தினமணி கதிர்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வயிற்று உப்புசம், மூச்சிரைப்பு - தீர்வு என்ன?

எனக்கு வயது 65. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்து இடது இடுப்புப் பகுதியில் பிளேட் வைத்து ஆபரேஷன், வயிறு பருத்து பானை போல் உள்ளது.

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 65. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்து இடது இடுப்புப் பகுதியில் பிளேட் வைத்து ஆபரேஷன், வயிறு பருத்து பானை போல் உள்ளது. காலையில் வெறும் வயிற்றிலேயே கனமாக உள்ளது. மிகவும் உப்புசமாகவும் உணர்கிறேன். மாலை வேளைகளில் மட்டும் ஒருவிதமான மூச்சிரைப்பு ஏற்பட்டு, அடங்க சுமார் அரை மணி நேரம் ஆகிறது. இட்லி, மிளகாய்பொடி, பூண்டு எண்ணெய் அதிகம் சாப்பிடுவேன். இதற்குப் பரிகாரம் என்ன?

எஸ்.கே.முரளிதரன், சென்னை-73.

ஸமானன் என்றும் அபானன் என்றும் இரு வாயுக்கள் குடல் பகுதியில் தங்கியிருந்து தமக்கே உரிய சில அரிய செயல்களைச் செய்கின்றன. ஸமான வாயு பசித்தீக்கு அருகில் இருந்து கொண்டு அதைத் தூண்டுகிறது. சீரணப்பை, இரைப்பை, தோஷங்கள், மலங்கள், விந்து, மாதவிடாய் இவற்றைச் செயல்படுத்தும் நரம்பு மற்றும் குழாய்களில் உலாவுகிறது. இதன் உதவியால் உணவை ஏற்றுக் கொள்ளுதல், சீரணிக்கச் செய்தல், உணவைப் பிரித்தல், மலத்தைக் கீழ்நோக்கிச் செலுத்துதல் ஆகிய செயல்கள் நடைபெறுகின்றன. அபானன் எனும் வாயுவானது இடுப்பின் கீழ்ப் பகுதியில் தங்கி, நீர்ப்பை, இடுப்பின் பின்பக்கம், தொடை இடுக்குகள், தொடைகள் இவற்றில் உலவுகின்றது. மலம், சிறுநீர், விந்து, மாதவிடாய், கரு இவை உடலில் உறைதல் இவற்றை வெளிப்படுத்துதல் போன்ற செயல்களைச் செய்கிறது.

இடுப்பில் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையின் விளைவாக, உங்களுக்கு அபான வாயுவின் செயல்பாடுகளில் மந்த கதி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நடப்பதிலும் அமர்வதிலும், படுப்பதிலும் ஒருவித ஜாக்கிரதையான உணர்வுடனேயே அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் நீங்கள் செயல்பட வேண்டிய நிலையில் இருப்பதன் விளைவே கதி முடக்கத்துக்குக் காரணமாகலாம். இந்த கதி முடக்கம் ஸமான வாயுவிலும் பிரதிபலிப்பதால், அதன் செயல்களும் மந்தமாகின்றன.

மேற்குறிப்பிட்ட இருவாயுக்களின் மந்தநிலை, உங்களுக்குக் காலையில் வெறும் வயிற்றிலேயே கனமான உணர்வையும், உப்புசமான நிலையையும் ஏற்படுத்துகின்றன. இவற்றின் மந்த கதியினால் ஜீரண உறுப்புகள் கோளாறு அடையலாம். அதனால் ஏற்படும் பசிக்குறைவினால், வயிற்றில் பொருமல், வலி ,பசியின்மை, வயிறு கனத்திருத்தல் முதலிய உபத்திரவங்கள் ஏற்படலாம். காரமான உணவின் மீது ஆர்வம் இதனால் ஏற்படக் கூடும்.

இதற்கான பரிகாரம் அஷ்ட சூரணம் எனும் ஆயுர்வேத மருந்தின் மூலம் பெற முடியும். 2 சிட்டிகை முதல் அரை ஸ்பூன் வரை சாப்பாட்டின்போது சூடான முதல் சாதக் கவளத்துடன் சிறிது நெய்யையும் சேர்த்துப் பிசைந்து சாப்பிடவும். இதனால் நல்ல பசி உண்டாகும். மலம், சிறுநீர் தடையின்றி வெளியாகும். ஜீரணக் குறைவினால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நிற்கும். வயிற்றில் காற்று சேராது. பொதுவாக ஜீரண கோசத்தில் வாயுவினால் ஏற்படும் கோளாறுகள் இதனால் நீக்கப்படும். இந்த சூரணத்தைத் தண்ணீர் விட்டரைத்து, சிறிது சுட வைத்து, வயிற்றின் மீது பற்றுப் போடுவதன் மூலமாகவும் உங்களுக்கு ஏற்பட்டுள்ள வயிற்று உப்புசத்தைக் குறைத்துவிடலாம்.

வாயுக்களின் கதி முடக்கத்தை நீக்கி, அவற்றின் செயல்பாடு சீராகிவிட்டால், மாலை வேளைகளில் மட்டும் ஏற்படும் மூச்சிரைப்பும் குறைந்துவிடும். இட்லி மிளகாய்ப் பொடி பூண்டு, எண்ணெய் ஆகியவற்றைச் சாப்பிடுவதைவிட, காலையில் வெதுவெதுப்பாக புழுங்கல் அரிசிக் கஞ்சியுடன் நார்த்தாங்காய் வற்றலைக் கடித்துக் கொண்டு சாப்பிடுவது விரைவாகச் செரிக்க உதவும். உணவுச் சத்தும் முழுவதுமாகச் சேரும். வாயுவின் சீரான செயல்பாடு வளரும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணங்களை சரிசெய்து விரைவில் தீா்வு

தொழில்நுட்ப ஜவுளி இயக்க விழிப்புணா்வுக் கூட்டம்

வெண்ணைமலை கோயில் நில விவகாரம் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT