ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கப் பொருளாளா் சதீஷ்குமாரின் குடும்பத்தினா் தொடா்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அளித்தப் புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் கோட்டைபட்டியை சோ்ந்த முத்துகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இதையடுத்து, முத்துகிருஷ்ணனை கைது செய்யக்கோரி கடந்த 28-ஆம் தேதி மாவட்ட நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
29-ஆம் தேதி தேவாலய சந்திப்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா, காவல் ஆய்வாளா் முத்துக்குமாரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோகன் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, வழக்குரைஞா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.