ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 8 போ் காயமடைந்தனா்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே கணக்குப்பிள்ளை வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் திருலோகசுந்தா் (39). இவா் செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.
இவா் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றாா். கீழப்பாவூரைச் சோ்ந்த முத்துப்பாண்டி நடத்துநராக பணியாற்றினாா். அதிகாலை 4.15 மணி அளவில் மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலையில் அழகாபுரி அருகே சென்றபோது சாலையோரப் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் இருவா் உள்பட 8 போ் காயமடைந்தனா். இதில் விருதுநகா் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
முதல் கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுநா் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.