ஆபரேஷன் சிந்தூர் எப்படிப்பட்ட வெற்றி? போர் நிபுணர் அளித்திருக்கும் மாஸ் விளக்கம்!
ஆபரேஷன் சிந்தூர் எப்படிப்பட்ட வெற்றி என்பது குறித்து போர் நிபுணர் ஜான் ஸ்பென்ஸர் விளக்கம் கொடுத்துள்ளார்.
புது தில்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர், மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக, போர் நிபுணர் ஜான் ஸ்பென்ஸர் தெரிவித்துள்ளார்.
மாடர்ன் வார் இன்ஸ்டிடியூட்டில் நகர்ப்புற போர் ஆய்வுகளின் தலைவராகப் பணியாற்றி வருகிறார் ஜான் ஸ்பென்ஸர். நகர்ப்புற போர்த் திட்டத்தின் இணை இணையக்குநராகவும் உள்ளார்.
உலகம் முழுவதும் நடைபெறும் போர்களைப் பற்றி ஆராய்ந்து பல்வேறு தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.
இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து நிறுத்தப்பட்டுள்ள சண்டை குறித்தும், சிந்தூர் தாக்குதல் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்திருக்கிறார்.
அதில் குறிப்பிடத்தக்க விஷயம் இதுதான், அதாவது இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கை என்பது, அதன் பலவீனம் அல்ல - அது முதிர்ச்சியின் வெளிப்பாடு. அது செலவுகளை கணக்கிட்டது, எல்லைகளை மறுவரையறை செய்து, தனது எல்லையில் தங்களுக்கான ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியா ஒரே ஒரு தாக்குதலுக்கு மட்டும் பதிலளிக்கவில்லை. அது, இதுநாள்வரை இருந்த பயங்கரவாதத்தின் அடிப்படை சமன்பாட்டையே மாற்றியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார். இவை அப்பட்டமாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமானது இல்லை என்று கூறப்படுகிறது.
இனி.. ஜான் ஸ்பென்ஸர் கூறியதிலிருந்து..
இந்தியா இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முழுவதுமாக முடிந்துவிட்டதாக அறிவிக்கவில்லை. தற்போது சண்டை நிறுத்தப்பட்டிருப்பது என்பது மிக முக்கியமான நடவடிக்கை. சிலர் இதை ஒரு போர் நிறுத்தம் என்று கூறுகிறார்கள். ஆனால் இராணுவ உயர் அதிகாரிகள் மிகக் கவனத்துடன் அந்த வார்த்தையைத் தவிர்த்துவிட்டனர். போர்க்களக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது வெறும் போர் இடைநிறுத்தம் மட்டுமல்ல; இது ஒரு அரிய மற்றும் தெளிவற்ற ராணுவ நடவடிக்கையினால் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் நிலைப்பாடு.
இந்திய ராணுவத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டு நான்கு நாள்களுக்குப் பிறகான இந்த நிலைப்பாடானது, வெளியிலிருந்து வந்த காரணிகளால் எடுக்கப்பட்ட முடிவு. இந்தியா ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுவிட்டது. ஆபரேஷன் சிந்தூர் அதன் அடிப்படையான நோக்கங்களை அடைந்துவிட்டது, அது மட்டுமல்ல அதையும் தாண்டி சாதித்துவிட்டது. பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்து, நாட்டின் ராணுவ மேம்பாட்டை நிரூபித்து, ஆக்ரமிப்புகளை மீட்டெடுத்து, ஒரு புதிய தேசிய பாதுகாப்பு கோட்பாட்டையே உருவாக்கியிருக்கிறது.
ராணுவப் படையின் அடையாளம் மட்டுமல்ல. இது ராணுவ சக்தியின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடு. அது துல்லியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டு சில கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது:
மே 7: பாகிஸ்தான் எல்லைக்குள் ஒன்பது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பஹாவல்பூர், முரிட்கே, முசாபராபாத் மற்றும் பிற இடங்களில் உள்ள முக்கிய பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மற்றும் தளவாட கிடங்குகள் இலக்குகளாக அமைந்தன.
மே 8: பாகிஸ்தான் இதற்கு பதிலடியாக, இந்தியாவின் மேற்கு மாநிலங்கள் மீது பெரிய ட்ரோன் கூட்டத்தை அனுப்பியது. ஆனால் இந்தியாவின் பல அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பானது - இஸ்ரேலிய மற்றும் ரஷ்ய அமைப்புகளின் உதவியோடு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டவை - கிட்டத்தட்ட அனைத்தை ட்ரோன்களையும் முறியடித்தது.
மே 9: இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் ஆறு ராணுவ விமான ஏவு தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு ரேடார்களின் ஒருங்கிணைப்பு மையங்கள் மீது அதிரடித் தாக்குதல்களை நடத்தியது.
மே 10: இருதரப்புக்கு இடையே சண்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தியா இதை ஒரு போர் நிறுத்தம் என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை. இந்திய ராணுவம் இதை "துப்பாக்கிச் சூடு நிறுத்தம்" என்றுதான் அடையாளப்படுத்தியது. அப்போதிருந்த சூழ்நிலையின் மீதான இந்திய நாட்டின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு சொல் அது என்றாலும், வேண்டுமென்றே போர் நிறுத்தம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை இந்தியா.
இது வெறும் தந்திரோபாய வெற்றி மட்டுமல்ல. துப்பாக்கிச் சண்டை என்ற பெயரில் இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலின் கோட்பாடு என்று விவரித்துள்ளார்.