'தனக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார் 'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி. அண்மையில் மறைந்த அவர் எங்களுடைய 'நல்லி' பட்டுப் புடவைகளின் பரம ரசிகை. திரைப்படங்களில் பிசியாக நடித்துகொண்டிருந்த காலகட்டத்தில் சரோஜாதேவி சென்னையில் அடையாறில் வசித்து வந்தார்.
தினமும் தி.நகர் பனகல் பார்க் வழியாகவே படப்பிடிப்புகளுக்குச் செல்வார். எங்கள் கடையைக் கடந்துச் செல்லும்போது, ஷோகேஸில் என்ன பட்டுப் புடவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூர்மையாக கவனிப்பார். அந்தப் புடவைகள் பிடித்திருந்தது என்றால், தன் அம்மாவிடம் தகவல் சொல்லிவிடுவார்.
சரோஜாதேவியின் அம்மா மறுநாளே வந்து, பட்டுப் புடவையை வாங்கிக் கொண்டு செல்வார்' என்று சரோஜாதேவியின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் 'நல்லி சில்க்ஸ்' நல்லி குப்புசாமி செட்டியார்.
அவர் பகிர்ந்துகொண்ட சுவையான விஷயங்களின் தொகுப்பு:
1990-களில் நடைபெற்ற ஒரு சம்பவம். விஜயா மருத்துவமனையில் கணுக்காலில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட சரோஜாதேவி, எனக்கு டெலிபோன் செய்து, 'நான் உங்களை சந்திக்க வேண்டும். மருத்துவமனைக்கு வர முடியுமா?' என்று கேட்டார். நான் அங்கு சென்று அவரைச் சந்தித்தேன்.
சில வருடங்களுக்கு முன்பு, படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சிறு விபத்தில் கணுக்காலில் ஒரு நூலிழை எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பெரிய பாதிப்பில்லை என்பதால் சில நாள்கள் வலிநிவாரணி எடுத்துகொள்ள வலி போய்விட்டது.
அவ்வப்போது வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மூலம் சமாளித்து வந்தார். அந்த நூலிழை எலும்புமுறிவு பிரச்னை சிக்கலாகி, அறுவை சிகிச்சை வரை கொண்டுவந்துவிட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்ததும், எலும்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன்தாஸ், 'அடுத்து மூன்று வாரங்களுக்கு நடக்கக் கூடாது' என்று சொல்லிவிட்டார்.
கால்கட்டுடன் மூன்று வாரம் சென்னையில் தங்குவதைவிட, அவர் பெங்களூரில் தன் வீட்டுக்குச் சென்று ஓய்வு எடுக்கவே விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார். 'நடக்கவே கூடாது' என்று மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லி இருக்கும் சூழ்நிலையில், சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு செல்ல முடியும்.
ஆனால், வேறு ஒரு சிக்கல் இருந்தது. சென்னை விமான நிலையக் கட்டடத்தில் இருந்து, விமானத்துக்கு நேரடியாகச் செல்வதற்கு ஏரோ பிரிட்ஜ் வசதி இருந்தது, அப்போது அந்த வசதி பெங்களூரு விமான நிலையத்தில் இல்லை. அங்கே படிக்கட்டுகள் மூலமே விமானத்துக்குச் செல்லவும், விமானத்தில் இருந்து இறங்கி வரவும் முடியும்' என்றார்.
'பெங்களூரில் நிலைமையை எப்படி சமாளிப்பது' என்று யோசித்தேன். நான் சென்னை விமான நிலைய உயர் அதிகாரியிடம் பேச, அவர் பெங்களூரு விமான நிலைய உயர் அதிகாரியிடம் பேசினார்.
அவர், பிரச்னையை சுலபமாகத் தீர்த்து வைத்தார். விமானங்களில், பயணிகளுக்கான உணவுகளை சப்ளை செய்யும் தாஜ் கேடரிங் நிறுவனம், உணவுப் பொருள்களை விமானத்தில் ஏற்றுவதற்கு லிஃப்ட் பொருத்திய ஒரு வாகனத்தைப் பயன்படுத்துவார்கள்.
பெங்களூரு விமான நிலையத்தில் அந்த லிஃப்ட்டில் சரோஜாதேவியின் சக்கர நாற்காலியை வைத்து, அவர் விமானத்திலிருந்து கீழே இறங்கிச் செல்ல அவர் ஏற்பாடு செய்துவிட்டார். சிரமமில்லாமல் பெங்களூரில் தன் வீட்டுகுச் சென்றடைந்த சரோஜாதேவி எனக்கு நெகிழ்ச்சியோடு நன்றி கூறினார்.
பெங்களூரில் செட்டிலாகிவிட்ட சரோஜாதேவி ஒரு கட்டத்தில் சென்னை வரும்போது தங்குவதற்கு ஒரு ஃப்ளாட் வாங்க வேண்டும் என என்னிடம் கூறினார். வாங்கும் ஃப்ளாட் சிவாஜி வீட்டுக்கும், நல்லி கடைக்கும் அருகில் இருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார்.
அவர் விரும்பியபடியே ஒரு நண்பர் ஒருவர் மூலமாக ஃபிளாட் வாங்குவதற்கு ஏற்பாடு செய்துகொடுத்தேன். அவர் சென்னையில் இருக்கும்போது, அவருக்கு உதவியாக இருக்கவும், அவர் இல்லாதபோது அந்த ஃப்ளாட்டை பராமரிக்கவும் எங்கள் ஊழியர் ஒருவர் மூலம் ஏற்பாடு செய்தேன்.
சென்னை வரும்போதெல்லாம், தவறாமல் 'நல்லி' கடைக்கு விஜயம் செய்வார். தனக்குப் பிடித்த புடைவைகளை வாங்கிச் செல்லுவார். கடையில் அவரைக் கண்டதும் ஏராளமான பெண் வாடிக்கையாளர்கள் அவரைச் சூழ்ந்துகொள்வார்கள்.
'நான் பலமொழிப் படங்களில் நடித்திருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு தனி பாசம் உண்டு. காரணம், அவர்கள்தான் என்னை வாழவைத்த தெய்வங்கள்!' என்று மனதாரச் சொல்லுவார் சரோஜாதேவி.
கடந்த டிசம்பரில் வந்தபோது, மிகவும் தளர்ச்சியுற்றிருந்தார். 'பயணங்களை ரொம்பக் குறைத்துவிட்டேன்!' என்று கூறினார். ஆனால் அதுவே அவரது கடைசி சென்னை பயணம்; நல்லி வருகை என்பது எனக்குத் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.