தாய்மையின் சிறப்பான பிரசவம், பெண்ணுக்கு இரண்டாவது பிறவி. சுகப் பிரசவம், அறுவைச் சிகிச்சை முறை பிரசவம் என்று இரு வகை பிரசவங்கள் இருந்தாலும், சுகப் பிரசவத்தையே பெண்கள் விரும்புகின்றனர்.
சுகப் பிரசவத்தில் வலி இருந்தாலும், தற்காலிகமானதுதான். அதுவும்கூட இல்லாமல் பிரசவமாக வேண்டும் என்று விரும்பும் பெண்கள் மனம் மகிழும் வகையில், தற்போது 'தண்ணீரில் பிரசவம்' என்ற புதிய முறை அறிமுகமாகி இருக்கிறது.
திருவனந்தபுரத்துக்கு அருகே பாறசாலையில் உள்ள சரஸ்வதி மருத்துவமனையில், கேரளத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ரூபினா என்பவர், பெண் குழந்தையைத் தண்ணீரில் அண்மையில் பெற்றெடுத்தார். இவருக்கு பிரசவம் பார்த்தவர் மருத்துவர் பிரியதர்ஷினி. இவர் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர் பொன்னீலனின் பேத்தி. பொன்னீலனின் மூத்த மகளும், சித்த மருத்துவருமான அழகுநிலா-ஜெயராம் தம்பதியின் மூத்த மகள்.
சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த பிரியதர்ஷினி, தமிழ்நாட்டில் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்களைப் பார்த்தவர்.
அவரிடம் பேசியபோது:
'பிரசவ வலியைப் பெருமளவுக்கு குறைக்கும் தண்ணீர் பிரசவங்கள் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரபலம் அடைந்து வருகின்றன. கொச்சி, ஹைதராபாத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் தண்ணீருக்குள் பிரசவம் நடைபெறுகிறது.
தண்ணீர் பிரசவம் குறித்து ஆன்லைனில் வெளிநாட்டு நிறுவனம் நடத்தும் பயிற்சியில் சேர்ந்து படித்தேன். அத்துடன் ஹைதராபாத்தில் இயங்கி வரும் இயற்கை முறை பிரசவ மையத்துக்குச் சென்று, அங்கு நடைபெற்ற தண்ணீர் பிரசவத்தையும் நேரில் பார்த்து அனுபவம் பெற்றேன்.
பிரசவம் குறித்த எதிர்மறை எண்ணங்களை பெண்களுக்கு மாற்றி, மன அழுத்தம் இன்றி இயல்பாகப் பிரசவம் நடைபெறச் செய்வது மகப்பேறு மருத்துவர்களின் பிரதான கடமையாக உள்ளது. அதற்கு தண்ணீர் பிரசவம் பேருதவியாக இருக்கும்.
பிரசவ நேரத்தில் தண்ணீரில் இருக்கும் கர்ப்பிணியின் மனமும் உடலும் அந்த நீரின் வெதுவெதுப்பில் அமைதியாகிவிடும். சுகப் பிரசவத்தின்போது பெண் அனுபவிக்கும் வலியுடன் ஒப்பிடுகையில், தண்ணீர் பிரசவத்தில் வலி மிகவும் குறைவாக இருக்கும்.
இந்த நிலையில்தான் கேரளத்தைச் சேர்ந்த ரூபினா - ஃபாஸில் தம்பதி என்னை அணுகி, தண்ணீர் பிரசவ முறையில் தான் பிரசவிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். ரூபினாவுக்கு இது மூன்றாவது பிரசவம்.
அவரது உடல் நலனைப் பரிசோதித்துப் பார்த்தபோது, எந்தவிதமான உடல் நலப் பிரச்னைகளும் இருக்கவில்லை. அவர் தகுதியானவர்தான் என்பதை உறுதி செய்தேன். பிரசவத் தேதி நெருங்கியதும் மனைவியை அழைத்துகொண்டு எங்கள் மருத்துவமனைக்கு வந்தார் ஃபாஸில்.
சுத்தமான தண்ணீர் நிரப்பப்பட்ட, 160 செ.மீ. நீளமுள்ள தண்ணீர்த் தொட்டி போன்ற கலனில் ரூபினாவை இறங்கச் சொன்னோம். அவர் தமது செளகரியப்படி தண்ணீரில் கால்களை நீட்டியும், அகல விரித்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் அமர்ந்துகொண்டார்.
