கொண்டதன் காரணாம் ஏனோ என்று கூறுவதாக அமைந்த பாடல். வாக்கப் பாம்பு, நீர் ஓடையாக ஓடுவது போன்று நெளிந்து வரும் பாம்பு. துணி மதி = துண்டாக்கப் பட்ட சந்திரன், பிறைகள் தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் இருக்கும் சந்திரன். பாக்க என்ற சொல் பார்க்க என்ற சொல்லின் திரிபு

மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கப் பாம்பினைக் கண்ட துணி மதி
பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்
தார்க் கொண் மாலை சடைக்கு அணிந்திட்டதே

மேற்கண்ட பாடலில் தான் கண்ட கற்பனைக் காட்சியில் இன்னொரு நபரையும் சேர்த்து, தனது கற்பனையை அப்பர் பிரான் விரிப்பதை நாம் அதிகை வீரட்டப் பதிகத்தின் ஒரு பாடலில் (4.10.8) நாம் காணலாம். சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைகின்றது. சடையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள கங்கை அசைகின்றது. அந்த கங்கை நீரினில் தோய்ந்த சந்திரன் ஆடுகின்றது. அவரது தலை மாலையில் உள்ள மண்டையோடு தனது பற்களை இழந்த நிலையில் சிரிப்பது போன்று காட்சி அளிக்கின்றது. இந்த காட்சிகளைக் காணும் அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. அந்த கற்பனைக் காட்சி தான் இந்த பாடலில் விளக்கப்படுகின்றது. இந்த பாடலின் நயத்தில் தனது மனதினை பறி கொடுத்த கி.வா.ஜா. அவர்கள், தனது திருமுறை மலர்கள் புத்தகத்தில், மூன்று பக்கங்களுக்கு மேலாக ஒரு கட்டுரையினை இந்த பாடலுக்கு வரைந்திருக்கின்றார்.

கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்
கிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுறக்
கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
கிடந்து தான் நகு தலை கெடில வாணரே

சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைவதைக் கண்டு, அருகில் இருக்கும் கங்கை நங்கை அச்சம் அடைகின்றாள். அச்சத்தால் அவள் உடல் நெளியவே, அவளது கரிய கூந்தல் ஆடுவதைக் கண்ட பாம்பு, அவளை மயில் என்று தவறாக நினைத்து பயப்படுகின்றது. தங்களது பகைமையை அடக்கி, தன்னையும் பாம்பையும் தனது சடையில் இறைவன் ஏற்றதால் அந்நாள் வரை அச்சமின்றி சடையில் உலாவிய சந்திரன், தனது பகைவனாகிய பாம்பு அசைவதைக் கண்டு, ஒரு கால் பாம்பு தன்னை விழுங்குவதற்காக வருகின்றதோ என்று பயம் கொள்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொள்வதைக் கண்ட, தலை மாலையில் உள்ள மண்டையோடு சிரிக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்ட சூழ்நிலையை உருவாக்கி, அந்த சூழ்நிலையைக் கண்டு நகைக்கும் மண்டையோட்டினை மாலையில் அணிந்துள்ள கெடில வாணரின் தோற்றம் மிகவும் வியப்புக்கு உரியது இது தான் இந்த பாடலின் பொழிப்புரை.

இதேபோன்ற கற்பனை செய்து, சிவபெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமில்லை என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் (4.53.2) திருவாரூர் பதிகத்திலும் உள்ளது. நங்கை = பார்வதி தேவி. மஞ்ஞை = மயில். வேழம் = யானை. ஆகம் = உடல். நிமிர்தல் செய்யா = நிமிர்ந்து நில்லாமல் வளைந்து காணப்படும் பிறை கொண்ட சந்திரன். உரிவை = தோலாடை.

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று
வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து
பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்துவிட்டதோ என்ற அச்சத்தில், தனது வேகத்தைத் தவிர்க்கின்றது. இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்துகொள்வதும், பாம்பு சென்றுவிட்டதா இல்லையா எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்கின்றது. அவ்வாறு எட்டிப் பார்க்கும்பொழுது, சந்திரன் முழுமையாகத் தெரியாமல், மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதால், மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கிவிடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி பாம்பு ஒதுங்கியது என்று உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அதுபோன்று உமையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல்தான், இவர்கள் மூவரும் அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப்பெற்று, கங்கை எனும் நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார்

பொழிப்புரை

ஆகாயத்தில் உள்ள இருளினைத் தனது ஒளியின் மூலம் சிதைக்கும் சந்திரனை, அச்சம் ஏதுமின்றி தனது சடையினில் பாம்புடன் இணைந்து உலாவ வைத்தவன் சிவபெருமான். அவன் தேனுடன் கலந்த பழங்களின் கலவையால் நீராட்டப் பெறுவதை மிகவும் விரும்புகின்றான். அவன் இளநீரில் நீராடுபவன்: பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்ட பஞ்சகவ்யத்தில் நீராடுவதையும் பெரிதும் விரும்புகின்றான். அவன் தான் ஆமாத்தூரில் உறையும் அய்யன் ஆவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.