இளைஞர்மணி

விரட்டியடியுங்கள்...தீய பழக்கங்களை!

DIN

இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, நல்லது, கெட்டது என அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை. நம் வாழ்வில் இரண்டற கலந்துள்ள இந்த இயற்கை முரண்களில் நாம் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்ளும் மேலும் ஒரு முரண் நல்ல பழக்கம், தீய பழக்கம் என்பவை தான். இவைதான் தீய பழக்கம் என்று எதையும் வரையறுத்துக் கூற இயலாது. நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் எந்த ஒரு பலனும் அளிக்காது, நமது வாழ்வின் முன்னேற்றத்துக்கும், வெற்றிக்கும் எவையெல்லாம் தடையாய் இருக்கின்றனவோ அவை அனைத்தும் தீய பழக்கங்கள்தாம்.
நமது ஒவ்வொரு வெற்றியிலும் பெரும்பான்மையான பங்கு வகிப்பது, அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களேயாகும். "காலை எழுந்தவுடன் படிப்பு, மாலையில் விளையாட்டு' என்று இயற்கையோடு இயைந்த நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும் மாணவனுக்கு கல்வி முதல் கலை வரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவது எளிதே. அதே வேளையில், எந்த நல்ல பழக்கத்தையும் கற்காது, தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் மாணவர்கள் தாமும் சீரழிந்து, சக நண்பர்களையும் சீரழிப்பது வாடிக்கையாகி வருகிறது.
நம்மைச் சுற்றியுள்ள நபர்களில் எத்தனை பேர் முகநூல்(பேஸ்புக்), கட்செவி அஞ்சல்(வாட்ஸ் ஆப்) போன்றவற்றின் ஆதிக்கம் இல்லாமல் இருக்கிறார்கள்? எத்தனை பேர் சரியான நேரத்துக்கு தூங்கி, சாப்பிட்டு, எழுகிறார்கள்? இவர்கள் இந்த தீய பழக்கங்களில் இருந்து விடுபட முயற்சிக்கும் முன்னரே இந்த பழக்கங்கள் அவர்களை இறுக்கமாகப் பற்றிக் கொள்கின்றன. நமக்கு தீயதை விளைவிக்கும் இந்த பழக்கங்களை விட்டொழிப்பது எவ்வாறு?
மாற்றம் ஒன்றே மாறாதது
இந்த உலகத்தில் எதையும் மாற்ற முடியாது என்று இல்லை. நாம் திருத்த நினைக்கும் தீய பழக்கங்கள் அனைத்தையும் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக மாற்றி புதிய மனிதராக மாற வேண்டும். நாம் மாற வேண்டியதன் அவசியத்தை முதலில் கவனிக்க வேண்டும். அதன் பின்னர் நமது வாழ்க்கைக்கு இந்த மாற்றம் மிக அவசியம் என்பதை ஆழ்மனதுக்குள் எப்போதும் அசைப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் ஒரு நாள் இந்த தீய பழக்கங்கள் நம்மை விட்டு விலகும்.
மனதில் மாற்றம் தேவை
"தீய பழக்கங்களை விட்டொழிப்பதற்காக, நல்ல பழக்கங்களைப் பின்பற்றுங்கள். சரியாகிவிடும்' சிலர் என்று அறிவுரை வழங்குவார்கள். ஆனால் அது பலனளிக்காது. ஏனெனில் நாம் கைவிட்ட தீய பழக்கம் ஒரு சில நாள்களிலேயே நம்மை மீண்டும் எளிதாக பற்றிக் கொள்ளும். அதனால் உடனடியாக அனைத்தும் சரியாகும் என்றிருக்காமல், மனதை மாற்றினால் மட்டுமே அனைத்தும் சரியாகும் என்று புரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.
துன்பத்துக்கு எதிராகப் போராடு
இந்த வாழ்க்கை நமக்கு எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே அளித்துக் கொண்டிருக்காதுதான். சில போராட்டம் மிகுந்த, விரக்தியளிக்கும் காலகட்டத்தை நம் அனைவரும் சந்திக்க நேரிடும். அதற்காக பயந்து தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்வை நழுவ விட்டுவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடி வெற்றி பெற வேண்டும். நேரத்துக்கு சத்தான உணவு, அமைதி, பொறுமை தரும் பயிற்சி, நல்லன கற்பிக்கும் புத்தகங்களை வாசிப்பது என நம்மை நல்ல பழக்கங்களுக்குள் முழுவதுமாகப் புகுத்திக் கொள்ள வேண்டும். அதன்மூலம் துன்பமான காலகட்டத்தை கடந்து வரலாம்.
எதிர்காலம் குறித்த சிந்தனை
தீய பழக்கங்களில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பவர்கள், எதிர்காலம் குறித்த சிந்தனைகளில் தங்களை ஆழ்த்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது, எதிர்காலத்தின் வாழ்க்கை முறை நமக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தும். நம்மை பிறர் முன்னோடியாகப் பார்க்கும் அளவுக்கு நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். அப்போது தானாக நமது தீய பழக்கத்தை விட வேண்டிய நிலை வந்து விடும்.
திட்டமிடல்
அனைத்து நல்ல பழக்கங்களையும் ஒரே சமயத்தில் செய்ய முயற்சிக்கக் கூடாது. ஒவ்வொன்றிற்கும் சரியான நேரம் ஒதுக்கி, அதன்படி செலவிட வேண்டும். வீடு கட்ட வேண்டும், எதிர்காலத்துக்கு பணம் சேமிக்க வேண்டும் என்று நமது அனைவருக்கும் எதிர்காலம் குறித்து நிறையக் கனவுகள் இருக்கும். ஆனால் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய விரும்பினால் அது வெற்றியைத் தராது, முதலில் எளிதானதை முடித்துவிட்டு அதன்பின்னர் மற்றவற்றைத் தொடங்க வேண்டும். அதுபோல தான் நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்வதும். ஒவ்வொன்றுக்கும் சரியான நேரம் ஒதுக்கி, சரியான பழக்க வழக்கங்களைப் பின்பற்றினால் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்வதாயினும் சரி, தீய பழக்கங்களை விட்டொழிப்பதாயினும் சரி நமக்கு கிடைக்கப்போவது நற்பயன்களே என்பதை உணர வேண்டும்.
நல்ல பழக்கங்களைத் தேடிப் பெற்று, சரியான நேரத்தில் முறையாக காலந்தவறாது பின்பற்றி வந்தால் தீய பழக்கங்களால் நம்மை நெருங்கவும் முடியாது. நம் வெற்றியைத் தட்டிப் பறிக்கவும் முடியாது.
- க. நந்தினி ரவிச்சந்திரன்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT