""நான் அப்பவே நினைச்சேன். ஒழுங்காய் ஒரு பத்து நூறு ரூபாய் நோட்டுக்களைச் சரியாக எண்ணத் துப்பு இல்லாத நீங்க, மொய் எழுத உட்கார்ந்தபோது எனக்குத் தெரியும். ஏதாச்சும் தப்பு நடந்திடும்னு. இப்போ சுளையாய் ஆயிரத்து அறுநூறு ரூபாய், கணக்கிலே குறையுதுனு என்கிட்டே பணம் கேக்கிறீங்களே, உங்களை என்ன செய்யிறது?. நான் மதுரைக்கு வர்றபோதே, இங்கே அழகான பித்தளை மீனாட்சி குத்துவிளக்கு கிடைக்கும்; வாங்கிக்கிட்டுப் போகலாம்னு ஆசையாய் ரெண்டாயிரம் ரூபாய் கொண்டு வந்தேன். அந்த ஆசையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டு, ஆயிரத்து அறுநூறு ரூபாய் கொடுனு கேக்கிறீங்களே?'' என்று குரலில் அதிர்ச்சி வெடிக்கப் புலம்பினாள் சரசு.
பதறிப்போன சுந்தரம் அறைக்குள் நின்றபடி வெளியே பார்வையைச் சுழற்றியவாறு ""ப்ளீஸ், சரசு! சத்தம் போட்டுப் பேசாதே... யார் காதிலேயாவது விழுந்திடப் போகுது...'' என்று அவள் வாயை மூடத் துணிவு இல்லாமல் தன் வாயின் குறுக்கே விரலை வைத்து மூடிக் காட்டினான்.
""யார் காதிலே விழுந்தா என்ன? யாராவது நான் ஆசைப்படற குத்துவிளக்கை வாங்கிக் கொடுக்கப் போறாங்களா?'' என்று தொடர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் மனைவி.
நல்லவேளையாக, திருமணம் சாப்பாடு எல்லாம் முடிந்து, திருமண மண்டபத்து அறைகளில் தங்கியிருந்தவர்கள் அறைகளைக் காலி செய்து விட்டுப் போயிருந்தார்கள். திருமண வீட்டு உறவினர் சிலர் மட்டும் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
நண்பன் சொக்கலிங்கத்தின் மகள் திருமணத்திற்கு, முதல் நாளே காரைக்குடியிலிருந்து மனைவியுடன் வந்துவிட்டான் சுந்தரம்.
எத்தனை ஆண்டுப் பழக்கம்?
தொடக்கப் பள்ளியிலிருந்து கல்லூரி வரை, ஒன்றாகவே படித்தவர்கள் சுந்தரமும் சொக்கலிங்கமும்.
சொக்கலிங்கம் கொஞ்சம் முன்னே பின்னே படிப்பான். ஒன்றிரண்டு "பெயில்'கள் ஒன்றிரண்டு "அரியர்ஸ்' என்று கொஞ்சம் பின் தங்கியிருந்து, நண்பனை எட்டிப் பிடிப்பான் சொக்கலிங்கம்.
சுந்தரம் படிப்பில் கெட்டிக்காரன். எப்போதும் வகுப்பில் முதல் மாணவன். நல்ல மதிப்பெண் வாங்கித் தேறியதால் கல்லூரியில் முதல் குரூப் எடுத்துப் படித்து பி.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி பட்டதாரியாகி பி.எட். முடித்து ஆசிரியராகிவிட்டான்.
தொடக்கப்பள்ளி ஆசிரியரான மாணிக்கத்திற்கு தன் மகன் சுந்தரம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரானதிலே, பெரும் மகிழ்ச்சி.
"வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற பழமொழியை என் பிள்ளை பொய்யாக்கிட்டான்' என்று நெஞ்சை நிமர்த்திக் கொள்வார் அவர்.
பி.ஏ. தேறுவதற்குள்ளே பாதி கஜினி முகமது ஆகிவிட்ட சொக்கலிங்கம், அலைந்து திரிந்து கடைசியாக ஓர் அரசாங்க அலுவலகத்திலே எழுத்தர் வேலையைப் பிடித்துவிட்டான்.
"கால்காசு உத்தியோகம் என்றாலும், கவர்மென்ட் உத்தியோகம்' என்பது, வேலையில் சேர்ந்த பிறகுதான் அவனுக்குப் புரிந்தது.
