இளைஞர்மணி

தேர்ந்தெடுங்கள்... பணியாளர்களை!

தொழிற்சாலை அமைப்பதற்கு நிலத்தைக் கண்டறிந்து, கட்டடம் கட்டி, நவீன இயந்திரங்கள், கருவிகளைப் பொருத்தி, மூலப்பொருட்களை கொண்டு வந்து சேர்த்தாலும், வேலை செய்வதற்கு சரியான பணியாளர்கள் இல்லாவிட்டால்

ந.முத்துமணி


தொழிற்சாலை அமைப்பதற்கு நிலத்தைக் கண்டறிந்து, கட்டடம் கட்டி, நவீன இயந்திரங்கள், கருவிகளைப் பொருத்தி, மூலப்பொருட்களை கொண்டு வந்து சேர்த்தாலும், வேலை செய்வதற்கு சரியான பணியாளர்கள் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாது. மூலப்பொருட்கள், நிலம், கட்டடம், இயந்திரங்கள், கருவிகளை போல வேலை செய்வதற்கு ஆட்கள் அவசியம். ஒரு நிறுவனத்திற்கு தேவையான, தகுதியான, திறமையான, புதுமையான வேலையாட்களை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான பணியல்ல. அதற்கு கணிசமான நேரத்தையும், பணத்தையும் செலவழிக்க நேரிடும். 

இளைஞர்களாகிய நீங்கள் ஒரு நிறுவனத்தில் மனிதவள மேலாண்மைப் பிரிவில்  வேலைக்குச் சேர்ந்தீர்கள் என்றால் அங்கே நிறுவனத்துக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.  அது தொடர்பான செயல்முறைகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. 

தேவையை அறிவோம்:

உங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு எப்படிப்பட்ட ஆள்தேவை? என்னென்ன தகுதிகள் கொண்டவராக இருக்க வேண்டும்? எந்தவகையான திறமைகள், கல்வித் தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்? என்பதை முதலில் வரையறுத்துக் கொள்வது அவசியம். இதை துல்லியமாக முடிவு செய்து விட்டால், ஆள்சேர்ப்பு செயல்முறை சீராக திட்டமிடப்படுகிறது என்று அர்த்தம். வேலைக்குத் தகுதி பெறும் நபர், தனக்கு அளிக்கப்படும் பணி, அதன் தன்மை, இலக்குகள், நோக்கங்கள், முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்ந்தவரா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தேர்வுபெறும் வேலையாளுக்கு அளிக்கப்படும் கடமைகள், பொறுப்புகள் எவை? 

பரந்துபட்ட வணிக கட்டமைப்பில் இவரது பங்களிப்பின் முக்கியத்துவம் என்ன?
வேலைத்தன்மைகள், எதிர்பார்ப்புகள்:

நாம் அளிக்கும் வேலையின் தன்மையை விளக்கி கூறி, எப்படிப்பட்ட வேலையாளை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தும் போது, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறும். வேலைக்குச் சேர விரும்புவோர், வேலையின் தன்மையைத் தெரிந்து கொள்ள விரும்புவது இயல்பு. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களையும், தேவைப்படும் ஆவணங்களையும் பெற நேர்ந்தால், அவர்களில் தகுதியான ஆளை சேர்ப்பது எளிது.  ஆள்சேர்ப்பின் அடுத்தக்கட்டத்திற்கும் செல்ல முடியும். 

ஆண்டாண்டுகாலமாக, வேலையில் மட்டுமே கவனம் செலுத்திய நிறுவனங்கள், வேலையாளை பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டனர். நிறுவனத்தின் செல்வாக்கு மற்றும் பண்பாட்டுக்கு இணக்கமானவரை வேலைக்கு சேர்த்துக்கொள்வது நல்லது. அங்கு தான் எப்படிப்பட்ட தன்மை கொண்டவரை பணியாளராக சேர்த்துக்கொள்ள போகிறோம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

விளம்பரதளங்கள்:

வேலைக்கு ஆள்சேர்ப்பது தொடர்பான விளம்பரங்களை எந்த ஊடகத்தில் வெளியிடுவது என்பது முக்கிய மானதாகும். நிறுவன ஊழியர்களிடையே பகிர்வதா? சமூக வலைதளங்களில் விளம்பரப் படுத்துவதா? ஆள்சேர்ப்பு நிறுவனத்தின் உதவியை நாடுவதா?  என்பதில் நாம் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.

வேலை தேடுபொறிகளில் விளம்பரம் செய்தால் காலியாக இருக்கும் பணியிடங்கள் குறித்து தேடுபொறியில் பதிவு செய்திருக்கும் ஆயிரக்கணக்கான வேலைதேடுவோருக்கு உடனடியாக தகவல் தெரிந்துவிடும். ஆனால் அதில் பிரச்னை உள்ளது.  நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து சேரலாம். தகுதியில்லாதவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது, ஆள்சேர்ப்புக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க 74 கோடி உறுப்பினர்களை கொண்ட "லிங்க்டு இன்' சமூகவலைதளம் தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு தகுதியானவர்கள், திறமையானவர்கள், அனுபவம்வாய்ந்தவர்களை எளிதாகக் கண்டறிய முடியும். 

