முகப்பு
இளைஞர்மணி

எருக்கம் செடி துணி!

உலகின் குளிர் அதிகமுள்ள பகுதிகளில் பயன்படுபவை கம்பளியால் செய்யப்பட்ட போர்வைகள்... ஆடைகள். தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் குளிர்காலத்தில் கம்பளித்துணி அதிகம் பயன்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

உலகின் குளிர் அதிகமுள்ள பகுதிகளில் பயன்படுபவை கம்பளியால் செய்யப்பட்ட போர்வைகள்... ஆடைகள். தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் குளிர்காலத்தில் கம்பளித்துணி அதிகம் பயன்படுகிறது. செம்மறி ஆட்டின் முடியிலிருந்து கம்பளி தயாரிக்கப்படுகிறது.

"விலங்குகள் உரிமை' பாதுகாவலர்களால் அவ்வப்போது கம்பளிக்கு எதிர்ப்பும் கிளம்புகிறது.

விலங்குகளின் முடியில், தோலில் இருந்து செய்யப்படாத புதுவிதமான கம்பளி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் கெளரிசங்கர். இந்த புதுவிதமான கம்பளி, வழக்கமான கம்பளியை விட அதிகக் குளிரைத் தாங்கும் திறன் பெற்றதாகவும் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையத்தில் வசிப்பவர்தான் கெளரிசங்கர். அவர் உருவாக்கியிருக்கும் புதுவிதமான கம்பளி, எருக்கம் செடி இழையிலிருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து கெளரிசங்கரிடம் கேட்டோம்:

""எனது சொந்த ஊர் ஆரணி அருகே உள்ள ஒண்ணுபுரம். பாரம்பரியமான நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். பி.எஸ்ஸி ஹோம்சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி எல்லாம் படித்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் இன் டூரிஸம் என்ற முதுகலைப் பட்டமும் பெற்றேன். என்றாலும் எனக்குள் நெசவு தொடர்பான சிந்தனைகளே ஓடிக் கொண்டு இருந்தன.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஃபேஷன் இன்டஸ்ட்ரி சார்ந்த ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு துணிகளுக்குச் சாயம் தோய்ப்பதைப் பார்த்தேன். அங்கே நடக்கும் வேலைகளைப் பார்க்கும்போது மனது வலித்தது. எல்லா வேலைகளும் சுற்றுச்சூழலைப் பாதிப்பவையாக இருந்தன. ரசாயனக் கழிவுகள் மண்ணில், நீரில் கலக்கப்பட்டன.

எந்தவிதமான நச்சுக்கழிவுகளுமற்ற, சுற்றுச்சூழலைப் பாதிக்காத துணி வகையை நாம் உற்பத்தி செய்தால் என்ன? என்று எனக்குத் தோன்றியது.

எருக்கம் காய் வெடித்து அதிலிருந்து கிளம்பும் ஒரு விதையைச் சுற்றியுள்ள இழைகளினால், விதை பறந்து இன்னோர் இடத்தில் விழுந்து புதிய எருக்கம் செடி முளைக்கிறது. எருக்கம் விதையைச் சுற்றியுள்ள இழையை எடுத்துப் பார்த்தேன். அது வலிமையானதாக இருப்பது தெரிந்தது. எருக்கம் காயிலிருந்து கிடைக்கும் இழைகள், எருக்கம் செடியின் தண்டிலிருந்து கிடைக்கும் இழைகள் என இரண்டுவிதங்களில் எருக்கம் இழைகள் கிடைக்கின்றன. அது தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் எருக்கம் செடியின் இழைகளை நூலாக்கி அதிலிருந்து துணிகளைத் தயாரிக்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நம்நாட்டில் எருக்கம் செடிகள் எங்கும் தாமாகவே முளைத்து வளர்கின்றன. அதை யாரும் வளர்ப்பதில்லை. குறிப்பாக வறண்ட பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. தண்ணீரில்லாமல் தரிசாகக் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இந்த எருக்கம் செடிகளை வளர்த்து, அவற்றின் மூலம் கிடைக்கும் இழைகளை வைத்து, துணிகளைத் தயாரிப்பது சாத்தியம்தான் என்று நினைத்தேன்.

