ரூ. 5 கோடி... பறக்கும் பைக்!
சாலைப் போக்குவரத்து நெரிசல்களைக் கண்டு வருவதால், வான்வழி போக்குவரத்தை வருங்கால போக்குவரத்து அம்சமாக மாற்ற பிரபல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து வருகின்றன.
சாலைப் போக்குவரத்து நெரிசல்களைக் கண்டு வருவதால், வான்வழி போக்குவரத்தை வருங்கால போக்குவரத்து அம்சமாக மாற்ற பிரபல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து வருகின்றன.
தற்போதைக்கு சிறு பொருள்களைக் கொண்டு செல்லப் பயன்படும் குறைந்த செலவிலான டிரோன் சேவையை, போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் பல நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டியில், ஜப்பானைச் சேர்ந்த ஏ.எல்.ஐ. தொழில்நுட்ப நிறுவனம் பறக்கும் பைக்கை (ஹோவர் பைக்) உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், விற்பனைக்கும் அறிவித்து சாதனை படைத்துள்ளது.
ஒருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் வழக்கமான பைக்கைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பைக் 300 கிலோ எடை கொண்டது.
பைக்கின் கீழே முன்பும், பின்பும் இரண்டு பெரிய ஃபேன்களுடனும், அதன் நான்குபுறங்களிலும் சிறிய ஃபேன்களும் உள்ளன. வழக்கமான எரிபொருளில் இயங்கும் என்ஜின் கொண்ட இந்த பைக்கில் நான்கு பேட்டரி மூலம் இயங்கும் மோட்டார்கள் உள்ளன. இவை வானிலேயே பைக் நிலைத்து நிற்க உதவுகின்றன. இதன் மூலம் மணிக்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பைக்கை இயக்கலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் உள்ள ஃபிஜி மலைப் பகுதியில் இந்த பறக்கும் பைக்கின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சாதாரண டிரோனைப்போல் பறந்து சென்று மீண்டும் தரையிறங்கியது இந்த பறக்கும் பைக். இதன் விலை 5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்
பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் 200 பறக்கும் பைக்குகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஜப்பானில் வான்வழி போக்குவரத்துக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் உள்ளதால், இந்த பைக்குகள் தற்போதைக்கு நீர்ப் பகுதிகளில் சிக்கியவர்களுக்கும், போக்குவரத்தில் சிக்கிய நோயாளிகளுக்கும் உதவ பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.