ஆள்சேர்ப்பு நிறுவனங்களின் மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க விரும்பினால்  நல்ல ஆள்சேர்ப்பு நிறுவனத்தைத் தேர்ந் தெடுக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் ஆய்வு:

வேலைவிவரங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் பணியாளர்களின் இயல்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைக் கூர்ந்து ஆய்வுக்குட்படுத்துவது முக்கியம். 100 விண்ணப்பங்களை ஆராய்ந்த பிறகு, தகுதியானவரைக் கண்டு பிடித்துவிட்டதைக் கொண்டாடாமல் இருக்கமாட்டீர்கள். எவ்வளவு கடினமாக தயாரிக்கப்பட்ட வேலை விவரங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளின் பட்டியலாக இருந்தாலும், அதற்கேற்ற விண்ணப்பதாரர்கள் கிடைப்பார்கள். ஒருசில நேரங்களில் சில தளர்வுகளை அனுமதிப்பது, ஆள்சேர்ப்பு நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும்.

நேர்காணல் நடத்துவது:

எல்லா விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, தகுதியானவர்களை மட்டும் நேர்காணல்களுக்கு அழைக்க வேண்டும். ஆள்சேர்ப்பின் மிகமுக்கியமான பகுதி நேர்காணல் நடத்துவதாகும். விண்ணப்பதாரர்களை நேரடியாகச் சந்தித்து, எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தவாறு இருப்பதை உறுதி செய்ய நல்ல வாய்ப்பாக அது அமையும். நேர்காணல்களை நடத்துவதற்கு முன் தயாரிப்பு அவசியமாகும். 

விண்ணப்பங்களில் இருந்து ஒருசில அம்சங்களை சுட்டிக்காட்டி கேள்விகளை வகுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட வேலைக்கு தகுதியான ஆளுக்கான இயல்புகள் இருக்கிறதா? என்பதை கவனத்தில் கொள்ளலாம். புதிய காணொலி தொழில்நுட்பத்தின் வழியாகவும் நேர்காணல்கள் நடக்கின்றன.

விண்ணப்பங்களை முழுமையாக ஆராய்ந்தால், எப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பலாம் என்பது புலப்படும்.  வேலை சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேட்க வேண்டும்.  

ப்பந்தம், நியமன ஆணை:

நேர்காணல்களில் தேர்ந்தெடுக்கப்படும் பட்டியலில் இடம் பெற்றோரின் சான்றாதாரங்களை ஆராய வேண்டும். விண்ணப்பதாரரின் பின்புலத்தை ஆராய்வது நல்ல வேலையாளை தேர்ந்தெடுக்க உதவும். வேலைக்கு சேர்க்கப்படும் ஆள் தகுதியானவர் மட்டுமல்ல, நம்பகத்தன்மை கொண்டவர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நிறுவனத்தின் நலனுக்கு நல்லது. சான்றாதாரங்கள் சரியாக இருந்தால், நிறைவான மனதுடன் தகுதியானவருக்கு வேலையை வழங்கி, ஒப்பந்தம் செய்து கொண்டு, பணி நியமன ஆணையை வழங்கலாம்.  

புதியவரைத் தகுதியாக்குங்கள்:

நிறுவனத்தின் கட்டமைப்பு, சக ஊழியர்களைப் புரிந்து கொள்ளாதநிலையில், புதிய இடத்தில் வேலைக்குச் சேரும் புதியவருக்கு எல்லாம் புதிதாகவே இருக்கும். புதிய பணியாளர் நிறுவனச் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நிறுவனத்தின் பண்பியல்புகள், கட்டமைப்பு, 

சாதனைகள், நோக்கங்கள் உள்ளிட்டவற்றை விளக்கி கூறி, நிறுவனம் பற்றிய மதிப்பை உயர்த்தி காட்டுவது வேலையாளின் இறுக்கத்தை குறைக்கும். 

புதியவர்கள் சேர்ந்து ஒருமாதம் கழித்து, நிறுவனம் பற்றிய அவர்களின் கருத்துகளை கேட்டறியலாம். இது சீரான பாதையில் நிறுவனத்தோடு பயணிக்க அவருக்கு உதவியாக இருக்கும். ஆள்சேர்ப்பு செயல்முறை எளிதானதல்ல என்றாலும், இதுவரை தெரிவித்த முறைகளைக் கையாண்டால், நமக்கு தேவையான ஆளை எளிதில் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இது நிறுவனத்தின் நேரம், செலவுகளை மிச்சப்படுத்துவதோடு, நிறுவனத்தை வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்லும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT