தினமணி கதிர்

நாகிரெட்டி நினைவுகள்: எம்.ஜி.ஆரின் முதலாளி

என் தந்தையாரும் எம்.ஜி.ஆரும் இணைந்து செய்த முடிவுப்படி 1987ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள்

வைரஜாதன்

25. விஜயாவில் ரஜினி - உழைப்பாளி

என் தந்தையாரும் எம்.ஜி.ஆரும் இணைந்து செய்த முடிவுப்படி 1987ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் விஜயா ஹெல்த் சென்டரின் வளர்ச்சியிலேயே தமது முழு கவனத்தையும் செலுத்தினார் என் தந்தையார்.

மருத்துவ உதவி பெற்ற நோயாளிகள், ஓய்வு இல்லத்தில் தங்கி உடல்நலம் பெறுகிறோம் என்று கருதும்  அளவுக்கு அனைத்து வசதிகளும் தருவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

நாளடைவில் இதய, அவசர சிகிச்சை, எலும்புமுறிவு, டயாலஸிஸ், நரம்பியல் போன்ற மருத்துவத் துறைகளை உள்ளடக்கிய விஜயா ஹெல்த் சென்டர் 350 படுக்கை வசதிகளுடன் தனது மருத்துவப் பணியைத் தொடர்ந்தது.

1991ஆம் ஆண்டின் இறுதியில் ஒருநாள், என் தந்தையார் வாகினி ஸ்டூடியோவில் தமது அறையிலிருந்து எங்களை  அழைத்தார். நானும் என் இளைய சகோதரர் வெங்கட்ராம ரெட்டி (பாப்ஜி)யும் அவரைச் சந்தித்தோம்.

அப்போது, தாம் ஸ்டூடியோ நிர்வாகத்திலிருந்து ஓய்வுபெற விரும்புவதாகவும், அதன் பொறுப்பை நாங்கள் ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

அவரது வேண்டுகோளை ஏற்று ஸ்டூடியோ, கலர்லேப் நிர்வாகத்துடன், நிதி நிர்வாகத்தையும் பாப்ஜி ஏற்று உதவிட, நான் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றேன். அதன்படி, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1992 -இல்  விஜயாவின் வாரிசாக கடந்த தலைமுறையையும் அடுத்த தலைமுறையையும் இணைத்து எங்களது சந்தமாமா}விஜயா கம்பைன்ஸ் நிறுவப்பட்டு, தயாரிப்பாளராக பி.வெங்கட்ராம ரெட்டி பொறுப்பேற்க, அதன் முதல் படமாக "பிருந்தாவனம்' தெலுங்குப் படம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.

விஜயாவில் வெற்றிப்பட இயக்குநர் கே.வி.ரெட்டியின் உதவியாளராகப் பணியாற்றிய சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் ராஜேந்திர பிரசாத், ரம்யாகிருஷ்ணன், அஞ்சலிதேவி, சத்தியநாராயணா, நாகேஷ், சுபலேக சுதாகர், கெüரவ வேடத்தில் கும்மடி ஆகியோர் நடித்தனர்.

1992 ஜூலை மாதம் 17ஆம் தேதி விஜயா கார்டன் டீலக்ஸ் தியேட்டரில் பாடல் பதிவுடன் தொடங்கப்பட்ட "பிருந்தாவனம்'  29.11.1992இல் ஆந்திரா முழுவதும் திரையிடப்பட்டது. விஜயாவின் படம் போலவே நல்ல நகைச்சுவையுடன் கருத்தாழமிக்க படமாக அமைந்த "பிருந்தாவனம்' ஆந்திராவில் நூறு நாட்கள் ஓடி, வெற்றியையும் சிறந்த தொழில்நுட்பத் திறனுக்கான விருதையும் பெற்றது.

"பிருந்தாவனம்' தயாரிப்பில் இருந்தபோது, வாகினியில் அண்ணாமலை படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். அப்போது அடுத்த படத்தைப் பற்றி அவர் கேட்க, ""நீங்கள் தேதிகள் தந்தால் மீண்டும் ஆஞ்சநேயர் கொடி தமிழ்த் திரையில் பறக்கும்'' என்று சொல்லிவிட்டு வந்தேன். எனது இந்த வேண்டுகோளுக்குப் பலன் விரைவிலேயே கிடைத்தது.

1992ஆம் ஆண்டு ஜூன் மாதம், நான் அமெரிக்காவில் ஆர்லண்டோ நகரில் நடைபெற்ற சர்வதேச ரோட்டரி சங்க மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்தேன். நான் அங்கிருந்தபோது ரஜினி சந்தமாமா - விஜயா கம்பைன்ஸ் பேனரில் நடிக்க விரும்புகிறார் என்ற இனிப்பான செய்தி என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்தே ரஜினி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தேன்.

ரஜினி நேரில் பேச அழைத்தபோது நானும், பாப்ஜியும் ஊரில் இல்லாத நிலையில் எங்கள் சார்பில் என் மகன் சரத் சென்று சந்தித்தார்.

நாங்கள் ஊரில் இருந்து வந்தவுடன் என் மூத்த சகோதரர் பி.வேணுகோபால் ரெட்டியுடன் சென்று ரஜினியைச் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

சந்தமாமா - விஜயா கம்பைன்ஸýக்கு தமிழில் ரஜினி பிள்ளையார் சுழியைப் போட "உழைப்பாளி' உருவானார். "உழைப்பாளி' படப்பிடிப்பு துவக்க நாளன்று படவுலகமே திரண்டு வந்திருந்து வாழ்த்தியது. விஜயா - வாகினி ஸ்டூடியோ பல ஆண்டுகளுக்குப் பின் விழாக்கோலம் பூண்டிருந்தது. "உழைப்பாளி' பட பூஜைக்கு என் தந்தையார் வந்திருந்து சிறப்பித்தார். 1993ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்கப்பட்டு பல எதிர்ப்பு, எதிர்பார்ப்புகளுக்கிடையே 24.6.1993இல் "உழைப்பாளி' வெளியானது.

எங்களுடன் இணைந்து அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று, குறிப்பிட்ட அறுபத்தாறு நாட்களுக்குள் "உழைப்பாளி'யை உருவாக்கித் தந்தார் இயக்குநர் பி.வாசு.

ரஜினியுடன்  ரோஜா, ராதாரவி, கவுண்டமணி, விசு, எஸ்.எஸ். சந்திரன், நிழல்கள் ரவி உட்பட பிரபல நட்சத்திரங்கள் பலர் நடித்து, உழைப்பவனே உயர்வான் என்பதை நிரூபித்தனர்.

என் தந்தையாரைப் பற்றி பல சுவையான நிகழ்ச்சிகளைப் பற்றி ரஜினி சொல்லக் கேட்போம்:

""1973ல் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேருவதற்கு எனக்கு மேக்அப் டெஸ்டும் ட்ரயலும் எடுக்கப்பட்டது வாகினி ஸ்டூடியோவில்தான். மறைந்த இயக்குநர் புட்டண்ணா கனகல் தான் எனக்கு அப்போது மேக்அப் டெஸ்ட் எடுத்தார்.

நான் இன்ஸ்டிட்யூட்டில் பயிற்சி முடித்து டிப்ளமோ வாங்கியபோது அந்த சர்டிபிகேட்டை நாகிரெட்டியார் அவர்களின் மூத்த சகோதரர் பி.என்.ரெட்டி அவர்களின் திருக்கரங்களினால் பெற்றேன் என்பதும் இன்னொரு சிறப்பு.

நான் முதன் முதலில் நாகிரெட்டியார் அவர்களைப் பார்த்தது வாஹினி ஸ்டூடியோவில்தான். அப்பொழுது நான் நடித்த "ஆறிலிருந்து அறுபதுவரை' படம் ரிலீசாகியிருந்த நேரம். அவர் வாஹினியில் மேஸ்திரி ஒருவரோடு போய்க் கொண்டிருந்தார். நான் அவரை நெருங்கி, வணக்கம் சொன்னேன். பேண்ட், சட்டையெல்லாம் போட்டு மேக்கப்புடன் இருந்ததால் அவருக்கு என்னை உடனே யாரென்று புரியவில்லை. அதனால் நானே, ரஜினிகாந்த் என்று அறிமுகம் செய்துகொண்டேன். "அடடே' என்று சொல்லி கட்டிப் பிடித்தார். அப்பொழுது அவருக்கு 60 அல்லது 65 வயது இருக்கலாம். ஆனால்  20 வயது பையன் கட்டிப்பிடித்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட சக்தி அவருக்கு இருப்பது தெரிந்தது.

"நீங்கள் நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை பார்த்தவுடன் எஸ்.வி. ரங்காராவ் நினைவுக்கு வந்தது. பார்க்க வேண்டிய படம்' என்றெல்லாம் பாராட்டிவிட்டு, "இது மாதிரி படம் நிறைய செய்யுங்கள்' என்றார். ஓர் இடத்தில் இருக்கும் தென்னை மரத்தை அப்படியே எடுத்து இன்னோர் இடத்தில் வைக்கும் மாயாபஜார் மாதிரிதான் அவரது ஒவ்வொரு செயலும். எப்பொழுது பார்த்தாலும் வேலை செய்துகொண்டே இருப்பார்.  எறும்பு மாதிரி என்று சொல்லலாம்.

ஒருசமயம் எனக்கு உடம்பு சரியில்லாமல் விஜயா ஆஸ்பத்திரியில் இருந்தேன். டாக்டர் செரியன் அவர்கள்தான் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ரெட்டியார் சொல்லியிருக்கிறார்: ""இவன் ரொம்ப நல்ல பையன். இவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. இவனை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள்'' என்று.