பிரசவ நேரத்தில் தாய் எப்படி தன் முழு சக்தியையும் உபயோகித்து குழந்தையை வெளியே தள்ளுவாரோ, அதைப் போலவே தண்ணீரில் இருந்தபடியே ரூபினாவும் முயன்றார். அவரது வலி, உடல் வெப்பநிலையை அறிய அவ்வப்போது நாங்கள் பரிசோதித்துகொண்டே இருந்தோம். ரூபினா அமைதியான மனநிலையிலேயே இருந்தார்.
மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, அழகாக வழுக்கிக் கொண்டு வெளியே வந்தது பச்சிளம் சிசு. தொப்புள் கொடியைத் துண்டித்து, தாயிடமிருந்து குழந்தையைப் பிரித்தெடுத்த அந்த நொடி, என் வாழ்க்கையில் முக்கியமான தருணம். பெரியதாகச் சாதித்துவிட்ட உணர்வு. குழந்தையின் முகத்தைக் கண்டதும் தாயின் வலியும் நொடியில் பறந்தது.
குழந்தையை அள்ளியெடுத்து தாயின் தோளில் சாய்த்தோம். பிரசவத்தின்போது ரூபினாவின் கணவரும் உடன் இருந்ததால், மனைவியின் வலியையும், பிரசவத்துப் பிறகு அவரது முகத்தில் பரவிய அலாதி அமைதியையும் நேரடியாகக் கண்டு மனம் நெகிழ்ந்தார்.
சில நிமிடங்களில் நஞ்சுக்கொடி பிரிந்தது. ரூபினா தண்ணீர்த் தொட்டியில் இருந்து வெளியே வந்து தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றார். குழந்தையைச் சுத்தப்படுத்தி மீண்டும் தாயிடம் ஒப்படைத்தோம்.
ரூபினாவுக்குப் பிறந்த குழந்தை 3.75 கிலோ எடையுடன் இருந்தது.
நன்மைகள்:
பெண்கள் கர்ப்பம் அடைந்த உடனேயே பிரசவத்தைப் பற்றி நினைத்து நினைத்து மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். பிரசவம் என்பது வலி நிறைந்ததுதான் என்றாலும், தாங்க முடியாத அளவுக்கு கடுமையானதல்ல. அந்த வலியை இலகுவாக்கும் முறைதான், தண்ணீர் பிரசவம். தாய் நல்ல மனநிலையில் இருந்தால்தான் குழந்தைப் பிறப்பும் இலகுவாகும்.
பிரசவம் என்பது கர்ப்பிணியின் மனதுடன் நெருங்கிய தொடர்புடையது. தம்பதியினர் மனமொத்து அன்பும் காதலும் கொண்டு வாழும்போது, மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் ஹார்மோனுக்கு 'ஆக்ஸிடோசின்' என்று பெயர். இதை 'லவ் ஹார்மோன்' என்பார்கள். தம்பதிகளுக்கு இடையான
அன்னியோன்யம், நெருக்கம், குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான பாசப் பிணைப்பை
நிர்ணயிப்பது, பிரசவத்துக்கு முன்பு கருப்பையை சுருங்க- விரியச் செய்வது, குழந்தை பிறந்தவுடன் நஞ்சுக் கொடியை வெளியேற்றுவது, தாய்க்கு பால் சுரப்பைத் தூண்டுவது போன்றவற்றுக்கு ஆக்ஸிடோசின் ஹார்மோன் பெரும்பங்கை வகிக்கிறது.
தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை அதிக எடையுடன் இருந்தாலும், கருப்பையிலிருந்து வெளியே வந்துவிடும். அதனால் பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு சில அசெளகரியங்கள் இந்த வகை பிரசவ முறையில் தடுக்கப்படுகிறது.
தாயின் கருப்பையில் இருக்கும் உயிருள்ள தசைநார்கள் தையல் போல ஊடாக ஓடி ரத்த நாளங்களை இறுக்கி, அபரிமிதமான ரத்தப்போக்கைக் குறைக்கிறது. இத்தகைய பிரசவத்தால் கருப்பை சீக்கிரத்தில் சுருங்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த வகை பிரசவத்துக்கு செலவும் மிகக் குறைவுதான். பிரசவம் முடிந்ததும், தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும் கலனில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றிவிட்டு, கிருமிநாசினி கொண்டு சுத்தமாகத் துடைத்து உலர்த்தியபிறகு, அந்தத் தொட்டியை மடக்கி வைத்துவிடுவோம். பின்னர் தேவைப்படும்போது எடுத்து, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி மீண்டும் உபயோகித்துவோம்.
இந்த முறையில் பிரசவத்தை வைத்துக்கொள்ள விரும்பும் கர்ப்பிணிகள் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகள் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்தப் பிரசவம் சரியாக வராது' என்கிறார் பிரியதர்ஷினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.