தினமணி கதிர்

நாகிரெட்டி நினைவுகள்: எம்.ஜி.ஆரின் முதலாளி

ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டால், அந்தப்படம் முடியும்வரை அவருக்கு இரவு எது, பகல் எது என்பது தெரியாது. அந்தப் படம்... அந்தக் கேரக்டர்... இவைதான்

வைரஜாதன்

27. விஜயாவில் ரஜினி

ரஜினி ரசிக நெஞ்சங்களில் ராஜ ராகம் இசைத்துக் கொண்டிருக்கும் சிலிர்ப்புத் தென்றல்.

ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டால், அந்தப்படம் முடியும்வரை அவருக்கு இரவு எது, பகல் எது என்பது தெரியாது. அந்தப் படம்... அந்தக் கேரக்டர்... இவைதான் எப்போதும் அவரது நினைவில்...

"உழைப்பாளி'யில் நாங்கள் அனுபவ வாயிலாகக் கண்ட சிறப்பியல்பு இதுதான்.

ரஜினியின் "வள்ளி' படம் என் தந்தையாரால் தெலுங்கில் "விஜயா' என மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, நேரடி தெலுங்கு படம் மாதிரியே விளம்பரம் செய்திருந்தார்.

விஜயா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களின் விளம்பரம், ரசிகர்களின் திரை அரங்க வரவேற்பை கண்டறியும் பொறுப்பை என் தந்தையார் என்னிடம்தான் ஒப்படைப்பார். அதன்படி ஆந்திர மாநிலம் விஜயநகரத்திலிருந்து நெல்லூர் வரையில்  "விஜயா' திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளை நேரில் சென்று கண்டறிந்து வந்தேன்.

ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, ""ஹைதராபாத் முழுவதும் எங்கே திரும்பினாலும் "விஜயா'தான். ரெட்டியாருக்கு அந்தப் படத்தில் உள்ள ஈடுபாட்டைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது'' என்று பெருமையாகக் குறிப்பிட்டார்.

"உழைப்பாளி' படம் முடிந்து "வள்ளி' படத்தை தெலுங்கில் "விஜயா' என்ற பெயரில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டு வெற்றி பெற்ற பிறகு, ரஜினி நடிக்க "வாத்தியாரய்யா' படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்க வேண்டும் என விரும்பினார் என் தந்தையார்.

அதற்காக எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கே.ரவீந்தர் அவர்களிடம் அவுட்லைன் சொல்லப்பட்டு, திரைக்கதை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த திரைக்கதை அமைப்பை படித்துப் பார்த்தபோது, அந்தக் கதையும் அதன் தலைப்பும் எம்.ஜி.ஆருக்கே மிகவும் பொருந்துவதாக அமைந்திருந்தது.

வேறொரு நடிகர் அந்த வேடத்தில் நடித்து வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை உணர்ந்தார் என் தந்தையார்.

இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு சம்பவத்தையும் இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

அன்றொரு நாள், என் தந்தையாரைக் கண்டு ஆசிபெற விஜயா கார்டனுக்கு ஒரு பிரபல நடிகர் வந்திருந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான அவர், ""நான் இப்போது நடித்துவரும் இரண்டு படங்களின் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்குப் போகிறேன்'' என்றார்.

""படங்களின் பெயர் என்ன?'' என் தந்தையார் கேட்டார்.

படங்களின் பெயர்களை அதே பிரபல நடிகர் சொன்னதும், ""எம்.ஜி.ஆர். படங்களின் பெயர்களை நீங்கள் நடிக்கும் படங்களுக்கு வைத்திருக்கிறீர்களே... உங்களது படம், நடிப்பு சிறப்பாக இருந்தால்கூட, படத்தில் எம்.ஜி.ஆர். சாயல் கொஞ்சம் தெரிந்தாலும் எம்.ஜி.ஆர். இமேஜ் இந்த படங்களை பாதிக்கும். காரணம் அந்த அளவுக்கு மக்கள் மனதில் எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு வாழும். எதற்கும் யோசித்து செய்யுங்கள்'' என்றார்.

அந்த பிரபல நடிகர் நடித்த, அவர் குறிப்பிட்ட இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் ரெட்டியாரின் கணிப்பு சரியே என்று ஒப்புக் கொண்டார்.