டாக்டர் இதை என்னிடம் கூறியபோது, நான் மிகவும் நெகிழ்ந்தேன். இவ்வளவு பெரிய மனிதர் என்னிடம் வைத்திருக்கும் அன்பை நினைத்து சந்தோஷப்பட்டேன்.

பிறகு நான் ஓய்வெடுக்க விஜயா ஆஸ்பிட்டல் சென்ற போதெல்லாம், ""உடம்புதான் கலைஞர்களுக்கு ரொம்ப முக்கியம். உடம்பை கவனமாகப் பார்த்துக்கங்க'' என்று சொல்வார்.

"உழைப்பாளி' படத்துக்கு கால்ஷீட் கொடுத்ததற்குக் காரணம் விஜயா வாஹினி என்னும் அந்தப் பெரிய பேனருக்காகத்தான். சினிமா உலகத்தில் அப்பொழுது பிரச்னைகள் அதிகமாக இருந்த நேரம். அந்த நேரத்தில் ரெட்டியார் சொன்னார்: ""நீங்க படம் எடுங்கள் என்று அவர் தந்த தைரியத்தால் பி.வேணுகோபால் ரெட்டி, பி.விஸ்வநாத ரெட்டி, பி.வெங்கட்ராம ரெட்டி, இயக்குநர் பி.வாசு ஆகியோருடன் எனக்கும் தெம்பு வந்தது.

"உழைப்பாளி' படத்தின் பூஜையன்று ராயல் கெஸ்சர் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே... அப்படிப்பட்ட ஒரு சிறப்பினை எனக்கு அளித்து என்னை நாகிரெட்டி அவர்கள் கெüரவப்படுத்தினார்.

அந்த "உழைப்பாளி' பூஜை நேரத்தில்தான் என்னிடம், ""கைநீட்டு'' என்று சொல்லி ரெட்டியார் 101 தங்கக் காசுகளைக் கொட்டினார். ஆண்டவன் அருளால் லட்சம், கோடியென்று பார்த்திருக்கிறேன். ஆனால் 101 சவரன்களை மொத்தமாகப் பார்த்ததில்லை எப்பொழுது ஷூட்டிங் முடியுமென்று வீட்டிற்கு வந்தேன். கதவைத் தாழிட்டுவிட்டு மனைவிக்கு முன்பு சோபாவில் கடகடவென்று காசுகளைக் கொட்டினேன். அவளுக்கு ஒரே பிரமிப்பு.

ரெட்டியார் கொடுத்த இந்த காசுகளைச் சொந்த செலவுகளுக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், அவரது கை மிகப் பெரிய ராசியான கை என்று சொல்லி, அப்படியே வைத்திருக்கிறேன்.

அந்த ஒருநாளில்தான் இந்த உலகத்தில் என்னை உண்மையான பணக்காரனாக நினைத்து சந்தோஷப்பட்டேன்.

மறுநாள் காலை ஏழுமணிக்கு நாகிரெட்டியார் தங்கியிருந்த இல்லத்திற்கு சென்றேன். அவரை வணங்கி ஒரு புத்தகத்தை கொடுத்தேன்.

நான் சிறு வயதில் படித்திருக்கிறேன், முகலாய ராஜாக்கள் இப்படி கொடையாளிகளாக இருந்திருக்கிறார்கள் என்று நெகிழ்ந்து கூறி அவரிடம், ""நான் உங்களை அப்பா என்று கூப்பிடலாமா?'' என்று கேட்டேன்.

""என்னைப் பொருத்தவரையில் நீங்களும் எனக்கு ஒரு மகன்தான்'' என்று மனமுவந்து ஆசி கூறி, என் உள்ளத்தை கொள்ளை கொண்டார் நாகிரெட்டியார் அவர்கள்.

எனக்கு ஒரே ஒரு குரு அவர் கே.பாலசந்தர். எனக்குக் கிடைத்த அப்பா நாகிரெட்டியார்.

என்னை நடிக்க வைத்து "வாத்தியாரய்யா' படம் பண்ணப் போவதாக அவர் தெரிவித்தார். ""நீங்கள் எப்பொழுது சொல்கிறீர்களோ, அப்பொழுது கால்ஷீட் கொடுக்கிறேன்'' என்று உடனே ஒப்புக் கொண்டேன்.

ரெட்டியாரின் உடம்புக்குத்தான் வயது ஆனதே தவிர, மனதுக்கு ஆகவில்லை. மாயாபஜார், பாதாள பைரவி மைண்ட் அப்படியே இருக்கிறது. இந்த "வாத்தியாரய்யா' படத்தை அவர் மிகப் பெரிய படமாகக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

நாகிரெட்டியார் அவர்கள் என் காதில் சில வார்த்தைகளை... சில விஷயங்களை  அப்போது சொல்லியிருக்கிறார். அவை எப்போதும் என் இதயத்தில் முழக்கமிட்டுக் கொண்டே இருக்கின்றன''.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT