தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தைவான் தமிழ் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அறவழியில் போராடிய தூத்துக்குடி மாநகரப் பொது மக்களின் மீது தமிழக காவல்துறையினரின் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தை கண்டித்து தைவான் தமிழ்ச்சங்கத்தினாரால் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு கண்டனக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தைவானின் ஷிஞ்சு நகரத்தில் உள்ள பூங்காவில் தைவானின் பல்வேறு நகரத்தில் இருந்து தமிழ் மக்கள் வந்து கலந்து கொண்டு தமிழக காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
ஒரு ஜனநாயக நாட்டில் அறப்போராட்டங்கள் மக்களின் அடிப்படை உரிமை. அவர்களைக் காக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. இந்த உயர்ப்பலி நிச்சயம் தவிர்த்திருக்கக் கூடிய ஒன்று. இந்த போராட்டத்தின் போது உயிர் இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும், தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். காவல் துறையின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு பலியாகிய அப்பாவி பொதுமக்கள் 13 பேருக்கும் தைவான் தமிழ்ச்சங்கத்தின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கும்படி மாநில மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இத்தருணத்தில் மீண்டும் ஒரு முறை தைவான் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம் என்று வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.