தாலுகா அலுவலக பியூனாக இருந்த முனியாண்டிக்குப் பெரிய ஆதங்கம் ""என் புள்ளை காலேசுப் படிப்புப் படிச்சு பெரிய கலெக்டராக வருவான்னு நெனைச்சேன். கடேசியிலே ஒரு கிளார்க்காகத்தான் வர முடிஞ்சுது'' என்று பெருமூச்சே விடுவான் அவன்.
நடுத்தர வர்க்கத்திற்கு மேல் போக முடியாமலும், கீழே தாழ்ந்துவிடாமலும் வாழ்ந்துகொண்டிருந்த அந்த நண்பர்களுக்கிடையே, நட்பு மட்டும் உயர்தரமாகவே நீடித்து நின்றது. ஒருவன் காரைக்குடியிலும் இன்னொருவன் மதுரையிலும் இருந்தாலும், தொடர்பு விட்டுப் போகாமல் இருந்தது.
சொக்கலிங்கம், தன் மகளுக்குத் திருமணம் நிச்சயமானதும், மனைவியோடு நேரே சுந்தரத்தின் வீட்டுக்கே வந்து அழைப்புக் கொடுத்தான்.
""சுந்தரம்! மேலமாசி வீதியிலே ஆறுமுகா மண்டபத்திலேதான் கல்யாணம். அதிலே தங்குறதுக்கு நாலைஞ்சு ரூம் இருக்கு. அதிலே உனக்கு ஒரு ரூம் ஒதுக்கித் தந்திடறேன். "ஒய்ஃப்'போடு முதல் நாளே வந்திடணும்'' என்று கேட்டுக் கொண்டான் அவன்.
அப்படியே, சரசுவோடு திருமணத்திற்கு முதல் நாளே, மண்டபத்திற்கு வந்து தங்கிவிட்டான் சுந்தரம். வந்ததிலிருந்து நண்பனுக்கு, கூடமாட ஒத்தாசையாக இருந்தான்.
திருமண நாள் அன்று, காலையில் ஒரு பெட்டியையும் "நோட் புக்'கையும் சுந்தரத்திடம் கொடுத்தான் சொக்கலிங்கம்.
""சுந்தரம்! தாலி கட்டுற முகூர்த்தம் முடிஞ்சதும், நீயே முகப்பிலே மொய் எழுத உட்கார்ந்திடு... என் சொந்தக்காரர்களை நம்ப முடியாது. என்னோட வேலை செய்கிற "கிளார்க்'குகளை, அதுக்கு மேல் நம்ப முடியாது. சுனாமி நிவாரணத்திலேயே கமிஷன் சுரண்டிடுவானுங்க... நீயே உட்கார்ந்து எழுது'' என்று ரகசியமான குரலில் அறைக்குள் வந்து அவன் சொன்னபோது, சுந்தரத்தால் மறுக்க முடியவில்லை.
சரசு சொன்னது சரிதான். சுந்தரம் படிப்பில்தான் கெட்டிக்காரனே ஒழிய, பணவிஷயத்தில் ரொம்ப "வீக்'. ஒரு நோட்டுக்கட்டை அவனிடம் கொடுத்து எண்ணச் சொன்னால், எண்ணுகிற ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கூட்டுத் தொகை வரும்.
அவள் பயந்தபடியே ஆகிவிட்டது. திருமணத்திற்கு வந்தவர்களெல்லாம் சொக்கலிங்கத்தின் "அந்தஸ்து'க்காக நூறு, இருநூறு, ஐந்நூறு என்று மொய் எழுதினார்கள். கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு எழுதும்போது, யாரோ நாலைந்து பேர், பெயர்களைச் சொல்லி எழுத வைத்துவிட்டுப் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்.
அந்த நெருக்கடியில் ஆயிரத்து அறுநூறு ரூபாய் குறைந்துவிட்டது, கடைசியில்தான் தெரிந்தது அவனுக்கு.
சரசுவுக்கு ஆத்திரம் சூடாகிக் கொதித்தது.