என் தந்தையார் கருத்துப்படி, இன்று மட்டுமல்ல, நாளையும் எம்.ஜி.ஆர். படங்களுடன் அவர் நடித்த தலைப்புகள்கூட எவர்கிரீன்தான் என்பதில் சந்தேகமில்லை.

எம்.ஜி.ஆர்.நடித்த "எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை இன்றும் மக்கள் ரசிக்கிறார்கள். அதைப்போல தாம் தயாரிக்க ரஜினி நடிக்கும் படத்தை மக்கள் என்றும் ரசிக்க வேண்டும் என்ற என் தந்தையார் ரஜினியின் இமேஜுக்குத் தகுந்த மாதிரி வேறொரு கதையை, அவருக்கேற்ற கேரக்டரை வைத்து உருவாக்கி "எங்க வீட்டுப் பிள்ளை' மாதிரி ஒரு பிரம்மாண்டமான படத்தை எடுக்க விரும்பினார்.

அப்போது ரஜினியைப் பற்றி என் தந்தையார் சொன்ன கருத்துக்கள்:

""ரஜினியின் உள் மனதை அவர் இதுவரையில் முழுமையாகக் காட்டவில்லை என்றே கருதுகிறேன்.

அதாவது வீட்டிற்கு வெளியே இப்போது நம்மிடையே உலாவரும் ரஜினி வேறு... வீட்டிற்கு உள்ளே ஓம் பிரவாகத்தில் இருக்கும் ரஜினி வேறு...

அவர் சூப்பர் ஸ்டார் ஆகத் திகழ்ந்தாலும் ரஜினியின் உள் மனதை... ஓரளவுதான் அவர் "வள்ளி' படத்தில் உணர்த்தியிருக்கிறார்.

"வள்ளி' படத்தைத் தயாரித்தபின், நான் பார்த்து கருத்து சொல்லவேண்டும் என்று ரஜினி விரும்பினார்.

உடல் நலம் கருதி முதலில் தயங்கினேன். அவரது அழைப்பை ஏற்று, கொஞ்ச நேரமாவது படத்தைப் பார்த்து வரலாம் என்று போனேன்.

ஆனால், "வள்ளி' படத்தை முடியும் வரையில் இருந்து பார்த்துவிட்டு வந்தேன்

காரணம் "வள்ளி'யில் ரஜினியின் உள்மனதைக் கண்டேன்.

எவ்வளவு ஆழமான... கருத்தான வசனங்கள்,வள்ளியில் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வசனமும் கேட்க... கேட்க, என் கண்களில் நீர் முட்டியது, எனக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது.

"வள்ளி' படத்தை என்னுடன் பார்த்த என் குடும்பத்துப் பெண்களைப் பார்த்தேன். வெளியே வரும்போது அவர்களது கண்களிலும் நீர்... அவர்களில் ஒரு பெண் மறுபடியும் படத்தைப் பார்க்கத் துடித்தாள்.

அன்று இரவே என் மகன் விஸ்வம் மூலமாக ரஜினிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். பின்னர் நானும் தொலைபேசியில் வாழ்த்துக்களைச் சொன்னேன்.

"வள்ளி' படத்தை தெலுங்கில் படமாக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்குக் காரணம் இந்தப் படத்தின் கதை மட்டுமல்ல; அதன் கருத்தும் அது வலியுறுத்தும் உண்மையும்தான். படம் முழுவதும் ரஜினி இந்த உண்மையை விட்டு விலகவில்லை.

கடலில் எழும் அலைகள் மீண்டும் கடலிலேயே சேருகின்றன... அதேபோல் இயற்கையில் இருந்து உருவாகிய மனிதன் அந்த சக்தியுடனேயே ஐக்கியமாகிவிடுகிறான்...

 படத்தின் கடைசியில் வரும் இந்த வசனம் பகவத் கீதையை இரண்டு வரிகளில் உணர்த்துகின்றது.

 இவையெல்லாம் ரஜினி ஒரு சாதாரண நடிகன் அல்ல... விஷயம் தெரிந்த பெரிய மனிதர் என்ற உண்மையை உணர வைத்தது.

ஒருநாள் காலையில் ஒரு திருமணத்திற்குச் சென்றேன்... அப்போது என் மனதில் ரஜினியைப் போய் நேரில் பார்த்துவிட்டு வாழ்த்தி வரலாம் என்ற எண்ணம் எழுந்தது.

பொதுவாகவே முன்அறிவிப்பு இல்லாமல் நான் யாரையும் பார்ப்பதில்லை. ஆனால் என்னவோ, ரஜினி விஷயத்தில் என்னையும் அறியாமல் காலையில் ரஜினி வீட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றியது.

நான் போகும்போது நினைத்தேன், அவர் இரவு 10 மணிக்கு உறங்கப் போய் காலை ஆறு மணிக்கு விழித்திருப்பார் என்று.

ஆனால் அங்கே போனபிறகு, அவர் இரவு மூன்று மணிக்குத்தான் படுக்கப் போனதாகத் தகவல் கிடைத்தது.

அங்கிருந்த பணிப்பெண்ணிடம், ""அவர் தூங்கட்டும்... டிஸ்டர்ப் பண்ணாதீர்கள்... அப்புறம் வந்து பார்க்கிறேன்'' என்று சொல்லி புறப்பட ஆயத்தமானேன்.

அதற்குள் அவரது உதவியாளர் வந்து, ""நான் உடனே மேடத்தை அழைத்து வருகிறேன்  நீங்கள் அவசியம் பார்த்துவிட்டுதான் போகவேண்டும்'' என்றார்.

"என்னடா... இப்படி தொந்தரவு செய்துவிட்டோமே' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே திருமதி லதா ரஜினி வந்துவிட்டார்... அவர் போய் ரஜினியை அழைத்து வந்துவிட்டார்.

தம்பதி சமேதராக என்னிடம் ஆசி கோரி வணங்கினார்கள்.

அப்போது ரஜினியிடம் நான் ஒரு கவரைக் கொடுத்தேன்... "வள்ளி' படம் எந்த அளவுக்கு என்னைக் கவர்ந்தது என்பதையும் சொன்னேன்.

இதற்குப்பின், ரஜினி வெளிநாடு போவதற்கு முன் ஒருநாள் என் வீட்டிற்கு வந்தார், என் மனைவி, குழந்தைகளை அழைத்துவந்து உங்களிடம் ஆசீர்வாதம் வாங்கலாம் என்று இருந்தேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று விஸ்வம் சொன்னார். அதனால் நான் மட்டும் உங்களைப் பார்க்க வந்தேன். இன்னொருமுறை குடும்பத்துடன் வந்து அம்மாவைப் பார்க்கிறேன் என்று சொன்னவர், நான் அவரிடம் கொடுத்திருந்த கவரையும் என்னிடமே திருப்பித் தந்துவிட்டார்.

"வள்ளி' படத்தைத் தெலுங்கில் "விஜயா' என்ற பெயரில் டப் செய்தேன். "விஜயா'வைப் பார்க்க ரஜினியை அழைத்தேன்... வந்தார்... பார்த்தார்...

""தமிழைவிட தெலுங்கில் படம் விறுவிறுப்பாக இருக்கிறதே... எப்படி?''  என்று கேட்டார்.

""உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும் தெலுங்கில் மொழிபெயர்க்கும்போது வசனகர்த்தாவின் அருகிலேயே இருந்தேன். ஒவ்வொரு பாடலையும் எனக்கு திருப்தி ஏற்பட்ட பின்னரே ஒலிப்பதிவு செய்யச் சொன்னேன்.

பாடகி சித்ரா ஒரு பாடலைப் பாட ரிகார்ட் ஆகிவிட்டது.

அடுத்தநாள், காலையில் சித்ரா என்னிடம் வந்து முதல் நாள் பாடிய அதே பாடலைப் பாட அனுமதி கேட்டார்.

""ஏம்மா... நீங்க நேத்துப் பாடினதே நல்லா இருக்கே'' என்று சொன்னேன்.

""இல்லே... அதுலே ஒரு வார்த்தை சரியா விழலேன்னு ஃபீல் பண்றேன். அதனால் திரும்பவும் இப்பப் பாடறேன். அதுக்கு நீங்க எனக்குப் பணம் தரவேண்டாம். பாட உங்க பர்மிஷன்தான் வேணும்'' என்றார்.

""சரி... உங்க இஷ்டம்'' என்றேன்.

மீண்டும் திருப்தி ஏற்படும்வரையில் அந்தப் பாடலைப் பாடிவிட்டுப் போனார் சித்ரா.

இதே மாதிரியான நிறைவு... இன்வால்வ்மென்ட்... சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் இருந்தால் படம் நன்றாக வரும், நிச்சயம் வெற்றிபெறும்'' என்றேன்.

படத்தை பார்த்துவிட்டு அகமும் முகமும் மலர புறப்பட்டுச் சென்றார் ரஜினி.

"விஜயா' ஆந்திராவில் பெறும் வெற்றி பெற்றது. எனக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்தன.

ஒரு ரசிகர் எழுதி இருந்தார்:

"சார்... நீங்கள் தமிழ்ப்படத்தை ஏன் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்த பிறகுதான் நீங்கள் ஏன் தெலுங்கில் வெளியிட்டீர்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்' என்று.

ஒருநாள் என்னைப் பார்க்க வந்திருந்தார் ரஜினி... பேச்சுவாக்கில் "வாத்தியாரய்யா' என்ற கதைக் கருவை எம்.ஜி.ஆருக்காக உருவாக்கி வைத்திருந்ததையும் அதற்குள் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதல்வர் ஆனதையும் குறிப்பிட்டேன்.

அப்போது ரஜினி, ""வாத்தியாரய்யா படத்தை கட்டாயம் எடுக்கலாம். டைட்டில் ரொம்ப நன்றாக இருக்கிறது... உடனே ரிஜிஸ்டர் செய்துவிடுங்கள்... உங்க பேனரில் நான் ஒரு படம் பண்ணணும்'' என்று சொன்னார். அவரது விருப்பப்படியே "வாத்தியாரய்யா' டைட்டிலை ரிஜிஸ்டர் செய்துவிட்டேன்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை விஜயா பேனரில் தயாரித்திருக்கிறேன். அவற்றில் எந்தப் படமும் தோல்வி அடைந்ததில்லை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், ராஜ்குமார், பிரேம் நசீர், திலீப்குமார் போன்ற பிரபல நட்சத்திரங்கள் விஜயா பேனரில் நடித்திருக்கிறார்கள்.

ரஜினி, நல்ல நடிகர் மட்டுமல்ல காட்சியில், கருத்தில் தவறு என்று தெரிந்தாலும் தன்னுடைய எண்ணங்களை தாம் நடிக்கும் மற்ற படங்களில் திணிக்க மாட்டார்.

அவர் நல்ல பண்பாளர். நான் இப்படிச் சொன்னால் அவரைப் புகழ்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் என் மனதில் பட்டதை சொல்லித்தான் ஆகவேண்டும்.

ரஜினி உலகத்தை... குறிப்பாக பண்பாட்டை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்.

இப்போது நாம் மேலைநாட்டு நாகரிக மோகத்திற்கும் நம்முடைய பண்பாட்டிற்கும் இடையில் இருட்டுக்கும் பகலுக்கும் இடையில் அகப்பட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தத் திண்டாட்டத்திலிருந்து நமது பண்பாட்டை ஓரளவாவது மீட்டு இன்றைய தலைமுறையினருக்கு நமது கலாச்சார பெருமையை, சிறப்பை அவரால் உணர்த்த முடியும் என்று நம்புகிறேன்.

அவர் உயர்ந்த குணங்களைக் கடைப்பிடிப்பவர். அவருக்குள்ள இமேஜ் பெரியது. ரஜினியை புரஜெக்ட் பண்ணி படம் எடுப்பதில் உள்ள நிஜமான சிரமம் எனக்குப் புரிகிறது.

அதனால்தான் ரஜினி நடிக்க, படம் எடுக்க வேண்டுமானால் அதிக கவனம் தேவை என்கிறேன்.

ரஜினி, நான் ஏற்கெனவே சொன்னமாதிரி சாதாரண மனிதரல்ல. இந்த நாடு எப்படி இருக்க வேண்டும் மக்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை அவர் கணித்து வைத்திருப்பார்.

அந்தக் கருத்து, படத்தில் இடம்பெறும்போதுதான் உண்மையான ரஜினியை... நமது பாரம்பரிய கலாசாரத்தை வலியுறுத்தும் ரஜினியைப் பார்க்க முடியும்.

சாதனையாளர் ரஜினி தமக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லலாம். ஆனால் விதி அவர்மூலம் என்ன செய்ய நினைக்கிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது''

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செயலியில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி: இழப்பீடு வழங்க உணவகத்துக்கு உத்தரவு

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

கொள்ளிடம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் விவசாயிகள் நூதனப் போராட்டம்

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை: ரிசா்வ் வங்கி

காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் பேருந்துகளை உடனே விடுவிக்க வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

SCROLL FOR NEXT