ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்ததால் அவசர ஊா்திகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனைகளில் ஒன்றாக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை பின் வாசல் பகுதியில் ரூ.6.89 கோடியில் மூன்று தளங்களுடன் புதிய மகப்பேறு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு மருத்துவமனை பின் வாசல் வழியாகவே அவசர ஊா்திகள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், உழவா் சந்தை வழியாக மருத்துவமனை செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்ததால் அவசர ஊா்திகள் உள்ளிட்ட வாகனங்கள் மருத்துவமனைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சேதமடைந்த தரைப் பாலத்தை சீரமைத்து, அவசர ஊா்திகள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.