""ஆத்ம நண்பருக்கு உதவி செய்யணும்னா அதுக்கு வழியா இல்லை? சமையற்கட்டிலே போய் மேற்பார்வை பார்க்கலாம். அல்லது வரவேற்பிலே நின்னு வர்றவங்களை "வாங்க, வாங்க'ன்னு கூப்பிட்டு, உட்கார வைக்கலாம்; அல்லது, பந்தியிலே நின்னு சாப்பிடறவங்கக்கிட்டே, "சாம்பார் வேணுமா, மோர் வேணுமா, பாயசம் போடச் சொல்லவா'னு விசாரிச்சுக்கிட்டு நிற்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு, மொய் எழுதுற இடத்திலே நீங்க உட்காரலாமா? மொய் எழுதின தொகையைக் கூட்டினதிலே ஆயிரத்து அறநூறு குறையுதுனு உண்மையைச் சிநேகிதர்கிட்டே சொல்ல முடியுமா? மத்தவங்களையெல்லாம் நம்பாமல்தானே, உங்களை நம்பி உட்கார வச்சார்? இப்போது, பணம் குறையுதுனு சொன்னா, மத்தவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?'' ""ப்ளீஸ், சரசு! மெதுவாய்ப் பேசு... வெளியே யார் காதிலேயாவது விழுந்திடப்போகுது... தயவு செஞ்சு. நீ கொண்டு வந்திருக்கிற பணத்திலே ஆயிரத்து அறுநூறு ரூபாய் கொடு... மொய்ப் பணக்கணக்கை அவன்கிட்டே கொடுத்திட்டு ஊருக்குக் கிளம்பலாம். அப்புறமாய் நீ சொல்ற அந்த மதுரை மீனாட்சி குத்துவிளக்கை வாங்கிவிடலாம். மதுரையும் பித்தளை விளக்கும் எங்கேயும் போயிடாது. ஆனால், ஆயிரத்து அறுநூறு இல்லேன்னா, என் மானமும் மரியாதையும் போயிடும். சரசு!'' என்று மெலிந்த குரலில் கெஞ்சினான கணவன்.
""ஆமா... மதுரையும் குத்துவிளக்கும் இங்கேதான் இருக்கும். ஆனா, நாமதான் காரைக்குடியிலே இருப்போம். உங்களைக் கட்டிக்கிட்டு நான் என்ன பெரிசா ஆசைப்பட்டேன்? ஒரு மீனாட்சி குத்துவிளக்கு வாங்கி, பூஜையறையிலே வச்சுக் கும்பிடலாம்னு ஆசைப்பட்டேன். அதுகூட நிறைவேறலே...'' என்று பிரலாபித்துக் கொண்டே, தன் கைப்பையிலிருந்து ஆயிரத்து அறுநூறு ருபாயை எண்ணி எடுத்துக் கொடுத்தாள் மனைவி.
அதைப் பெட்டிக்குள் வைத்து, மொய் எழுதிய "நோட்புக்'கையும் சொக்கலிங்கத்தடம் சேர்ப்பித்தான் அவன்
""சுந்தரம்! ரொம்ப நன்றிடா... சின்ன வயசிலே இருந்த சிநேகித்தை மதிச்சு இங்கே வந்து கல்யாணத்துக்கு ரொம்ப ஒத்தாசையாயிருந்தியே...'' என்று நன்றியுணர்ச்சி விழிகளில் ஈரமாகக் கசிய, நண்பனுக்குத் தாம்பூலப் பை, எவர்சிலர்வர் வாளியில் பழம், பலகாரம் எல்லாம் வைத்துக் கொடுத்து அனுப்பினான் சொக்கலிங்கம்.
ஒரு மாதம் கழித்து-
திடீரென்று காரைக்குடிக்கு வந்தான் சொக்கலிங்கம். மகிழ்ச்சியோடு சுந்தரமும் சுரசுவும் அவனை வரவேற்று உபசரித்தார்கள்.
""அடுத்த வாரம் கார்த்திகைத் திருநாள் வருது, இல்லியா? அதுக்காக என் மகளுக்குப் பித்தளைக் குத்துவிளக்கு கொடுக்கலாம்னு தோணிச்சு.. கடையிலே வாங்கிக்கிட்டு நேத்து வந்தேன். "ஏற்கனவே எங்க வீட்டிலே ரெண்டு மீனாட்சி விளக்கு இருக்குப்பா! எனக்கு வேண்டாம்'னு சொல்லிட்டா மஞ்சு. அந்த விளக்கை மறுபடியும் மதுரைக்குத் தூக்கிச் சுமக்க வேண்டாம். உன்கிட்டேயே கொடுத்திட்டுப் போகலாம். நீ இதை பூஜை அறையிலே வச்சு தீபம் ஏத்திக் கும்பிடுவே'னு நினைத்துக் கொண்டு வந்தேன்'' என்று சொல்லிக்கொண்டே தன்னுடன் கொண்டு வந்திருந்த அட்டைப்பெட்டியை பிரித்தான் நண்பன்.
அதனுள்ளே இருந்த குத்துவிளக்கின் ஒளியைவிட, கணவனின் முகம் பிரகாசிப்பதைக் கவனித்தாள் சரசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.