எருக்கம் செடி விதைகளின் மூலமாகப் புதிய செடிகளை உருவாக்கலாம். அதன் தண்டை ஒடித்து இன்னோர் இடத்தில் நட்டாலும் அது முளைக்கும். எனவே எருக்கம் செடி விவசாயம் செய்வதும் எளிது. மேலும் எருக்கம் செடியை வளர்க்கும் பகுதிகள் பிற மரங்களை வளர்க்கலாம்; கம்பு, சோளம், கேழ்வரகு ஆகியவற்றை ஊடு பயிராகவும் வளர்க்கலாம். இதனால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும்.

1 ஏக்கர் நிலத்தில் எருக்கம் செடிகளைப் பயிரிட்டு வளர்த்தால், அவற்றின் காய்களில் இருந்து 350 கிலோ காய் பஞ்சும், 500 கிலோ தண்டு பஞ்சும் கிடைக்கும் என்பது ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே துணிச்சலாக 2015 -இல் "ஃபேபோர்க்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.

இந்த எருக்கம் இழைகளிலிருந்து உருவாக்கப்பட்ட நூல்களை திருப்பூரில் எனக்குத் தெரிந்த ஒரு நண்பரிடம் கொடுத்து நெய்து பார்க்கச் சொன்னேன். பருத்தி நூலை வைத்து நெய்வதைப் போல எளிதாகவே அது இருந்தது. தற்போது 70 சதவீதம் பருத்தி நூலையும், 30 சதவீதம் எருக்கம் நூலையும் வைத்து துணியை நெய்கிறோம். இது கம்பளியை விட அதிகம் குளிர்தாங்கும் தன்மையுடன் இருக்கிறது. எருக்கம் நூலின் அளவைத் துணியில் அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.

இதற்கு அடுத்த பிரச்னை, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் இந்தத் துணிக்கு சாயம் தோய்ப்பது. எந்தவிதமான ரசாயனப் பொருள்களையும் கலக்கக் கூடாது என்பதால், மஞ்சள் நிறத்துக்கு கடுக்காய்த்தூளைப் பயன்படுத்துகிறோம்.

இப்படி எருக்கம் செடியிலிருந்து இழைகளைப் பிரித்தெடுக்கும் நிகழ்வின்போதும், எருக்கம் நூல் துணிக்குச் சாயம் தோய்க்கும்போதும் ஏற்படும் கழிவுகள் மண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உரமாக மாறுகின்றன. அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பூச்சிக்கொல்லி மருந்தும் இதிலிருந்து கிடைக்கிறது. அப்படி நாங்கள் உருவாக்கியதுதான் "ஆர்கா' எனப்படும் பூச்சிக் கொல்லி மருந்து.

ஓர் ஏக்கர் நெல் விளையும் நிலத்துக்கு இந்த பூச்சிக் கொல்லி மருந்து ஒன்றரை லிட்டர்தான் தேவைப்படும். மொத்தமே நூறு ரூபாய்க்குள் தான் செலவாகும். வழக்கமான - சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தை அடிக்க வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும். நாங்கள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தால் விவசாயிகள் லாபமடைவார்கள். இதுவரை எங்கள் பூச்சிக்கொல்லி மருந்து 6 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்குப் பயன்பட்டிருக்கிறது.

நாங்கள் தயாரிக்கும் எருக்கம் செடி துணிகளுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகிவற்றில் நல்ல வரவேற்பு உள்ளது. ஜெர்மனியின் இன்ஃபேன்டியம் விக்டோரியா, பிரிட்டனில் உள்ள பேட்ரிக் மெக்டோவெல் ஆகிய ஆடை மற்றும் இதர பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எங்களுடைய எருக்கம் செடி துணிகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். நான் எருக்கம் செடி துணிக்கு காப்புரிமையும் பெற்றிருக்கிறேன். எருக்கம் செடி துணி என்பது ஒரு புதிய முயற்சிதான்.

இந்தத் தொழிலில் இறங்கினால் இழப்பு ஏற்படும் என்று எல்லாரும் சொன்னார்கள். நான் பயந்திருந்தால், இந்த அளவுக்கு இதை வளர்த்திருக்க முடியாது.

ஒரு முயற்சியில் இறங்கும்போதுதான் புதியனவற்றை நாம் கற்றுக் கொள்ள முடியும். புதிய மாற்றங்களை உருவாக்க முடியும். இளைஞர்கள் எதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →