கண்டது
(நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் அருகேயுள்ள கிராமத்தின் பெயர்)
'குற்றம்பொறுத்தான் இருப்பு''
-ச.சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
(சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகேயுள்ள ஒரு ஸ்வீட் கடையின் பெயர்)
'ஆரம்பம்''
-சம்பத்குமாரி, பொன்மலை.
(திருவள்ளூரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
'இரண்டு இட்லி ஒரு வடை''
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
கேட்டது
(கோவை ஓட்டல் ஒன்றில் சர்வரும், சாப்பிட வந்தவரும்...)
'கல்தோசை குடுத்திருக்கீங்க? சாப்பிடுறதுக்கு சாப்ட்டா இருக்கே..?''
'கல்லுக்கு மேல ஊத்துற தோசை இப்படி சாப்ட்டாதான் இருக்கும் சார்...''
-மணியட்டிமூர்த்தி, கோவை.
(கோவையில் உள்ள மருத்துவமனையில் இருவர்)
'உங்களுக்கு எல்லா டெஸ்டும் எடுக்கச் சொல்லி டாக்டர் எழுதிக் கொடுத்ததற்கு ஏன் வருத்தமா இருக்கீங்க?''
'நான் டாக்டருக்கு கல்யாண பத்திரிகைதான் கொடுக்கலாமுன்னு போனேன்... அதற்குள் என்னை பேசவிடாம...?''
-எம்.பி.தினேஷ், கோவை-25.
(விழுப்புரத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் தாயும், மகனும்...)
'அம்மா.. இன்னைக்கு ஸ்கூலில்
எங்க டீச்சர்.. உங்க அம்மா நல்லவங்களா?, உங்க அப்பா நல்லவங்களான்னு கேட்டாங்கம்மா..?''
'நீ என்னடா சொன்னே..?''
'நான் அப்பா மாதிரியே பேசாமல் இருந்துட்டேன்மா...?''
-இந்து குமரப்பன், விழுப்புரம்.
யோசிக்கிறாங்கப்பா!
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன பஞ்ச பூதங்கள்.
ஆறாவது பூதம் மனிதன்.
-ஏ.நாகராஜன், சென்னை-75.
மைக்ரோ கதை
தொழிலதிபர் முருகேசன் தன்னுடன் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் நண்பர்களைச் சந்திக்க ஆசைப்பட்டு "முன்னாள் மாணவர்கள் சந்திப்பு' கூட்டங்களை நடத்தினான்.
வர மறுத்த பெண்களின் குடும்பத்தினருக்கு பலமுறை செல்போனில் பேசி, எல்லோரையும் வரவழைத்து சிறப்பாக நடத்தி முடித்தான். தான் படித்த கல்வி நிலையங்களுக்கு பெருமளவு உதவிகளையும் செய்தான். ஓரிரு மாதங்கள் கழிந்தன.
அவனுடைய மனைவி கங்கா தயங்கியபடியே, 'என்னங்க.. என்னோட கல்லூரியில் படிச்சவங்க முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தை வர்ற ஞாயிற்றுக்கிழமை நடத்தறாங்களாம். வாட்ஸ் ஆஃப் குரூப்பில் மெசேஜ் போடறாங்க.. போய்வரவா...?'' என்றாள்.
கேட்டதுதான் தாமதம். உடனே முருகேன், 'முதலில் வாட்ஸ் ஆஃப் குரூப்பைவிட்டு வெளியே வா.. வீட்டிலேயே அடைந்து கிட..?'' என்று சத்தம் போட்டுவிட்டு, காரில் ஏறி தனது நிறுவனத்துக்குப் புறப்பட்டு சென்றான்.
-தி.நந்தகுமார், குடியாத்தம்.
எஸ்.எம்.எஸ்.
வீடு உயர்ந்திருப்பது பார்ப்பதற்கு நல்லது.
உள்ளம் உயர்ந்திருப்பது வாழ்க்கைக்கு நல்லது.
-ஜி.அர்ச்சுனன், செங்கல்பட்டு.
அப்படீங்களா!
ஆண்ட்ராய்டு பயன்பாடு அறிதிறன் பேசிக்கு "கூகுள் பிளே ஸ்டோர்' மூளைபோல் இயங்குகிறது. அதுவே செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும் முக்கிய பங்காற்றுகிறது. பழைய அறிதிறன்பேசிக்கு பிளே ஸ்டோர் அப்டேட் நிறுத்தப்பட்டால், அது நன்றாக இயங்கினாலும் இணையவழி பயன்பாட்டுக்கு பயனற்றதாகி விடுகிறது.
அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிளே ஸ்டோரில் ஒருமுறை பதிவிறக்கத்தைத் தேர்வு செய்தால் ஒரே செயலியை மட்டும் பதிவிறக்கம் செய்ய முடியும். அன்றாட பயன்பாட்டுக்கு பல்வேறு செயலிகள் உள்ள பிளே ஸ்டோரில், செயலியை பதிவிறக்கம் செய்யவும், அப்டேட் செய்யவும் வேண்டுமென்றால் நீண்ட நேரமாகும்.
இந்தத் தாமதத்தைப் போக்க கூகுள் நிறுவனம் ஒரே நேரத்தில் 3 புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யவும், அறிதிறன் பேசியில் உள்ள 3 செயலிகளை அப்டேட் செய்யவும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் செயலிகள், கேம்களை விரைந்து பதிவிறக்கம் செய்ய முடியும். இதற்காக பிளே ஸ்டோர் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு செயலிகளை ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்ய சிலருக்கு மட்டும் கூகுள் அனுமதித்தது. புதிய செயலிகளுக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டது. அப்டேட்களுக்கு இந்த சேவை வழங்கப்படவில்லை.
தற்போது புதிய செயலிகளுக்கும், அப்டேட் செய்வதற்கும் வழங்கப்பட்டுள்ளது. இது பிளே ஸ்டோர் பயன்பாட்டாளர்களுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.