சிறுவர் சிறுமியர் புழுதியில் விளையாடும் போது கிருமித் தொற்று காரணமாகத் தலையில் புழுவெட்டு என்னும் உபாதைக்கு ஆளாகி விடுகின்றனர். ஒரு அங்குலம் முதல் இரண்டு அங்குலம் வரை வட்டமாக தலைமயிர் உதிர்ந்து சொட்டையாக ஆகிவிடுகின்றது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை என்ன? இது ஏற்படாதிருக்க எச்சரிக்கை நடவடிக்ககைள் என்ன ?
புழுவெட்டு என்னும் உபாதைக்கு கீழ்காணும் சில எளிய வழிகளால் குணம் காணலாம். கடுக்காயை அரைத்து இரவில் புழுவெட்டு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி, மறுநாள் காலையில் கழுவிவிடலாம்.கடுக்காயுடன் மஞ்சளையும் அருகம்புல் சாறுடன் அரைத்து, இரவில் பூசி, மறுநாள் காலையில் கழுவலாம். மருதாணி இலையை அரைத்துப் பூசலாம்.
காசிக்கட்டி (இதை சிலர் "கத்தைக் காம்பு' என்பர்.) யை தண்ணீரில் ஊறவைத்து கோந்து போல் அது கரைந்த பிறகு அதைப் பூசிக் கொள்வதும் உபயோகமான முறை.
பறங்கிச் சக்கை என்று ஒரு கடைச் சரக்கு. இதற்கு "மதுஸ்னுஹீ' என்று வடமொழியில் பெயர்.
வெளிநாடுகளிலிருந்து நம்நாட்டில் இறக்குமதி ஆகிறது.
இது ஒரு கிழங்கு. நன்றாக இடித்து, துணியால் சலித்து நைஸôன பொடியை, 2,3 சிட்டிகை அளவு வரையில் வயதிற்கு ஏற்றபடி தினம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் போதும். அதுவும் இரவில் மட்டும்தான். அதில் ஒரு சொட்டு தேனையும், திக்தகம் எனும் ஆயுர்வேத நெய் மருந்தைச் சற்று தூக்கலாகவும் குழைத்து, இரவு படுக்கும் முன் சாப்பிட வேண்டும். வேண்டுமானால் மருந்துடன் சிறிது சர்க்கரையோ பொடி செய்த சீனாக் கல்கண்டையோ கூட்டிக் கொள்ளலாம். கிருமித் தொற்றால் ஏற்படும் புழுவெட்டு உபாதை எளிதில் குணமாக இது உதவக்கூடும்.
வெள்ளை மிளகு, அல்லது வெறும் மிளகைப் பாலில் அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளிப்பதால் கிருமித் தொற்று, பொடுகு போன்ற உபாதைகளை நீக்க முடியும்.
300 மி.லி. நல்லெண்ணெய்யில் 30 கிராம் வேப்பம்பூ, 15 கிராம் வெல்லம் சேர்த்து முறியக் காய்ச்சி வடிகட்டி, தலை முழுகவும். தலைக்குத் தடவி வந்தால் பொட்டு பொடுகு புழுவெட்டு போன்றவை குணமாகி விடும்.
சததௌத கிருதம் எனும் மருந்து ஆயின்மெண்ட் வடிவில் தற்சமயம் வரத் துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து புழுவெட்டு ஏற்பட்டுள்ள பகுதியில் உபயோகித்து வந்தால் அங்குள்ள கிருமிகள் நசிந்து விடும். கிருமித் தொற்று மாறியவுடன் சுமார் ஒரு வாரத்திற்குப்பின் "இந்த்ரலுப்தம்' எனும் பொடிமருந்தை அய்யப்பாலா எனும் மூலிகை மருந்துத் தைலத்துடன் குழைத்துப் பூசி வர, புழுவெட்டு உபாதை நீங்கும்.
வேப்பம்பட்டையை 60 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, 250 மிலி ஆகும் வரைக்காய்ச்சி வடி கட்டவும் . ஆறியபிறகு அதில் கையிட்டுச் சிலுப்பினால் நுரை வரும். அதை எடுத்து புழுவெட்டு உள்ள பகுதிகளிகளில் தேய்க்கவும். கிருமிகள் விரைவில் நசிந்து விடும்.
யானைத் தந்தம், மான்கொம்பு, மாட்டுக் கொம்பு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் தூள் - பொம்மை தயாரிப்பாளர்களிடம் கிடைக்கும். அந்தத் தூளை ஒரு மண் கலத்திட்டு, கரிக்கும் மட்டும் அடுப்பிலிட்டு வறுக்க, ஒரு மசியாக மாறிக் கிடைக்கும்.
இதைச் சிறிது தேங்காய் எண்ணெய்யில் குழைத்துத் தலையில் அழுத்தித் தேய்ப்பதால் ஆரம்ப நிலையிலுள்ள வழுக்கை, புழுவெட்டு ஆகியவை மாறும்.
தூர்வாதி தைலம், மாலத்யாதி தைலம், சதுக்கஷீரி தைலம், அய்யப்பாலா தைலம் ஏலாதி தைலம் போன்ற தோல் பாதுகாப்பைத் தரும் தைலங்களில் ஒன்றை குழந்தைகளுக்குத் தலையில் தொடர்ந்து தேய்த்து தலை சீவிவர, புழுவெட்டு உபாதை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
புழுதியில் விளையாடிவிட்டு குழந்தை வீட்டிற்கு வந்தவுடன் கை, கால்களை நன்றாக அழுக்கு போகும்படி தண்ணீர் விட்டு அலம்பிவிடுவதும், அவர்களாகவே செய்து கொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்துவதும், புழுவெட்டு உபாதையைத் தவிர்க்க மேலும் ஒரு வழியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.