கிணற்றின் அடிப்பகுதியில் உள்ள தவளையைப் போல, நாம் மிகவும் சிறிய அளவே சிந்திக்கின்றோம்.
-- மாவோ
வாழ்வில் எதையுமே பெரிதாக, புதிதாக அல்லது அர்த்தமுள்ளதாகச் செய்யாமலேயே தங்கள் காலத்தை முடித்துகொள்ளும் பலருக்கு அவர்களது உடல் உறுப்புகளிலேயே எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது அவர்களது நாக்குதான். அவர்கள் நாக்கு ஏன் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறது? அவர்கள் செய்த... செய்துகொண்டிருக்கின்ற செயலுக்கு, இல்லாத ஒரு காரணத்தை தடாலடியாக சொடுக்கு போடும் நேரத்திற்குள் சொல்வதற்காக. தீர்மானிக்கப்பட்ட பல காரியங்கள், பல நேரங்களில், பலரது வாழ்வில்... ஒன்று, மிகத் தாமதமாக நடக்கும் அல்லது நடக்காமலேயே போய்விடும். அதற்கு காரணம், சம்பந்தப்பட்டவர்கள் எடுத்த காரியத்தில் உறுதியும், ஈடுபாடுமின்றியும் இருப்பதுதான். பூமிதான இயக்கத்தின் முன்னோடியும், காந்தியவாதியுமான வினோபாபாவே சொல்கிறார்: ""காரணம் சொல்பவர்கள் காரியம் செய்வதில்லை; காரியம் செய்பவர்கள் காரணம் சொல்வதில்லை'' என்று. இது எவ்வளவு பெரிய உண்மை.
ரிச்சர்டு டென்னி அவர் எழுதிய வெற்றி பெற முயற்சி செய் (ஙர்ற்ண்ஸ்ஹற்ங் ற்ர் ஜ்ண்ய்) என்கிற நூலில் ""நொண்டிச் சமாதானங்களைத் தவிர்த்துத் தீவிர முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கே வெற்றி நிச்சயம்'' என்கிறார்.
அவர் மேலும் தமது நூலில், வெற்றியாளரின் மனோபாவமும், தோல்வியாளரின் அவநம்பிக்கைச் சிந்தனைகளும் எப்படியெல்லாம் வேறுபடுகின்றன என்பதை எளிய வார்த்தைகளில் நமக்குப் புரிய வைக்கிறார்.
வெற்றிபெற்றவன் எப்போதுமே அவன் செய்த தவறுகளை, பிழைகளை அவனே செய்ததாக ஒத்துக்கொள்கிறான். ஆனால், தோல்வியாளனோ, எதுவுமே அவனது பிழையில்லை என்று சாக்குபோக்கு சொல்கிறான்.வெற்றியாளன் கடுமையாக உழைக்கிறான். அவனுக்கு நிறைய நேரமும்இருக்கிறது. ஆனால், தோல்வியாளன் எப்போதும் அவனுக்கு நேரமே இல்லையெனக் காரணம் சொல்லி தோல்வி காண்கிறான்.
வெற்றியாளன் பிரச்னைகளினூடே ஊடுருவிச் சென்று, அதன் மத்தியில் நின்று பகுத்தாய்ந்து சிக்கலைத் தீர்க்கின்றான். தோல்வியாளன் நகராமல்... நிற்கின்ற இடத்திலயே நின்றுகொண்டு, பிரச்னையை மட்டும் சுற்றிச் சுற்றி வருகிறான்.
வெற்றியாளன் நடந்துவிட்ட தவறுக்கு வருந்துகிற குணம் கொண்டவனாகயிருக்கிறான். தோல்வியாளனோ நடந்துவிட்ட தவறை அவனுக்கு தொடர்பில்லாததைப் போல தவிர்க்க முயற்சித்துக்கொண்டே... மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கின்றான்.
தன்னை எப்போதுமே திறமையானவனாகக் கருதும் வெற்றியாளன், மேலும்... மேலும் தனது திறமையை வளர்த்துக் கொள்கிறான். ஆனால், தோல்வியாளனோ தான் மற்றவர்களை விட ஒன்றும் மோசமானவன் இல்லை என்று ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வை நகர்த்துகிறான்.
முன்னே பார்த்து முன்னேறுகிற வேலையை வெற்றியாளன் செய்ய, தோல்வியாளனோ தனக்கு கீழே உள்ளவர்களைப் பார்த்து கர்வம் கொள்கிறான்.
தனக்கும் மேலே உள்ளவர்களை -- மேலதிகாரிகளை -- வெற்றியாளன் மதித்து, அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை கற்றுக் கொள்கிறான். நான் தோற்கப் பிறந்தவன் என்று சூளுரைத்து வாழ்பவனோ... அவனது மேலதிகாரிகளை வெறுத்து, அவர்களிடம் குறைகளையே காண்கிறான்.
ஒவ்வொரு துயரத்திலும், பின்னடைவிலும் நல்ல வாய்ப்புகளை வெற்றியாளன் கண்டுகொள்ள... தோல்வியாளனோ தன் வாயினிக்கப் பேசுவதற்கு நல்ல காரணங்கள் கிடைத்தன என்று மகிழ்ந்து சிக்கலை பெரிதாக்குகின்றான்.
எது குறித்துப் போராட வேண்டும்? எந்த விஷயத்தில் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிந்தவன் வெற்றியாளன். சமாதானமாக போகவேண்டிய இடத்திலெல்லாம் சண்டையும், சண்டை செய்ய வேண்டிய இடத்திலெல்லாம் ஒதுங்கி நின்று இழப்பும் ஏற்படுத்திக் கொள்வது, தோல்வியாளனின் வழக்கமாக இருக்கிறது.
வாழ்க்கை எனும் போராட்டத்தில் காரணம் சொல்லாமல், மன அழுத்தமின்றி போராடுவதை ஆனந்தமாகச் செய்யாமல்... அற்ப விஷயங்களில் நேரத்தை வீணாக்கி போராட விருப்பமின்றி தப்பிக்கின்ற காரணங்களை தேடுபவர்களுக்கு என்றுமே இல்லை விமோச்சனம்.
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையிலிருந்தால்... உதிர்ந்த பூக்களும் வந்து ஒவ்வொன்றாய் ஒட்டிக்கொள்ளும்' என்கிறார் கவிஞர் மு.மேத்தா. காரணம் சொல்லாமல் காரியம் பார்ப்பவர்களுக்கு இந்த நம்பிக்கை என்னும் நார் நிறையவே இருக்கிறது.
முயற்சி திருவினையாக்கும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் சொன்னதின் பொருள், முயற்சியும் பயிற்சியும் கொண்டு தன்னம்பிக்கை என்னும் திறவுகோலால், வெற்றியெனும் கதவினைத் திறக்கலாம் என்பதே. இங்கு தன்னம்பிக்கையின்றி, உழைக்கவும் விருப்பமின்றி..... காரணங்களைத் தேடுபவர்களுக்கு வெற்றியாளனாக வானம்பாடியென வானில் பறக்கின்ற வாய்ப்பு எப்படிக்கிடைக்கும்?
நம் நாக்கிலிருந்து காரணங்கள் வெளிப்படும் ஒவ்வொரு தருணத்திலும், நாம் எல்லோரும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, காரணம் சொன்னேனே... காரியம் செய்தேனா? என்பதாகயிருக்கட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.