தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 170

எதிர்பார்த்தது போலவே, விஞ்ஞான் பவன் வழக்கத்தைவிட பரபரப்பாக இருந்தது.


எதிர்பார்த்தது போலவே, விஞ்ஞான் பவன் வழக்கத்தைவிட பரபரப்பாக இருந்தது. ஜெயலலிதா சாட்சி சொல்ல வந்தபோது வழக்குரைஞர்கள் பட்டாளமே வந்திருந்தது. அதேபோல, பத்திரிகை நிருபர்களின் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருந்தது. ப.சிதம்பரத்தின் சாட்சியத்தின்போது கட்சி எம்.பி.க்களேகூட அதிகம் காணப்படவில்லை.
முதல்வர் கருணாநிதி சாட்சி சொல்ல இருக்கிறார் என்பதால், சென்னையிலிருந்துகூட சில முக்கியமான திமுகவினர் தில்லி வந்திருந்தனர். அமைச்சர்கள் வரவில்லை. ஆனால் அதிக அளவில் எம்.பி.க்கள் வந்திருந்தனர். அவர்களில் கோவை மு. ராமநாதனும் இருந்தார். எனக்கு நல்ல நண்பர் என்பதால் அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
திமுக எம்.பி.க்களில் திருச்செங்கோடு மக்களவை உறுப்பினர் கே.பி. ராமலிங்கமும் இருந்ததாக நினைவு. அப்போது அவருடன் எனக்கு நெருக்கம் கிடையாது என்பதால், சந்திக்கவில்லை. விசாரணை நடந்தபோது கோவை ராமநாதனும் அவரும் அருகருகில் அமர்ந்திருந்தார்கள் என்றுகூட நினைக்கிறேன். ஜெயலலிதாவுக்கு வந்த அளவில் பத்திரிகை நிருபர்கள், குறிப்பாக வடநாட்டுப் பத்திரிகை நிருபர்கள் வந்திருக்கவில்லை என்பதைப் பார்க்க முடிந்தது.
விசாரணையில் ஒரு சிக்கல் இருந்தது. முதல்வர் கருணாநிதியிடம் கேட்கப்படும் கேள்விகளையும், அவர் அளிக்கும் பதில்களையும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழியாக்க வேண்டிய தர்ம சங்கடம் ஏற்பட்டது. ஜெயலலிதா, சிதம்பரம் இருவருமே சரளமாக ஆங்கிலத்தில் உரையாடக் கூடியவர்கள் என்பதால் அந்தப் பிரச்னை எழவில்லை.
முதல்வர் கருணாநிதி தமிழில் சாட்சியம் கூறத் தொடங்கியதும் நீதிபதி மிலாப் சந்த் ஜெயின் (எம்.சி. ஜெயின்) பதறிவிட்டார். இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்று அவருக்கு புரியவில்லை.
'நீங்கள் ஆங்கிலத்தில் பேசக்கூடாதா?' என்கிற நீதிபதி ஜெயினின் கேள்விக்கு, சிரித்தபடி 'நோ, நான் தமிழில்தான் சரளமாகப் பேச முடியும்' என்று தெரிவித்துவிட்டார் முதல்வர் கருணாநிதி.
ஜெயின் கமிஷன் விசாரணை வழக்கில், அதிமுக சார்பில் ஆஜரான வழக்குரைஞர் இப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் கே.வி. விசுவநாதன். மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன், கே.கே. வேணுகோபால் ஆகியோரிடம் உதவி வழக்குரைஞராக இருந்தவர். தனது சார்பில் ஜெயின் கமிஷனில் ஆஜராக அவரைத் தேர்ந்தெடுத்திருந்தார் ஜெயலலிதா.
'நீங்கள் மொழிபெயர்ந்து உதவ முடியுமா?' என்று அவரிடம் வினவினார் நீதிபதி ஜெயின்.
ஒரு நிமிடம் வழக்குரைஞராக இருந்த விசுவநாதன் பதறிவிட்டார். அதிமுக சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் ஒருவர், திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் வாக்குமூலத்தையும், சாட்சியத்தையும் மொழிபெயர்த்துச் சொல்வது எப்படி என்பது அவருக்கு எழுந்த தயக்கம். அந்தத் தயக்கத்தை அகற்றியவர் யார் தெரியுமா? முதல்வர் கருணாநிதி!

'அவர் எனது சார்பில் மொழிபெயர்ப்பதிலும் எனக்கு மொழிபெயர்ப்பாளராக இருப்பதிலும் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தபோது விஞ்ஞான் பவன் அனெக்ஸ் வளாகத்தில் எழுந்த ஆச்சரிய அலையை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
சிரித்தபடியே வழக்குரைஞராக இருந்த விசுவநாதன் எதிர்தரப்பு சாட்சிக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்து உதவினார் என்பதை இங்கே பதிவு செய்தாக வேண்டும். இப்போது அவர் உச்சநீதிமன்ற நீதிபதி மட்டுமல்ல, வருங்காலத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதியாகும் வரிசையில் இருப்பவரும்கூட...
முதல்வர் கருணாநிதியின் சாட்சியத்தில் அவர் தெரிவித்த முக்கியமான கருத்துகள் மூன்று. 'நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்ல...'. 'உள்துறை செயலராக இருந்த நாகராஜன், ஜெயலலிதாவின் தூண்டுதலால்தான் என்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்'. 'ஜெயின் கமிஷன் திமுக ஆட்சிக் காலத்தை மட்டுமே விசாரிக்கக் கூடாது' என்பவைதான் அவர் முன்வைத்த மூன்று கருத்துகள்.
'நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்பதை முற்றிலுமாக மறுக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் விடுதலைப் புலிகள் என்னை எதிரியாகத்தான் கருதினார்கள். அவர்களை நான் ஆரம்பத்தில் இருந்தே விமர்சித்தும் வந்திருக்கிறேன்.
'தனி ஈழம் என்பது சர்வாதிகார நாடாகத்தான் இருக்கும்' என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1986-இல் கூறினார். அப்போதே அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். அது எல்லா பத்திரிகைகளிலும் வெளியாகி இருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டும் என்பதிலும், சிங்கள வெறியர்களால் நடத்தப்படும் இன அழிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதிலும் நான் தெளிவாக இருந்தேன், இருக்கிறேன். அதற்காகத் தமிழ்ப் போராளிக் குழுக்களை, விடுதலைப் புலிகள் உள்பட, நான் ஒரு கட்டத்தில் ஆதரித்துப் பேசியது உண்மை. பிறகு விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளைப் பார்த்து நான் அந்த ஆதரவை விலக்கிக் கொண்டேன்.
28.9.1993-இல் மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. 'விடுதலைப் புலிகளால் திமுக தலைவர் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக' தெரிவித்திருந்தது. அதில் எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது. அதனடிப்படையில்தான் தமிழக அரசு எனக்கு சிறப்புப் பாதுகாப்பு அளிப்பதாக 4.10.1993-இல் கடிதம் எழுதியது. அந்த சிறப்புப் பாதுகாப்பை நான் ஏற்றுக் கொண்டதில் இருந்தே, ஒரு காலத்தில் புலிகளுக்கு நான் வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டேன் என்பது தெளிவாகிறது.
முதல்வர் கருணாநிதியின் இந்த சாட்சியம் குறித்துச் சில குறுக்குக் கேள்விகள் மதிமுக சார்பில் எழுப்பப்பட்டன.

அடுத்தபடியாக, 'முன்னாள் உள்துறை செயலர் நாகராஜன், பத்மநாபா கொலை வழக்கில் நான் தலையிட்டதாகக் கூறியிருப்பது அனைத்தும் அப்பட்டமான பொய்' என்று மறுத்தார் முதல்வர் கருணாநிதி. அது குறித்து அவர் முன்வைத்த வாதங்கள் முக்கியமானவை:
'சம்பவம் நடந்த அன்று நான் தில்லியில் இருந்தேன். பத்மநாபா கொலை குறித்த தகவல் கேள்விப்பட்டதும், இது விடுதலைப் புலிகள் வேலையாகத்தான் இருக்கும். உடனடியாக நடவடிக்கை எடுங்கள்' என்று உள்துறை செயலர் நாகராஜனுக்கு உத்தரவிட்டேன்.
'நாகராஜன் ஜெயலலிதாவின் தூண்டுலால்தான் தன் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டுகிறார்' என்கிற கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு அவர் சில காரணங்களைத் தெரிவித்தார்.
'தடா கைதியாக இருந்த நாகராஜன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மட்டுமல்ல, வழக்கத்துக்கு மாறாக மருத்துவமனையில் பத்திரிகையாளர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஒப்புதல் இல்லாமல் அது எப்படி நடந்திருக்க முடியும்?'
10.11.1991 அன்று நாகராஜன் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளிக்கிறார். போலீஸாரால் அது கசியவிடப்பட்டு மாலைப் பத்திரிகைகளிலேயே வருகிறது. அதே நாளன்று அவர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், 'நான் எனது கடமையை முடித்து விட்டேன். என் மீதிருந்த பெரிய பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன். உங்களுடைய அடுத்த உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன்' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
'ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் ஜோடிக்கப்பட்ட அப்பட்டமான பொய், நாகராஜனால் என் மீது சுமத்தப்பட்ட பழி!'
தனது தலைமையில் அமைந்த 1989 - 90 காலத்தில் நடந்த நிகழ்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ராஜீவ் காந்தி கொலையை அணுகக் கூடாது என்றும், 1982 முதல் என்ன நடந்தன என்பனவற்றையும் இணைத்துத்தான் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் வற்புறுத்தினார் முதல்வர் கருணாநிதி. அதற்கு அவர் சில காரணங்களையும் முன்வைத்தார்.
'எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ரூ.40 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் போராளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆயுதங்கள் அவர்களுக்கு எப்படி வந்தன, அதன் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான பின்னணி அங்கே தொடங்குகிறது.'
'எனக்கும் ராஜீவ் காந்திக்கும் சுமுகமான உறவு நிலவியது. 1989-இல் நான் முதல்வரானதும் மரியாதை நிமித்தம் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை சந்திக்க தில்லி சென்றேன். இரு தினங்கள் என்னை தில்லியில் இருக்கச் செய்து வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உள்ளிட்டவர்களுடன் பேசச் செய்தார். திமுகவுடன் கூட்டணி இல்லாத நிலையிலும், இலங்கைப் பிரச்னையில் தீர்வு காண்பதில் திமுக அரசும், கருணாநிதியும் அளித்த ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்து 5.11.1989 அன்று திருச்சியில் ராஜீவ் காந்தி பேசி இருக்கிறார்.'
'திமுக ஆட்சியில் போராளிகள் அறவே இருக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆங்காங்கே ஓரிருவர் இருந்திருக்கலாம். ஆனால், போராளிகள் குழுக்களாகச் செயல்படவில்லை. பயிற்சி முகாம்கள் இருக்கவில்லை. 1990-இல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 50 போராளிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களும், தங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.'
நீதிபதி எம்.சி. ஜெயின் இடையிடையே சில சந்தேகங்களை எழுப்பி குறித்துக் கொண்டார். முதல்வர் கருணாநிதியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைப் பார்த்து, அவருடன் வந்திருந்த எம்.பி.க்களும் கட்சிக்காரர்களும் வருத்தமடைந்தனர். வேண்டுமென்றே அவரை சிக்க வைப்பதற்காகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்று அவர்கள் கருதினார்கள். ஆனால், முதல்வர் கருணாநிதி பதற்றமே இல்லாமல் தனது வழக்கமான புன்முறுவலுடன் சாட்சியம் அளித்ததற்கு நான் நேரடி சாட்சியாக இருந்தேன்.
விஞ்ஞான் பவனில் முதல்வர் கருணாநிதியின் சாட்சியம் முடிந்த பிறகு, வெளியே வந்தேன். எல்லோரும் அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்று கொண்டிருந்தனர். நான் இடதுபுறம் திரும்பிப் பொடிநடையாக மெளலானா ஆசாத் சாலையில் நடந்து, பின்புற வாசல் வழியாக 24, அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்தின் கேன்டீனில் காபி குடிக்கலாம் என்று நுழைந்தேன்.
செய்தித் தொடர்பாளர் வி.என். காட்கிலின் அறையில் காங்கிரஸில் இணைந்துவிட்டிருந்த வாழப்பாடி ராமமூர்த்தி அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் நிமிர்ந்து உட்கார்ந்து, 'விஞ்ஞான் பவனில் இருந்துதானே வருகிறீர்கள்?' என்று கேட்டார். 'ஆமாம்' என்று தலையாட்டியதும், அடுத்த கேள்வியைத் தொடுத்தார்.
'எனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். என்றெல்லாம் சொல்லி கலைஞர் குழப்பி இருப்பார், அப்படித்தானே? இங்கே இவர் எனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று சாட்சி சொல்கிறார்; மதுரையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்...' என்றபடி டெலிபிரிண்டரில் வந்த செய்தியை எடுத்து நீட்டினார்.
'நவம்பர் 6-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிக்குள், கடந்த இரண்டு வாரங்களில், புலிகளின் ஆதரவாளர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து முறைகேடான பல ஆவணங்கள், இரண்டு சயனைடு குப்பிகள், புலிகளின் செயல்பாடுகளையும், பயிற்சிகளையும் விளக்கும் விடியோ கேசட்டுகள், 23 தங்கக் கட்டிகள், கைத்துப்பாக்கி, வாக்கிடாக்கிகள் உள்ளிட்ட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன' என்கிற மத்திய உளவுத் துறையின் அறிக்கை அது!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT